
பட மூலாதாரம், Getty Images
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ (IPO – இனிஷியல் பப்ளிக் ஆஃபர்) முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
புதன்கிழமை (நவம்பர் 2) இந்த ஐ.பி.ஓ ஏலம் ஆரம்பித்த முதல் ஒரு மணிநேரத்திலேயே, டாடா நிறுவனம் வழங்கிய அனைத்து பங்குகளுக்கும் போதுமான முன்பதிவுகள் கிடைத்துவிட்டன. முதல் நாளில் அறிவிக்கப்பட்ட பங்குகளைவிட 6.54 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
டாடா குழும நிறுவனம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐ.பி.ஓ.வை கொண்டு வந்ததே இவ்வளவு பெரிய வரவேற்புக்குக் காரணம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
டாடா டெக்னாலஜிஸ் உடன், வேறு சில நிறுவனங்களின் ஐ.பி.ஓ.க்களின் ஏலங்களும் நடந்து வருகின்றன.
ஐ.பி.ஓ என்றால் என்ன? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன? அதற்கான விதிகள் என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள் இதோ…

பட மூலாதாரம், TATATECHNOLOGIESAPAC
டாடா குழும நிறுவனம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐ.பி.ஓ.வை கொண்டு வந்ததே இவ்வளவு பெரிய வரவேற்புக்குக் காரணம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
ஐபிஓ என்றால் என்ன?
‘ஐ.பி.ஓ’ என்பது ‘இனிஷியல் பப்ளிக் ஆஃபர்’ (ஆரம்பப் பொது வழங்கல்) என்பதன் சுருக்கம்.
ஆரம்பப் பொது வழங்கல் என்பது வணிகங்கள், மூலதனம் திரட்டுவதற்காகவும், வணிக விரிவாக்கத்திற்காக நிதி திரட்டுவதற்காகவும் தேர்ந்தெடுக்கும் வழியின் ஒரு பகுதி. இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு முறை.
இந்த அமைப்பில் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு (டீ-மேட் கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள்) விற்பதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது. எனவே இது பொது வழங்கல் என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக, ஐ.பி.ஓ-வில் பங்கு விலை இரண்டு வழிகளில் தீர்மானிக்கப்படுகிறன.
எந்த நிறுவனங்கள் ஐபிஓ-வுக்குச் செல்ல முடியும்?
ஒரு நிறுவனம் முதலில் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI – செபி), அணுக வேண்டும்.
அந்த நிறுவனத்திற்கும் அதன் விளம்பரதாரர்களுக்குமான முக்கியத் தகுதி, நிறுவனத்தில் செபி (SEBI) விதிமுறைகளின்படி குறைந்தபட்ச பங்குகளை வைத்திருப்பதாகும். நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
நிறுவனம் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், அதன் நிலையான சொத்துகளின் மதிப்பு 3 கோடி ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஐ.பி.ஓ-வுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் லாபம் 15 கோடி ரூபாய்க்கு குறையக்கூடாது.
பொது வழங்கலின் அளவு, வழங்கலில் முந்தைய நிகர மதிப்பைவிட 5 மடங்குக்கு அதிகமாக இருக்கக்கூடாது.

