திருப்பூர்: ‘சாமி பயம் காட்டி’ பட்டியலின மக்கள் செருப்பு அணிய தடை விதித்த ஆதிக்க சாதியினர் – என்ன நடந்தது?

திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிய தடை விதித்த ஆதிக்க சாதியினர் - என்ன நடந்தது?

திருப்பூரில் சாதி தீண்டாமை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில், ஆன்மிகத்தின் பெயரால் இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுவதால், பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வீதியில் செருப்பு அணியாமல் நடக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

சாதி தீண்டாமை நடைபெறுவதாகப் புகார் கிடைத்ததால், கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் பட்டியலின மக்களை செருப்பு அணிய வைத்தும், கோயிலுக்குள் கூட்டியும் சென்றுள்ளனர்.

என்ன நடக்கிறது கிராமத்தில்?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்து அமைந்துள்ளது கொண்டவநாயக்கன்பட்டி கிராமம். அங்கு இன்னமும் தீண்டாமை பின்பற்றப்படுகிறது, பட்டியலின மக்கள் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பொதுவான வீதியில் செருப்பு அணிந்து நடக்க முடியவில்லை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவிலுக்குள் நுழைய முடியவில்லை எனக் கூறி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பட்டியலின மக்களை, ஆதிக்க சாதி வீதியில் நடக்க வைத்தும், கோவிலுக்குள் அழைத்துச் சென்றும் வழிபட வைத்துள்ளனர்.

இப்படியான நிலையில், டிசம்பர் 27ஆம் தேதி, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இந்தக் கிராமத்துக்கு வந்து, தீண்டாமை பின்பற்றப்படும் கோவில் மற்றும் ஆதிக்க சாதியினரின் வீதியைப் பார்வையிட்டு, மக்களிடம் விசாரணை நடத்தினார்.

திருப்பூரில் சாதி தீண்டாமை

உண்மையில் இந்தக் கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய பிபிசி தமிழ் கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.

உடுமலை நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவு பயணித்து, சுற்றிலும் தென்னை மரங்கள், சோளம் சாகுபடியென இருந்த விளைநிலங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த கொண்டவநாயக்கன்பட்டி என்ற ராஜவூரை அடைந்தோம். அங்கு ஆதிக்க சாதியினர் 90 குடும்பங்களும், பட்டியலின மக்கள் 60 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

ஆதிக்க சாதி மக்களின் விவசாய நிலங்களில் விவசாயத் தொழிலாளர்களாக வேலைகளுக்குச் சென்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கிராமத்தின் நுழைவுப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது தீண்டாமை பின்பற்றப்படும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜகாளியம்மன் கோவில்.

தீண்டாமை பின்பற்றப்படும் கம்பள நாயக்கர் வீதி கிராமத்தின் மையப் பகுதியில் வெறும் எட்டு அடி அகலத்தில் அமைந்திருந்தது. கோவிலையும் வீதியையும் பிபிசி தமிழ் பார்வையிட்டது. அங்குள்ள பட்டியலின மக்களிடம், ‘ஏன் நீங்கள் கோவிலுக்குள் செல்வதில்லை? கம்பள நாயக்கர் வீதியில் செருப்புடன் நடப்பதில்லை, காரணம் என்ன?’ என விசாரித்தோம்.

‘பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம்’

திருப்பூரில் சாதி தீண்டாமை

பட்டியலின மக்களுக்காக பிபிசி தமிழிடம் பேசிய முத்துலட்சுமி, ‘எங்கள் ஊரில் நடந்த குடும்பப் பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றிவிட்டார்கள். நாங்கள் எப்போதும் போல சாதிப் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம்,’’ என்றார்.

‘ஒற்றுமை எனச் சொல்கிறீர்கள். ஆனால் ஏன் அந்த வீதியில் செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைவதில்லை? யாராவது மிரட்டுகிறார்களா?’ என்று கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த முத்துலட்சுமி, ‘‘செருப்பு போட வேண்டாம், கோவிலுக்குள் வர வேண்டாம் என ஆதிக்க சாதியைச் சேர்ந்த யாரும் சொல்வதில்லை. ஆனால், எங்கள் அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் பரம்பரையாக செருப்பு அணியாமல்தான் கம்பள நாய்க்கர் வீதியில் நடக்கிறோம்.

