
ராமநாதபுரம் அருகே கிராம சாலைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் சூட்டப்பட்டதாகக் கூறி அங்கே பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. ஆனால் அந்த பெயர் பலகையை வருவாய் துறையினர் உடனே அகற்றிவிட்டனர்.
அங்கே நிர்மலா சீதாராமன் சாலை என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது ஏன்? அதனை வைத்தது யார்? வருவாய்த் துறையினர் உடனடியாக பெயர்ப்பலகையை அகற்றியது ஏன்?
பத்து ஆண்டு கால மக்கள் பிரச்சனை
ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாந்தை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய ரயில்வே பாதையை மக்கள் கடந்து செல்வதற்காக 10 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த ரயில்வே சுரங்க பாதையை கடந்து லாந்தை, கண்ணந்தை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
ரயில்வே சுரங்க பாதையில் மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்வே சுரங்க பாதையில் கழுத்தளவுக்கு தண்ணீர் நிரம்பியது.
இதனால் ரயில்வே சுரங்க பாதையை கடந்து கிராமத்திற்கு செல்ல முடியாததால் லாந்தை, கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த நவம்பர் மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 18ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது லாந்தை கிராம மக்கள் சாலை ஓரம் நின்றபடி நிதி அமைச்சர் காரை நிறுத்தினர்.

நிதியமைச்சரை கையோடு அழைத்து சென்ற கிராம மக்கள்
காரில் இருந்து இறங்கிய நிதியமைச்சரை கிராம மக்கள் அழைத்து சென்று ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள தண்ணீரை காட்டினர். தண்ணீர் தேங்கி நிற்பதால் கிராம மக்கள் கடும் சிரமப்படுவதால் மேம்பாலம் கட்டி தர மத்திய ரயில்வே அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மழை காலங்களில் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் லாந்தை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடம் கோரிக்கை வைத்தார்.
நிதி அமைச்சரின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 28ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அப்பகுதியில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டி தரப்படும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என அறிவித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது “X” பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
மேம்பாலம் கட்டி தர கோரி கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நிதி அமைச்சரிடம் மனு அளித்த சில நாட்களில் மேம்பாலம் அமைத்து தருவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அக்கிராம மக்கள் புதிதாக அமைய உள்ள மேம்பாலத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை சூட்டுவதாக லாந்தை ஊராட்சி கூட்டத்தில் ஒருமனதாக மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
பின்னர் ஊராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலையின் பெயர் பலகையின் புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் லாந்தை கிராம மக்கள் சிலர் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்த நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஆவணங்களை காட்டி நன்றி தெரிவித்தனர்.
போலி பெயர் பலகை புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை
இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிர்மலா சீதாராமன் சாலை என பெயர் பலகை லாந்தை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய் கிழமை மாலை முதல் புகைப்படத்துடன் கூடிய செய்தியை சமூக வலைதளங்களில் பாஜக மாநில பொறுப்பாளர்கள், ஊடகப் பிரிவு மற்றும் பாஜகவினர் அதிகளவு பதிவு செய்து வந்தனர்.
அதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பெயர் பலகை இதுவரை வைக்கப்படவில்லை, பாஜக பதிவு செய்துள்ள புகைப்படம் ‘கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி’ பெயர் பலகை . அதை எடிட் செய்து ‘நிர்மலா சீதாராமன் சாலை’ என புகைப்படத்தை பாஜகவினர் பெய்யாக பதிவிட்டு வருவதாக பதிவு செய்து வந்தனர். இது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இதையடுத்து புதன்கிழமை மாலை கிராம பொதுமக்கள் சிலர் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் முன்னிலையில் ராமநாதபுரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை லாந்தை பேருந்து நிறுத்தம் அருகே நிர்மலா சீதாராமன் சாலை என்ற பெயர் பலகையை வைத்தனர்.
நிர்மலா சீதாராமன் சாலை என்ற பெயர் பலகை அரசு முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி வியாழக்கிழமை காலை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் பெயர் பலகையை அகற்றி எடுத்து சென்றனர்.

அரசியல் லாபத்திற்காக சிலர் செய்வதாக சந்தேகம்
கிராம மக்கள் தங்கள் கூட்டத்தில் மேம்பாலத்துக்கு தான் நிர்மலா சீதாராமன் பெயர் வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றியதாக லாந்தை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் தெரிவிக்கிறார்.
