பட மூலாதாரம், Getty Images
பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல.
அப்படிப் பார்த்துப் பார்த்து பராமரிக்கப்பட்ட வாகனங்கள் சென்னையின் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன.
மேலும், இயங்கக்கூடிய நிலையில் இருக்கும் வாகனங்களை வெள்ள நீரில் ஓட்டிச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் மழைக்காலங்களில் வாகனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும் பல கேள்விகள் இருக்கும்.
அதற்கான பதில் தான் இந்தக் கட்டுரை.
தமிழ்நாட்டில் பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அவ்வாறு பலரால் பார்த்து பார்த்து பராமரிக்கப்பட்ட கனவு வாகனங்கள் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நின்று 48 மணிநேரம் ஆகியும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் வெளியே சென்று வருவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது போன்ற மழைக்காலங்களில், அவசரத் தேவைகளுக்காக ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல சந்தேகங்கள் உள்ளன.
மேலும் இயங்கக்கூடிய நிலையில் இருக்கும் வாகனங்களை வெள்ள நீரில் ஓட்டிச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் மழைக்காலங்களில் வாகனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும் பல கேள்விகள் இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
சென்னையில் கடந்த டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் 4 அடி வரை நீர் தேங்கியது
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யக்கூடாது
“ஒரு வாகனம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டது அல்லது என்ஜினுக்குள் நீர் புகுந்துவிட்டது என்றால் அதை எக்காரணம் கொண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கக்கூடாது,” என்று சொல்கிறார் ஆதித்யா பிர்லா காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் சதிஷ் குமார்.
அவ்வாறு செய்தால் வாகனம் மேலும் சேதமடையும் வாய்ப்பிருக்கிறது எனவும், உடனடியாக ஒரு டோவ் (tow) வாகனம் மூலமாக காரை அருகில் உள்ள கார் டீலரிடம் கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துகிறார்.
“சிலர் கார்களில் இருந்து பேட்டரிகளை அகற்ற முயற்சிப்பார்கள். வெள்ள நீரில் காரின் பேட்டரிகள் மூழ்கியிருந்தாலும் கூட அவற்றில் எலக்ட்ரிக் சார்ஜ் இருக்கும். அவ்வாறு கழட்டப்படும் பேட்டரிகளால் நமக்கும் ஆபத்து பேட்டரியும் சேதமடையும். பின்னர் அவை காப்பீட்டில் சேர்க்கப்படாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே முறையான வழிகாட்டுதல் இல்லாமல் கார் பேட்டரியை கழட்ட ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது,” எனக் கூறுகிறார் சதிஷ் குமார்.
தொடர்ந்து அவர், “காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாக காரை முழுவதும் ஆய்வு செய்வார்கள். உங்கள் காப்பீட்டில் ‘எஞ்சின் ப்ரொடக்டர்’ எனும் திட்டம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் எஞ்சின் தொடர்பான பழுதுக்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். மற்றபடி காரின் வெளிப்புற சேதங்களையும் காப்பீட்டின் மூலம் சரிசெய்து விடலாம். காரின் வயதைப் பொறுத்து கிடைக்கக்கூடிய காப்பீட்டுத் தொகை மாறுபடலாம்” என்று கூறினார்.

வீட்டின் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்புறத்தில் மழை நீர் புகுந்து மூழ்கடித்துள்ளது
வாகனத்தின் வேகத்தில் கவனம்
நான்கு சக்கர வாகனங்களை மழைக்காலங்களில் பராமரிப்பது மற்றும் ஓட்டிச் செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்களைத் தெரிந்து கொள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கான சர்வீஸ் தொழிலில் இருக்கும் டார்க் மேக்ஸ் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மாவிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் இனி.
பொதுவாகவே, முன்பகுதியில் வைப்பரில் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பொறுத்தவரை ஆர்.ஓ தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். அதோடு வைப்பர் ஷாம்பூ என விற்பதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.
சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் சன்சில்க், சிக் போன்றவற்றின் ஒரு ரூபாய் பாக்கெட்டுகளையே பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ரூபாய் பாக்கெட் ஒன்றை கலந்து பயன்படுத்தலாம்.
அப்படிப் பயன்படுத்தினால், மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது, அந்த சோப்பு நீர் கண்ணாடியில் மழைநீரை நிற்கவிடாது மற்றும் கண்ணாடியில் மழைநேரத்தில் மூடுபனி ஆவதும் தவிர்க்கப்படும்.
நான்கு சக்கர வாகனத்தை தண்ணீருக்குள் ஓட்டிச் செல்வதாக இருந்தால், எவ்வளவு ஆழமுள்ள தண்ணீருக்குள் ஓட்டுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். வாகனத்தின் சக்கரம் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் செல்லலாம்.
பட மூலாதாரம், Getty Images
வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரிலிருந்து கார்களை பாதுகாக்க அருகிலுள்ள மேம்பாலங்களில் வாகனங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து உரிமையாளர்கள் நிறுத்திச் சென்றனர்
வேகம் கூட்டினால் சிக்குவது நிச்சயம்

பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குடியிருப்பு வளாகத்திற்குள் நிற்கின்றன
மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், ‘ஏர் ஃபில்டர்’ வழியாக தண்ணீர் வாகன எஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
தற்காப்பு ஓட்டுதலில் மற்றுமொரு அம்சமும் உண்டு. தண்ணீருக்குள் ஓட்டிச் செல்லும்போது, முன்னால் நடந்து செல்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
அதன் மூலம் ஒருவேளை அவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் பள்ளத்தில் இறங்கி ஏறினால், அந்த ஆழத்திற்கு நம் வாகனம் செல்லுமா செல்லாதா என்பதைக் கணித்து ஓட்டிச் செல்ல முடியும்.
சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்த பிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
அதோடு, நான்கு சக்கரங்களில் இருக்கும் பேரிங் தேய்மானம் ஆகக்கூடும் என்பதால் அதுவும் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
கனமழையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் சாலையில் சென்று வந்த பிறகு, அடுத்த நாளில் மீண்டும் வாகனத்தை எடுக்கும் முன்பாக கீழே குனிந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கூலன்ட் தண்ணீரோ, இன்ஜின் ஆயிலோ கசிந்திருந்தால் நிச்சயமாக அதைக் கவனிக்க வேண்டும்.
அதேபோல், போனெட்டைத் திறந்து, எஞ்சின் ஆயில் அளவைச் சோதிக்க வேண்டும். அதோடு தண்ணீர் கலந்திருந்தால், எஞ்சின் ஆயிலின் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.
மூன்றாவதாக, பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டாலும் வாகனத்தை பழுதுபார்க்க கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வாகனத்தை எடுக்கும்போது எந்த இடைஞ்சலும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. அப்படியல்லாமல், இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் பழுது பார்த்தாக வேண்டும்.
சைலென்சர் மிகவும் முக்கியம்
இரு சக்கர வாகனங்களை மழைக்காலத்தில் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனது கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் துணைத் தலைவர் ராசிக் அலியிடம் பேசினோம்.
மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். வீட்டிற்கு அருகில், மிகச் சொற்ப தூரத்திற்குள் நீர் தேங்காமல் இருக்கும்போது ஓட்டிக் கொள்ளலாம்.
ஆனால், பள்ளங்கள், மேடுகளில் அதை ஓட்டுவது நல்லதல்ல. மேடுகளில் ஏற சிரமப்படும், சிறிய சக்கரத்தைக் கொண்டது என்பதால் சறுக்கிவிடக்கூடும்.
இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
2015 சென்னை பெருவெள்ளம் – மழை நீர் புகுந்த கார்களுக்கான பாதிப்புகளை சரி செய்ய காப்பீடு நிறுவனங்கள் சில விதிகளை வகுத்துள்ளன
அப்படிச் செய்யவில்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் இன்ஜினுக்குள் புகுந்துவிடும். எஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும். ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும்.
தண்ணீர் உள்ளே சென்ற பிறகு ஸ்டார்ட் செய்துவிட்டால், ஆயிலோடு தண்ணீர் கலந்துவிடும். அது இன்ஜினில் இருக்கும் பிஸ்டன் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏர் ஃபில்டரில் காற்று புக முடியாமல் கார்பரேட்டர் அடைத்துவிடும். ஆகவே, வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.
மழை நேரத்தில் வாகனத்தை உயரமான இடத்தில் நிறுத்துவது நல்லது. வாகனம் ஒருவாரத்திற்கு மழைநீரில் நின்றுவிட்டது என்றால், சக்கரங்களைக் கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். பிரேக் ஷூ தண்ணீரில் ஊறிவிடுவதால், சறுக்கிவிட வாய்ப்புள்ளது. அதைக் கவனிக்க வேண்டும்.
தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும். அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது.
வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
வாகன பேட்டரியை பொறுத்தவரை, இப்போதுள்ள வாகனங்களில் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓடவிட்டாலே தானாக சார்ஜ் ஆகிக் கொள்ளும் வகையில் தான் பொருத்தப்பட்டுள்ளன. ஆகவே, குளிர்ச்சி காரணமாக எந்த பாதிப்பும் பேட்டரிக்கு வராது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