கோவிலுக்கு வெளியில் இருந்துதான் சாமி கும்பிடுகிறோம். பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறோம். இது பாரம்பரியமாகத் தொடர்வதால் எங்களுக்கு அதை மீறுவதில் விருப்பமில்லை, இனியும் இப்படித்தான் இருப்போம்,” என்றார் அவர்.

‘சாமிக்கு பயந்துதான் போவதில்லை’

திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய காளியம்மாள், ‘‘எனக்கு 60 வயதாகிறது. எனக்குத் தெரிந்த வரையில் நாங்கள் பல ஆண்டுகளாக ராஜகாளியம்மன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் வழிபடுகிறோம்.

ஆண்டுதோறும் இந்தக் கோவிலின் பண்டிகையின்போது கம்பள நாயக்கர் வீதி வழியாகத்தான் அம்மன் சிலை எடுத்து வரப்படும்.

இந்த வீதியில் நாங்கள் செருப்பு அணியாமல்தான் சென்று வருகிறோம். அது பல ஆண்டுகளாக இருக்கும் கட்டுப்பாடு. நாங்கள் சாமிக்குப் பயந்து அதை மீறுவதில்லை, கோவிலுக்கு உள்ளேயும் போவதில்லை,’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

ஆன்மிகத்தின் பெயரால் மிரட்டல்!

திருப்பூரில் சாதி தீண்டாமை

நம்மிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத பட்டியலின இளைஞர்கள் சிலர், அங்கு தீண்டாமை நிலவுவதாகக் கூறினர்.

‘‘நாங்கள் இந்தத் தீண்டாமையைத் தகர்த்து கோவிலுக்குள் சென்று வழிபடவும், செருப்பு அணிந்து பொதுவான அந்த வீதியில் நடக்கவும் முயன்றாலும், எங்கள் பெற்றோரே ஆதிக்க சாதியினருக்குப் பயந்து எங்களைத் தடுக்கின்றனர்.

அந்த அளவுக்கு இங்குள்ள பட்டியலின மக்கள் மனதில் தீண்டாமை கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தீண்டாமையை நாங்கள் தகர்க்க நினைத்தால், ஆதிக்க சாதியினர் பில்லி சூனியம் நடக்கும், காளியம்மாள் தண்டிப்பாள் என ஆன்மிகத்தின் பெயரிலும், தோட்ட வேலை தரமாட்டோம் எனவும் மிரட்டுவதாக,’’ அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.

‘பாரம்பரியத்தை அனைவரும் பின்பற்றுகின்றனர்’

ஆதிக்க சாதியினர் சார்பாக பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ண குமார், ‘‘நாங்கள் பட்டியலின மக்களிடம் செருப்பு அணிய வேண்டாம், கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என யாரும் தெரிவிப்பதில்லை.

எங்கள் ஊருக்குள் காலம் காலமாகப் பழைய நடைமுறை, பாரம்பரியம் எப்படி இருக்கிறதோ அதை அனைவரும் பின்பற்றுகின்றனர். அதனால், பட்டியலின மக்கள் அவர்களாக செருப்பு அணிவதில்லை, கோவிலுக்குள் வருவதில்லை,’’ என்றார்.

ஆன்மிகத்தின் பெயரில் மறைமுக ஆதரவு?

திருப்பூரில் சாதி தீண்டாமை

பிபிசி தமிழிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, ‘‘கம்பள நாயக்கர் வீதியில்தான் காளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. கடவுளுக்குப் பயந்துதான் பட்டியலின மக்கள் வீதியில் செருப்பு அணிய மாட்டார்கள்; காளியம்மன் கோவிலுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் யாரும் அவர்களை கோவிலுக்குள் நுழைய வேண்டாம், செருப்பு அணிய வேண்டாம் எனக் கூறுவதில்லை,’’ என்றார்.

