
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், மகளிர் ஆணையம், மற்றும் பல மூத்த அதிகாரிகளுக்கு, பெயரிடப்படாத ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
ஹரியாணா மாநிலம் ஜீந்த் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் எழுதியதாக அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், அப்பள்ளியில் பயிலும் சுமார் 60 மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் அது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இது தொடர்பாக காவல்துறையினர் கடந்த வாரம் இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் பள்ளி மாணவிகள் மத்தியில் அச்சம் இன்னும் குறையவில்லை.

தற்போது பள்ளி மாணவிகள் யாருடனும் பேச முடியாத சூழல் உள்ளது
பள்ளியில் நிலவும் பதற்றமான சூழல்
காலை 11 மணி. ஜீந்த் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து குழந்தைகள் நலக் குழுவின் நான்கு உறுப்பினர்கள், இந்தப் பள்ளியின் குழந்தைகளிடம் போக்சோ சட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான அவசரகால உதவி எண்ணைக் குறித்தும் சொல்ல வந்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த பள்ளி பெண்கள் பள்ளியாகும். சுற்றியிருக்கும் கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து படிக்கின்றனர்.
இப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 40 பேர் உள்ளனர். இதில் கிட்டத்தட்டப் பாதி பேர் பெண் ஆசிரியர்கள்.
இங்கு 1200-க்கும் அதிகமான மாணவிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவிகள் யாருடனும் பேச முடியாத சூழல் உள்ளது.
வெளியில் இருந்து வருபவர்களைக் கண்டவுடன் ஆசிரியர்களின் மாணவிகளிடம் ‘பேச வேண்டாம்’ என்று சைகை செய்கின்றனர்.
பள்ளி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தலைமையாசிரியரின் அறையிலும் ஒரு கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

‘குற்றம் சாட்டப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்’
குற்றம் சுமத்தப்பட்டத் தலைமையாசிரியர் கடந்த 6 வருடங்களாகப் பணியிடமாற்றம் செய்யப்படாமல் இதே பள்ளியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதே காலப்பகுதியில் இந்தப்பள்ளியின் மற்ற ஊழியர்கள் பலமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இந்தத் தலைமையாசிரியரின் நடவடிக்கையால் பல மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தலைமையாசிரியர், மாணவிகளை கறுப்பு கண்ணாடி பொருத்திய அறைக்கு அழைத்து தவறாக நடந்து கொண்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
சம்பவம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி, மத்திய மகளிர் ஆணையம், ஹரியாணா மகளிர் ஆணையம் மற்றும் ஹரியானாவின் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு பெயர் குறிப்பிடாத ஒரு ஐந்து பக்கக் கடிதம் அனுப்பப்பட்டது.
அது, தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக மாணவிகள் எழுதியதுபோல் எழுதப்பட்டிருந்தது. பள்ளித் தலைமையாசிரியர், மாணவிகளை கறுப்பு கண்ணாடி பொருத்திய அறைக்கு அழைத்து தவறாக நடந்து கொண்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அவர் ஆட்சேபகரமான முறையில் தொடுவது குறித்தும், அதைப்பற்றி யாரிடமாவது கூறினால், “செயல்முறை மற்றும் எழுத்துத் தேர்வில் ஃபெயில் ஆக்கி விடுவேன்” என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அந்தக் கறுப்புக் கண்ணாடி கொண்ட அறை அகற்றப்பட்டுள்ளது
கறுப்பு கண்ணாடி பொருத்திய அறை
மேலும், அந்தக் கடிதத்தில், அந்தக் கறுப்புக் கண்ணாடி பொருத்திய அறையில் இருந்து பார்த்தால் வெளியில் இருப்பது தெரியும் என்றும், ஆனால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பது எதுவும் தெரியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில், அதிகாரிகள் பள்ளிக்கு வெளியே வந்து மாணவர்களிடம் பேசினால், தலைமையாசிரியரின் அனைத்து செயல்களையும் கூறுவதாக, மாணவர்களின் குரலில் கூறப்பட்டிருந்தது.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் ஆசிரியை பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவிகளை கறுப்புக் கண்ணாடி போட்ட அறைக்கு அவர் அனுப்பியதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அந்தக் கறுப்புக் கண்ணாடி கொண்ட அறை அகற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த வாரம்தான் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர்
இந்தக் கடிதம் கிடைத்ததும், செப்டம்பர் 14-ஆம் தேதி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஹரியாணா காவல்துறையை மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது.
ஆனால், இந்த வழக்கை போலீசார் தாமதப்படுத்தியதாகவும், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமையசிரியர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கடந்த வாரம்தான் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது பாலியல் துன்புறுத்தல், மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜீந்த் போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் போன் மற்றும் சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்திருகின்றனர்.