பட மூலாதாரம், Getty Images
மொத்தப் பங்குகள், மொத்த விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதுபோன்ற வேறு சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனம், ஐ.பி.ஓ-விற்கு செல்லத் தகுதியுடையது என்ற விவரங்களைச் சேகரித்து, ஆவணங்களை செபியிடம் சமர்ப்பிக்கிறது.
செபி ஒப்புதல் அளித்தால், அது சம்பந்தப்பட்ட பங்குச் சந்தை வெளியீட்டுப் பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
அங்கும், அனைத்து விதிகளையும் பின்பற்றினால், ஒப்புதல் வழங்கப்பட்டு, ஐ.பி.ஓ அனுமதிக்கப்படுகிறது.
ஐ.பி.ஓ-வில் பங்கு விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?
பொதுவாக, ஐ.பி.ஓ-வில் பங்கு விலை இரண்டு வழிகளில் தீர்மானிக்கப்படுகின்றன.
- புக் பில்டிங் முறை: இதில், ஐ.பி.ஓ நிறுவனத்தின் பங்கு விலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை. விண்ணப்பதாரர்கள் அந்த வரம்பிற்குள் மேற்கோள் காட்ட வேண்டும்.
- நிலையான விலை முறை: இந்த முறையில் விலை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை, வாங்க வேண்டிய குறைந்தபட்ச பங்குகளின் எண்ணிக்கை, குறைந்தபட்ச முதலீடு போன்ற அனைத்து விவரங்களையும் நிறுவனம் தனது சலுகை ஆவணத்தில் தெளிவுபடுத்தும். அதன்படி விண்ணப்பித்த பிறகு தேவைக்கேற்ப ஒதுக்கீடுகளைச் செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
ஐபிஓ எத்தனை நாட்கள் நீடிக்கும்?
அறிவிப்புக்குப் பிறகு ஐ.பி.ஓ குறைந்தது 3 நாட்களுக்காவது நீடிக்க வேண்டும். அதிகபட்சம் 10 நாட்கள் நீடிக்கும்.
அதாவது, ஐ.பி.ஓ 3 முதல் 10 நாட்கள் வரை கிடைக்கும்.
புக் பில்டிங் முறையின் கீழ் அதிகபட்சமாக 7 நாட்கள் கிடைக்கும். விலை வரம்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
ஐபிஓ-வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

பட மூலாதாரம், Getty Images
ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், ஐ.பி.ஓ.வை அறிவிக்கும் நிறுவனம் வெளியிடும் தேதிகளில் தங்கள் நெட் பேங்கிங் அல்லது டிரேடிங் கணக்கு மூலம் ஐ.பி.ஓ.வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பிக்கும்போது, உங்கள் ஐ.பி.ஓ விண்ணப்பத்தின் படி முதலீட்டுக்குக் குறிப்பிடப்பட்ட தொகை உங்கள் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். ஐ.பி.ஓ.வில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைப் பொறுத்து, மீதமுள்ள தொகை கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.
ஒதுக்கீடு இல்லை என்றால், முழுத் தொகையும் உங்கள் கணக்கில் செலுத்தப்படும். மற்ற பரிவர்த்தனைகளுக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பங்குகள் எப்படி ஒதுக்கப்படுகின்றன? ‘லாட்’ என்றால் என்ன?
பங்குகள் ஒதுக்கீடு லாட்டரி முறையில் செய்யப்படுகிறது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் பங்குகளைப் பெறாமல் போகலாம்.
ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ-வுக்கு வரும்போது குறைந்தபட்ச பங்குகளை வெளியிடுகிறது. அது ‘லாட்’ (lot) என்று அழைக்கப்படுகிறது. ‘லாட்’ அளவைவிட குறைவான பங்குகளைக் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், லாட்டின்படி விண்ணப்பம் செய்தாலும், ஒரே நேரத்தில் விரும்பிய எண்ணிக்கையிலான பங்குகள் ஒதுக்கப்படாமல் போகலாம்.
மொத்தப் பங்குகள், மொத்த விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
நிறுவனம் ஒதுக்கியபடி, வெளியீடு முடிந்த 5 நாட்களுக்குள் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிரச்னை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது?
பங்குகள் வழங்குவதில் ஏதேனும் தவறுகள் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், புகார் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தீர்வு இல்லை என்றால் செபியிடம் புகார் செய்யலாம்.
முழுமையான விவரங்கள் அடங்கிய புகாரை, ‘Office of Investor Assistance and Education, SEBI, C-4, G Block, Kurla Complex, East Bandra, Mumbai-400051’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
(ஆதாரம்: பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய தேசிய பங்குச் சந்தை, பாம்பே பங்குச் சந்தை [BSE])
(குறிப்பு: சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்கள் அல்லது உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகர்களிடம் பேசுங்கள். அதன் பிறகு முடிவு எடுங்கள்)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்