பெயர் பலகை வைப்பது தொடர்பாக கிராம மக்கள் எடுத்த முடிவு குறித்து பிபிசி தமிழிடம் சுரேஷ் பேசுகையில், “ரயில்வே மேம்பாலம் கட்டுவது தொடர்பாக பல முறை சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம் என பலரிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கைகள் எடுத்தார். மேம்பாலம் கட்டித்தரப்படும் என அறிவிப்பு வெளியானதும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மேம்பாலத்துக்கு அவர் பெயர் சூட்டுவது என கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஊராட்சி சாதாரணக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.
அதற்காக கிராம மக்கள் நிதியமைச்சருக்கு மரியாதை நிமித்தமாக துண்டு போட முயன்ற போது அதனை வாங்க மறுத்த அவர், லாந்தை ரயில்வே சுரங்கப் பாதையை மூடி விட்டு புதிய மேம்பாலம் கட்டி தந்த பிறகு, இந்த துண்டை உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்றார்” என்றார்.
மேலும், “ கடந்த புதன்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலை அருகே ஊர் மக்கள் சிலர் நிர்மலா சீதாராமன் சாலை என்ற ஒரு பெயர் பலகையை வைத்தனர். வியாழக்கிழமை காலை அனுமதியின்றி பெயர் பலகை வைக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் அதை அகற்றினர்.
ஆனால் கிராம மக்கள் சாலைக்கு பெயர் வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை, புதிதாக கட்டப்பட இருக்கும் மேம்பாலத்திற்கு நிதி அமைச்சர் பெயர் சூட்டுவதாக மட்டுமே முடிவு செய்து இருந்தோம். இதில் ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு செய்திருப்பதாக நினைக்கிறேன்” என்றார் சுரேஷ்.

பெயர் பலகைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை
ராமநாதபுரத்தில் சாலைக்கு நிர்மலா சீதாராமன் என்று பெயர் வைத்தது பாஜகவல்ல என்று பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் கூறுகிறார்.
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “லாந்தை கிராம மக்களின் பல ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம் என யாரும் முன்வராத நிலையில் மத்திய நிதி அமைச்சரிடம் மனு அளித்த குறுகிய நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. மகிழ்ச்சியில் மக்கள் தாமாக முன்வந்து நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பெயரை மேம்பாலத்திற்கு சூட்ட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்றும் இதற்கும் மாவட்ட பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை லாந்தை சாலைக்கு நிதி அமைச்சர் பெயரில் பெயர் பலகை வைக்கும் நிகழ்ச்சி உள்ளது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கிராம மக்கள் சிலர் கேட்டு கொண்டனர். அதன் அடிப்படையில் நானும், பாஜக பிரமுகர்கள் சிலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
பெயர் பலகை வைப்பதற்கு முன் அனுமதி பெற்று இருக்கிறீர்களா என கிராம மக்களிடம் கேட்டதற்கு ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தான் பெயர் பலகை வைப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
நிதியமைச்சர் பெயரில் பெயர் பலகை வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதுள்ள அரசு, பொது மக்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல், மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பெயர் பலகையை அங்கிருந்து அகற்றியுள்ளது” என்று தரணி முருகேசன் மேலும் தெரிவித்தார்.
“பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என்பதை ஊர் பொதுமக்கள் கூடி முடிவெடுப்பார்கள் இதில் பாஜக எந்த விதத்திலும் தலையிடாது” என தரணி முருகேசன் தெரிவித்தார்.
முன் அனுமதி பெற்று பெயர் பலகை வைக்கலாம்
பெயர் பலகை ஏன் அகற்றப்பட்டது என ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு பிபிசி தமிழ் கேட்டபோது, “ கிராம சாலைக்கு பெயர் சூட்ட, கிராம சபை கூட்டம் அல்லது ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தை ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் அதனை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பார்.
பின் மாவட்ட ஆட்சி தலைவர் பெயர் வைக்கலாம் என முடிவு செய்து அதற்கான அனுமதி பெற அரசுக்கு அனுப்பி வைக்கப்பார். அரசு புதிய பெயரை அரசாணையில் வெளியிடும். அப்படி வெளியிடப்பட்டால் மட்டுமே சாலையின் பெயர் மாற்றப்படும்.” என்று விளக்கிக் கூறினார்.