இந்தப் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக ஒரு ஆசிரியர் கூறினார்
பள்ளி ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிபிசியிடம் பேசிய பள்ளியின் ஆண் ஆசிரியர் ஒருவர், தலைமையாசிரியர் மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவிகளுக்கு ஏதாவது தவறு நடந்தால், பள்ளியின் மற்ற ஊழியர்களும் அதுபற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
ஆனால், தங்கள் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் விசாரிக்க வந்தபோது தான் மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்ததாக அவர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில் , “எங்களிடம் மூன்று பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழுவும் உள்ளது. ஆனால் அவர்களிடமும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடிதம் நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது,” என்று கூறினார்.
“அதன் நம்பகத்தன்மை விசாரணைக்கு உட்பட்டது என்றாலும், எந்த மாணவரும் அல்லது பெற்றோரும் பள்ளி ஊழியர்களிடம் பேசவில்லை. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தது, தங்கள் கவனத்துக்கும் வரவில்லை என்று அனைத்து ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்,” என்றார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு பள்ளியின் பெரும்பாலான ஊழியர்கள் பணியிடம் மாறி இந்தப் பள்ளிக்கு வந்ததாகவும், அந்த நேரத்தில் ஏற்கனவே கருப்பு கண்ணாடியுடன் கூடிய ஒரு அறை பள்ளியில் ஏற்கனவே இருந்ததால் அதில் சந்தேகத்திற்குரிய எதையும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தப் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், 20-30 மாணவிகள் மெரிட் பெறுவதாகவும் அந்த ஆசிரியர் கூறினார்.

குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசகர் மாணவிகள் மிகவும் பயப்படுகிறார்கள் என்று கூறினார்
‘பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் பயப்படுகிறார்கள்’
குழந்தைகள் நலக்குழுவுடன் வந்த ஜீந்த் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சுஜாதா, பள்ளி மாணவிகள் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறினார். அவர்கள் வெளிப்படையாக பேசத் தயங்குவதாகவும், அவர்களின் பெற்றோரும் பேசவில்லை என்றும் கூறினார்.
சுஜாதாவின் கூற்றுப்படி, அவர்களுடன் பேசவும், அவர்களுக்குப் புரியவைக்கவும், அவர்களைப் பாதுகாப்பாக உணரவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அறுபதுக்கு மேல் இருக்கலாம் என்றும் கூறினார்.
குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசகர் மம்தா சர்மா, மாணவிகள் மிகவும் பயப்படுகிறார்கள் என்றும், அவர்கள் மனதில் சில்வதற்கு நிறைய உள்ளபோதும் சூழ்நிலை அவர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் சிறுமிகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இச்சம்பவத்தில் புதிய விஷயங்களும் வெளிவரலாம் என்றும் மம்தா சர்மா கூறினார்.

பள்ளிக் கல்வி இயக்குநரும், இச்சம்பவத்தை விசாரித்து வருகிறார்
தொடரும் விசாரணை
ஜீந்த் மாவட்டக் காவல்துறை உதவி ஆணையர் முகமது ஏ ராஜா, அந்தக் கடிதம் தனக்கு வாட்ஸ்அப்பிலும் வந்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தவிர, காவல்துறையின் விசாரணையும் நடந்து வருகிறது, இதில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர, பள்ளிக் கல்வி இயக்குநரும், இச்சம்பவத்தை விசாரித்து வருகிறார். மேலும் ஹரியானா அரசும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
மகளிர் ஆணையத்தின் விசாரணையும் நடந்து வருகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்