
பட மூலாதாரம், Getty Images
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது பயணத்தில் அடுத்த மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தியா சார்பாக ‘ககன்யான் திட்டத்தில்’ விண்வெளிக்கு அனுப்பப்படும் நான்கு வீரர்களின் பெயர்களை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோதி.
ஆனால், ககன்யான் பயணத்தில் விண்வெளி வீரர்களுக்கு முன்பாக வேறு ஒருவர் விண்வெளிக்கு செல்ல உள்ளார். அவர் பெயர் வியோமித்ரா.
யார் இந்த வியோமித்ரா?
வேறு யாருமல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட ஒரு பெண் விண்வெளி ரோபோ தான் இந்த வயோமித்ரா.
எப்படிச் செயல்படுவார் வியோமித்ரா?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் 2025-ஆம் ஆண்டுக்குள் நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக, சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக விண்வெளிக்கு காலி விண்கலத்தைச் செலுத்தி அதை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வர வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, விண்வெளிக்கு ரோபோவை வைத்து ஒரு விண்கலத்தை அனுப்பி, பூமிக்கு மீண்டும் பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரோவின் திட்டம்.
இந்த பணியில் ஈடபட உருவாக்கப்பட்ட பெண் ரோபோ தான் இந்த வியோமித்ரா.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் துணை இயக்குநரும், ஓய்வுபெற்ற விஞ்ஞானியுமான பி.வி.சுப்பாராவ் பிபிசியிடம் வியோமித்ரா குறித்து விளக்கினார்.
ககன்யான் திட்டத்தின் நோக்கம், நான்கு விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்புவதாகும்.
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் மூன்று நாட்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக ஒரு ரோபோ மாதிரியை மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி, தங்க வைத்து பூமிக்கு பத்திரமாக கொண்டு வரும் பணிக்காக இந்த மனித உருவிலான வியோமித்ரா ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
பெண் ரோபோவின் சிறப்பம்சங்கள் என்ன?

மனித வடிவிலான ரோபோவான வியோமித்ராவுக்கு குறிப்பிட்ட அளவிலான நுண்ணறிவு மட்டுமே உள்ளது. ராக்கெட்டை இயக்குவதற்கான கையேட்டில் உள்ள கட்டளைகளின் அடிப்படையில் விண்வெளிக்குச் சென்று திரும்புவதற்கான பணியைச் செய்யும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாடு மையத்திலுள்ள விஞ்ஞானிகளுடன் தனது குரலில் இந்த ரோபோ தகவல்களை பரிமாறும் வகையில் இதன் செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக விண்வெளியில் உள்ள சூழ்நிலைகளுக்கு விண்வெளி வீரர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதை விரிவாக அறிய முடியும் என்கிறார் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியான சுப்பாராவ்.
“சுவாசிப்பது, பிற உயிரியல் காரணிகள், பகல்-இரவில் வேறுபடும் தன்மைகள், எதிர்பாராத நிகழ்வுகளின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற விஷயங்களை அறிய இந்த ரோபோவின் விண்வெளி பயணம் விஞ்ஞானிகளுக்கு உதவும்,” என்றார் சுப்பாராவ்.
மேலும், ராக்கெட்டின் எரிவாயு, மின்சாரம், உயிர் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டையும் இந்த பயணத்தின் போது கண்காணித்து விஞ்ஞானிகளுக்கு தகவல்களை இந்த ரோபோ பரிமாற்றம் செய்யும்.
இந்தத் தரவுகள், ககன்யான் திட்டத்தின் மூலமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் போது பயனுள்ளதாக இருக்கும்.
ராக்கெட் பயணத்தின் போது ஏரோடைனமிக் ஆற்றலால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வியோமித்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோதனை வெற்றி பெற்றால் அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
வியோமித்ராவின் இந்த விண்வெளிப் பயணம் வெற்றி பெற்றால், அதில் கிடைத்த படிப்பினையாக அடிப்படையாக கொண்டு, 2025-இல் ககன்யான் திட்டத்தின் மூலமாக நான்கு வீரர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும்.
பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூமியின் கீழ் வட்டப் பாதைக்கு வீரர்கள் அழைத்து செல்லப்பட்டு, அங்கு விண்வெளியில் மூன்று நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் திரும்பி வருவார்கள்.
ககன்யான் திட்டத்திற்காக இந்தியா ரூ9,023 கோடி செலவிடப்படுகிறது. சந்திரயானின் வெற்றிக்குப் பிறகு, இந்தியா ஆதித்யா எல்-1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் கலனை ஏவியது.
இப்போது ககன்யான் திட்டத்தின் வழியாக விண்வெளி துறையில் மற்றொரு மைல்கல்லை அடைய இஸ்ரோ தயாராகி வருகிறது.
விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையத்தை 2035-க்குள் உருவாக்கவும், 2040-இல் நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
கடந்த காலத்தில் விண்வெளிக்கு ரோபோக்களை ஏவிய நாடுகள்
2011-ஆம் ஆண்டு விண்வெளிக்கு முதல் மனித உருவ ரோபோவை நாசா அனுப்பியது. அதன் பெயர் ரோபோநாட் 2. பின்னர் 2013-இல் ஜப்பானும் சிறிய மனித உருவம் கொண்ட கிரோபோ என்ற ரோபோவை விண்வெளிக்கு அனுப்பியது.
பின்னர் ரஷ்யா 2019-இல் மனித உருவம் கொண்ட ஃபெடோர் என்ற ரோபோவை விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோவின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், மனித உருவ ரோபோவை விண்வெளிக்கு அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்