மேலும், “லாந்தையில் பெயர் பலகை வைக்கப்பட்ட சாலையின் பெயர் மங்கம்மாள் சாலை. இது தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே உள்ளது. எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு ஊராட்சிகள் உதவி இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் சாலைக்கு புதிய பெயர் வைத்ததால் பெயர் பலகை வருவாய்த்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்டது” என்றார்.
மாவட்ட நிர்வாகத்திடம் லாந்தை கிராம மக்கள் உரிய அனுமதி கோரினால் சாலைக்கு புதிய பெயர் வைப்பது குறித்து வருவாய்த்துறையினர் பரீசிலித்து முடிவு எடுக்கும் என கோபு தெரிவித்தார்.
பட மூலாதாரம், X/Nirmala sitaraman
தேசிய நெடுஞ்சாலையில் தனி நபர் பெயர் வைக்கலாமா?
தேசிய நெஞ்சாலையின் பகுதிகளுக்கு பொதுமக்கள் எந்த விதத்திலும் பெயர் வைக்க முடியாது, ஆனால் நெடுஞ்சாலைக்கு அருகிலும் வேறு இடங்களில் இருக்கும் உட்புறச் சாலைகளுக்கும் உரிய அனுமதி பெற்று பெயர் சூட்டலாம் என்று, தேசிய நெடுஞ்சாலை துறையில் செயல் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற செல்வகுமார் தெரிவித்தார்.
இந்த விவகார்ம குறித்து பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட அவர், “தேசிய நெடுஞ்சாலையில் தனி நபர் பெயரோ அல்லது புதிதாக பெயரோ சூட்ட முடியாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி கிராம சாலைகளுக்கு மட்டுமே புதிதாக பெயர் சூட்டிக் கொள்ளலாம்.
லாந்தை பகுதியில் நடந்தது தொடர்பாக நான் விசாரித்த வகையில் அவர்கள் பெயர் பலகை வைத்துள்ள இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ள மங்கம்மாள் சாலை. அந்த சாலை ஊராட்சி சாலையாக உள்ளதால் அந்த சாலைக்கு அவர்கள் உரிய அனுமதி பெற்று பெயர் வைக்கலாம்.
தேசியத் தலைவர்கள் பெயரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதிக்கு வைக்க விரும்பினால் தேசிய நெடுஞ்சாலை தலைமை அலுவலகத்திற்கு NHAI கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை உயர்மட்ட அதிகாரிகள் கலந்தாலோசித்து ஒப்புதல் பெற்று வைக்கலாம். ஆனால் சமீப காலங்களில் இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய பெயர் வைத்ததாக தெரியவில்லை.” என்றார்.

“பாஜக அரசின் தேர்தல் நேரத்து அரசியல் நாடகம் அவமானகரமானது”
இந்த விவகாரம் பேசுபொருள் ஆனதன் விளைவாக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இது குறித்த அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் லாந்தை ரயில்வே பாலமாவது மதுரை எய்ம்சை போல, ராமநாதபுரம் விமான நிலையத்தை போல, வெறும் அனுமதியோடு நின்று விடாமல் பணிகள் துவங்கப்பட்டு மக்கள் அவதியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
லாந்தை ரயில்வே மேம்பாலம் அமைத்து தர கோரி பல ஆண்டுகளாக,தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததாகவும், இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
“ பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவும், துறை சார்ந்த அதிகாரிகள் வலியுறுத்தியும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அப்போதெல்லாம் கள்ள மவுனம் சாதித்து வந்த பாஜக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ராமநாதபுரம் வருகை தந்த போது மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியது ஒன்றிய அரசின் ரயில்வே துறையின் கட்டாய பொறுப்பு. அது மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல, ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதனை இத்தனை ஆண்டு காலம் செய்யாமல் மக்களை அலைக்கழித்தது ஒன்றிய பாஜக அரசு.
நீங்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் அதே நாடாளுமன்றத்தில் நான் அனைத்து கூட்டத்தொடர்களிலும், பலமுறை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன், அப்போதெல்லாம் அந்த கோரிக்கைகள் ஏன் உங்கள் செவிகளுக்கு வரவில்லை??
தற்போது தேர்தல் அரசியலுக்காக நீங்கள் நடத்தும் அரசியல் நாடகம் அவமானகரமானது. இது பெருமைப்படக்கூடிய சாதனை அல்ல, வருத்தப்பட வேண்டிய விஷயம்’” என தனது அறிக்கையில் பாஜகவுக்கு கண்டத்தையும் பதிவு செய்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