ராஜலட்சுமி நம்மிடம் பேசிக்கொண்டருந்த போதே கோபத்தில் திடீரென, ‘‘அசலூர்காரங்க சொல்லிக் கொடுத்துதான் இப்படியெல்லாம் பிரச்னை நடக்குது. இங்க அவுங்க (பட்டியலின மக்கள்) செருப்பு போட்டுட்டு வரமாட்டாங்க, அதையும் மீறி வந்தா அவுங்கள (பட்டியலின மக்கள்) காளியாத்தா பாத்துக்கும், அப்றம் அனுபவிப்பாங்க,’’ என மிரட்டும் தொனியில் பேசினார்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த பலரிடம் பிபிசி தமிழ் பேசியதில் பெரும்பாலானவர்கள், ‘பட்டியலின மக்கள் செருப்பு அணிந்து வந்தாலோ, கோவிலுக்குள் வந்தாலோ ராஜகாளியம்மாள் தண்டிப்பார், அவர்கள் எப்போதும் ஊர் கட்டுப்பாட்டை மீற மாட்டார்கள்,’ என, ஆன்மிகத்தின் பெயரால் தீண்டாமையை மறைமுகமாக ஆதரிக்கும் மனநிலையில்தான் இருந்தனர்.

மாவட்ட நிர்வாகம் சொல்வது என்ன?

திருப்பூரில் சாதி தீண்டாமை

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ‘‘ஒரு குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கின் போதுதான், இந்தக் கிராமத்தில் தீண்டாமை நடப்பதாகப் புகார் வந்தது.

விசாரித்தபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை.

இப்போது யாரும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக தீண்டாமையைப் பின்பற்றிய பட்டியலின மக்கள் இன்னமும் அதைப் பின்பற்றுகின்றனர்,’’ என்கிறார் அவர்.

மேலும், ‘‘தீண்டாமை தொடர்பான புகாரைப் பெற்ற பின் டிசம்பர் 23ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாங்கள் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றும், கம்பள நாயக்கர் வீதியில் செருப்பு அணிய வைத்து நடந்து அழைத்துச் சென்றும் தீண்டாமையைத் தகர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தக் கிராமத்தைக் கண்காணித்து வருகிறோம், தீண்டாமையை யார் கட்டவிழ்த்தாலும் நடவடிக்கை எடுப்போம்,’’ என்றார் ஜஸ்வந்த் கண்ணன்.

‘மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’

திருப்பூரில் சாதி தீண்டாமை

தீண்டாமை நடந்ததாகக் கூறப்பட்ட கோவில் மற்றும் வீதியில் ஆய்வு செய்த, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில் தீண்டாமை பின்பற்றப்படுவதாக புகார் எழுந்ததால் ஆய்வு செய்துள்ளோம்.

நாங்கள் பார்த்த வரையில் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய முடிகிறது. செருப்பு அணிந்து நடக்க முடிகிறது, இதில் மற்ற சாதியினரால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பட்டியலின மக்களாக முன்வந்துதான் இதைப் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

பேட்டியின்போது, ‘கோவில் நுழைவு, செருப்பு அணிந்து நடக்க பட்டியலின மக்கள் முயன்றால், வேலையைக் காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் மிரட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது’ என்ற கேள்வியை இயக்குநர் ரவிவர்மனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், ‘‘போலீஸார், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துதான் இந்தக் கிராமத்தில் ஆய்வு செய்துள்ளோம். அப்படி யாரேனும் மிரட்டினால், பட்டியலின மக்கள் எங்களிடம் புகாரளிக்கலாம். மிரட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் அவர்.

சுதந்திரமாக உணர்ந்தேன்!

திருப்பூரில் சாதி தீண்டாமை

அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து வீதியில் செருப்புடன் நடந்து தீண்டாமையைத் தகர்த்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எனக்கு 40 வயசாகுது. இத்தனை ஆண்டுகளாக நான் கம்பள நாயக்கர் வீதியுடைய நுழைவுப் பகுதியிலேயே செருப்பை விட்டுவிட்டு வெறும் காலில்தான் அந்த வீதிக்குள் போய் வருவேன்.

அந்த வீதியில் ஒரு கடை இருக்கிறது. அங்கு பொருட்களை வாங்கக்கூட செருப்பைக் கழற்றிவிட்டுத்தான் செல்வேன். ராஜகாளியம்மன் கோவிலுக்குச் சென்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிடுவேன்.

அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சியால் செருப்பு அணிந்து அந்த வீதியில் முதல் முறையாக நடந்தேன். கோவிலுக்குள் சென்று வழிபட்டபோது, சுதந்திரமாக உணர்ந்தேன். எங்கள் கிராமத்தில் எப்போதும் நாங்கள் இதேபோல் சுதந்திரமாக இருந்தால் நன்றாக இருக்கும்,” என்றார் மகிழ்ச்சியுடன்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *