
பட மூலாதாரம், SSTA
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,000 இடைநிலை ஆசிரியர்கள், ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி, கடந்த ஒரு வாரமாக ,சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அரசாங்கம் நடத்தும் எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பதாகவும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களில் ஜூன் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் இருந்தவர்களுக்கும், அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளம் வித்தியாசமாக வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கியது எப்படி?

பட மூலாதாரம், SSTA
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 20,000 ஆசிரியர்கள் 2009இல் மே 31ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்டவர்கள்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுகிறது. அதாவது 2009இல் ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.
சமமான வேலை மற்றும் ஒரே விதமான பதவியை வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே வித்தியாசமான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், 2009 ஜூன் மாதத்திற்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட 20,000 ஆசிரியர்கள் இந்த ஊதிய முரணை சரிசெய்ய வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்து போராடி வருகின்றனர்.
அடிப்படை சம்பளத்தைப் பொறுத்துதான், அகவிலைப்படி உயர்வும் அதிகரிக்கும் என்பதால், ஆறு மற்றும் ஏழாவது ஊதிய கமிஷனின் வரைமுறைப்படி, அகவிலைபடி உயர்த்தப்பட்டபோதும், ஜூன் 2009இல் பணியில் சேர்ந்தவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் மையப்புள்ளி.
கடந்த 2009 முதல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்த நேரத்திலும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 2022இல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நிதித்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட மூன்று நபர்கள் கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரச்னை தீர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
ஆனால் இதுவரை அந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘மு.க.ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’

பட மூலாதாரம், SSTA
தற்போது 14ஆம் ஆண்டில் அதே கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கியது. கடந்த செப். 28ஆம் தேதி முதல், 7,000 இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிகளைப் புறக்கணித்து சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் சிறுசிறு குழுவாகப் பிரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் குழுவாகச் சேர்ந்து உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சுமார் 300 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கீதா, ”சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்துகிறோம் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். கடந்த அதிமுக ஆட்சியின்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், எங்களை நேரடியாகச் சந்தித்தார். அதிமுக எந்தவித உதவியும் எங்களுக்கு செய்யாது என்றும், திமுக பதவி ஏற்றதும் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை,” என்றார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?

பட மூலாதாரம், SSTA
தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடைபெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது ஏன் என ஆசிரியர்களிடம் கேட்டோம்.
”நிதிசார்ந்த பிரச்னை என்பதால் உடனே தீர்க்க முடியாது. ஊதிய முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கமிட்டி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ததும், பிரச்னை தீர்க்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எங்களிடம் கூறினார்.
ஆனால் அந்த மூவர் கமிட்டி அறிக்கை தருவதற்கு மூன்று மாதங்கள் காலக்கெடு வைத்திருந்தார்கள். தற்போது மீண்டும் அந்தக் குழு அறிக்கை தரட்டும் என்கிறார் அமைச்சர். இதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது?
இந்த முறை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் தேதியைச் சொன்னால்தான் நாங்கள் போராட்டத்தை நிறுத்தவோம்,” என்கிறார் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட்.
அமைச்சரின் பதில் என்ன?
ஆசிரியர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லபட்டு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் வார்த்தை நம்பிக்கை தரவில்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், SSTA
இடைநிலை ஆசிரியர்கள் சந்திக்கும் ஊதிய முரண்பாடு குறித்து விளக்கம் கேட்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்புகொள்ள பலமுறை தொலைபேசி வாயிலாக முயன்றோம். ஆனால் பலன் இல்லை. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் பலன் இல்லை.
ஆசியர்களின் தொடர் போராட்டம் குறித்து கடந்த புதன் அன்று(அக்டோபர் 4) ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திவிட்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.
”இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பற்றிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டி, மூன்று மாத காலத்திற்குள் பரிந்துரைகளை அளிக்கும். அவை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.
இதை ஏற்று வேலை நிறுத்தத்தை ஆசிரியர்கள் கைவிட்டு, அரசாங்கம் நடத்தும் முக்கியமான பயிற்சியான ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியில் பங்குபெற வேண்டும். பயிற்சியை முடித்து பணிக்குத் திரும்ப வேண்டும்,” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ள வேண்டாம், போராட்டம் மூலமாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்