சந்திரயான்-3 ரோவர்: வெறும் 26 கிலோ எடையுள்ள இஸ்ரோவின் குழந்தை நிலவில் என்ன சாதிக்கும்?

சந்திரயான்-3 ரோவர்: வெறும் 26 கிலோ எடையுள்ள இஸ்ரோவின் குழந்தை நிலவில் என்ன சாதிக்கும்?

சந்திரயான்-3: வெறும் 26 கிலோ எடை, 6 கால்கள் - இந்த ரோவர் நிலாவில் என்னவெல்லாம் செய்யும்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

சந்திரயான்-3 விண்கலத்தின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடையுள்ள இந்தச் சிறிய ரோவர்தான் முக்கியமான ஆய்வுகளை நிலாவில் செய்யப் போகிறது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறும் ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நிலவில் என்ன செய்யப் போகிறது?

அதுகுறித்த தகவல்களை இஸ்ரோ அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.

இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.

அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும்.

விக்ரம் லேண்டர் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்யும்?

விக்ரம் லேண்டர் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்யும்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

விக்ரம் லேண்டரில் உள்ள சாய்வுக்கதவு திறக்கும்போது, ரோவர் வெளியே வந்து நிலவின் தரையைத் தொடும்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் எழும்பிய புழுதி அடங்கிய பிறகு நிதானமாக வெளியே வரும் பிரக்ஞான் ரோவர், நிலா குறித்து அனுப்பும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.

அந்தத் தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். மின்காந்த அலைகளாக மாற்றப்படும் அந்தத் தரவுகளை ஒருவேளை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது?

அதற்கும் இஸ்ரோ ஒரு மாற்றுத் திட்டத்தை வைத்துள்ளது. இந்த இடத்தில்தான் சந்திரயான்-2இன் ஆர்பிட்டர் உள்ளே வருகிறது.

அந்த ஆர்பிட்டர் தரையிறங்கி கலனுடன் தொடர்பில் இருக்கும். விக்ரம் தரையிறங்கி கலன் ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களையும் அது மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரவுகளையும் மொத்தமாக பூமிக்கு அனுப்பும்.

அதேவேளையில், அந்தத் தரவுகளை ஆர்பிட்டருக்கும் அனுப்பி வைக்கும். பிறகு, அந்தத் தரவுகள் ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு மீண்டும் அனுப்பப்படும்.

இரண்டில் ஏதாவது ஒரு திட்டத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் தரவுகள் தங்கள் கைக்குக் கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக இத்தகைய யுக்தியை இஸ்ரோ பயன்படுத்துகிறது.

ரோவர்: 26 கிலோ மட்டுமே எடைகொண்ட இந்தக் கலன் என்ன செய்யும்?

ரோவர்: 26 கிலோ மட்டுமே எடைகொண்ட இந்தக் கலன் என்ன செய்யும்?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும்.

ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும்.

மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு,

நிலாவின் தரைப்பரப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான்.

நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும்.

அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும்.

அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும்.

இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம்.

சந்திரயான்-3இன் ஆய்வுகள் மனிதன் விண்வெளிக்குச் செல்ல உதவுமா?

சந்திரயான்-3இன் ஆய்வுகள் மனிதன் விண்வெளிக்குச் செல்ல உதவுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், மனிதர்களின் விண்வெளிப் பயணங்கள் எளிமையாகிவிடும்.

செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கும் ஒரு திட்டம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். பூமியில் இருந்தே அந்தப் பயணத்திற்குத் தேவையான எரிபொருள்களையும் நாம் எடுத்துச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஒருவேளை இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், நிலவுக்குச் செல்வதற்குத் தேவையான எரிபொருளை மட்டும் நிரப்பிக்கொண்டு பூமியில் இருந்து கிளம்பினால் போதுமானது.

நிலவை அடைந்த பிறகு, அங்குள்ள தளத்தில் அங்கேயே சேகரிக்கப்படும் ஹைட்ரஜன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை பயன்படுத்தி செவ்வாய் கோளுக்கான பயணத்தை மனிதர்கள் மேற்கொள்ள முடியும். இத்தகைய முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படாது என்றாலும், அவற்றுக்கான தொடக்கமாக இஸ்ரோவின் இந்த ஆய்வு இருக்கக்கூடும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்று.

சந்திரயான்-3 விண்கலனின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடைகொண்ட ஊர்திக்கலனில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ். (LIBS), ஏ.பி.எக்ஸ்.எஸ் (APXS) என்ற இரண்டு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளப் போகின்றன.

இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்குக்கூட உதவலாம் என்று கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் எஸ்.பாண்டியன்.

நிலாவின் தரைப்பரப்பில் இத்தகைய குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான்.

இதற்கிடையே, பிரக்ஞான் ரோவரில் உள்ள சக்கரங்களும் ஒரு முக்கிய வேலையைச் செய்யும்.

இப்படியாக பிரக்ஞான் ரோவர் முன்னோக்கி நகர்ந்துகொண்டே ஆய்வுகளைச் செய்யும்போது, அதன் ஆறு சக்கரங்களும் நிலாவின் தரைப்பரப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவை நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கும்.

இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3
படக்குறிப்பு,

அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இஸ்ரோவை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3

இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான்.

ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது.

அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும்.

உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது.

அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது.

ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *