காஸாவில் சண்டை நிறுத்தம், 50 பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

காஸாவில் சண்டை நிறுத்தம், 50 பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் 50 பிணைக் கைதிகளை விடுப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அமைச்சரவை இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில், “அனைத்து பணயக் கைதிகளையும் மீட்க இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல் கட்ட திட்டத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பணயக்கைதிகள் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள். அப்போது சண்டை நிறுத்தப்படும்.”

“பிணைக் கைதிகள் அனைவரும் தாயகம் திரும்பும் வரை, ஹமாஸ் முற்றிலுமாக அகற்றப்படும் வரை இஸ்ரேலிய அரசாங்கம், இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் போரைத் தொடரும். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு புதிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்படும்.” என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

காஸா

பட மூலாதாரம், Getty Images

இந்த உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

முதலில் விடுவிக்கப்படும் முதல் 50 பேரில் பெரும்பாலானோர் இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய குடிமக்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஹமாஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மனிதாபிமான உதவி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான டிரக்குகள் காஸாவுக்குள் நுழையும்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் எந்தத் தாக்குதலையும் நடத்தாது, யாரையும் கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.

“நான்கு நாள் தற்காலிக போர்நிறுத்தத்தின் போது, தெற்கு காஸாவில் விமானங்கள் பறக்க முற்றிலுமாகத் தடை இருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 240 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களில் நான்கு பணயக்கைதிகள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

பட மூலாதாரம், IDF

“கத்தாருக்கு நன்றி”

இந்த உடன்பாடு தொடர்பாக ஹமாஸ் டெலிகிராமில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் “மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் எகிப்துக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது.

பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அக்டோபர் 7 முதல் ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் கூறின.

செவ்வாய்கிழமை ராய்ட்டர்ஸிடம் பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் இஸ்ரேலுடனான ‘போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு’ மிக அருகில் இருப்பதாக கூறினார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விரைவில் “நல்ல செய்தியை” பகிர்ந்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *