
பட மூலாதாரம், Getty Images
சனாதனம் தான் மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை நடத்தக் காரணமாக இருந்தது என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சனாதனம் தொடர்பான சர்ச்சை குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “சனாதன தர்மம் தான் மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தை நடத்தக் காரணமாக இருந்தது” என்றார்.
தீண்டாமைக்கு எதிராகப் போராட காந்தியை சனாதனம் தூண்டியது என்று பிரதமர் மோதி கூறியிருப்பது, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சனாதனம் பற்றிய வாதத்திற்கு நேர் எதிரானது.
சனாதன சர்ச்சையை மகாத்மா காந்தியுடன் இணைத்ததன் மூலம், பிரதமர் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக மேலும் கூர்மையாக்கியுள்ளார். சனாதனம் சாதிய பேதங்களை ஊக்குவித்ததா அல்லது சமூக சீர்திருத்தங்களை தூண்டியதா என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவில் இந்து மதத்தின் ஆதிக்கம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் குறித்து வெளியான அண்மைய புத்தகத்தின் ஆசிரியர் மனோஜ் மிட்டா, “அடிப்படைவாதிகளை சமாதானப்படுத்தவே தன்னை ஒரு சனாதனியாக காந்தி காட்டிக் கொண்டார்,” என்று எழுதியிருக்கிறார். ஆனால், அவர் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்த உத்வேகம் பெற்றது சனாதனத்தின் மூலம் என்ற கருத்தில் கண்டிப்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படலாம்.
1920ல், நாக்பூரில் தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியபோது, அதில் காந்தி பெரும் பங்கு வகித்ததாக மனோஜ் மிட்டா கூறுகிறார்.
“சமூகத்தின் ஒரு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக மாற்றியதற்காக காந்தி பழைய மதப்பிரிவுகளை அழிக்கப் போராடினார்.”
தீண்டாமைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் அந்த வரலாற்றுத் தீர்மானம், ‘இந்து மதத்தை தீண்டாமைப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள இந்து சமுதாயத்தை வழிநடத்துபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’ என்ற சொற்களுடன் தொடங்கியது.
அந்தக் காலத்தில் நிலவிய சாதிப் பாகுபாட்டின் கொடூரமான கோர முகத்தை வரைந்து, ‘சமூகத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை நடத்தும் முறையைச் சீர்திருத்த மதத் தலைவர்களை உரிய மரியாதையுடன் காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. வளர்ந்து வரும் ஆசையை நிறைவேற்ற உதவுங்கள்’ என்ற சொற்களுடன் தீர்மானம் முடிந்தது.
தீண்டாமை பற்றி காந்தியின் சிந்தனை மிகத் தெளிவாக இருந்தது. ஆனால், காந்தி தனது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு சாதி அமைப்பின் மையத்தை அதாவது வர்ணாசிரம அமைப்பை நம்பியிருந்தார் என்பதை மனோஜ் மிட்டா ஆதாரத்துடன் காட்டுகிறார்.
1924-25 கால கட்டத்தில் வைக்கம் போராட்டத்தை காந்தி ஆதரித்தார். ஏனெனில் அந்தப் போராட்டம் தொடக்கத்தில் தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதை வலியுறுத்தவில்லை. மாறாக, கோயிலுக்குச் செல்லும் சாலையை பயன்படுத்த அனுமதி கோரியதாக மட்டுமே இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
தீண்டாமைக்கு எதிராகப் போராட மகாத்மா காந்தியை சனாதனம் தூண்டியது என்று பிரதமர் மோதி கூறியிருப்பது, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சனாதனம் பற்றிய வாதத்திற்கு நேர் எதிரானது.
மனோஜ் மிட்டாவின் பார்வையில், ‘1932ல் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, தலித்துகளுக்கு கோவில்களில் நுழையும் உரிமை வழங்குவது குறித்த காந்தியின் கருத்து மாறியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தீண்டத்தகாதவர்கள் தனித் தேர்தல் முறைக்கான உரிமையை விட்டுக் கொடுத்தனர். அதேசமயம் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இந்த உரிமையைப் பெற்றனர். இதற்குப் பிறகுதான் தீண்டத்தகாதவர்களுக்காக தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்தி உணர்ந்தார்.
அப்போதும் காந்தி தீண்டத்தகாதவர்களுக்காக குரல் எழுப்பிக்கொண்டு தான் இருந்தார். தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறக்கும் திட்டத்தை வெவ்வேறு கோவில்களுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், இது உள்ளூர் பக்தர்களிடையே வாக்கெடுப்புக்குப் பிறகு முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, தலித்துகளுக்கு உரிமை வழங்கும் விஷயமாக கருதக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தலித்துகளுக்கு கோவில்களில் நுழையும் உரிமையை அளிக்கும் சட்ட சீர்திருத்தத்தை காந்தி வலியுறுத்தியபோது, மதன் மோகன் மாளவியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுத்தாளர் மனோஜ் மிட்டா கூறுகிறார்.
தலித்துகளுக்கு கோவில்களில் நுழையும் உரிமையை அளிக்கும் சட்ட சீர்திருத்தத்தை காந்தி வலியுறுத்தியபோது, மதன் மோகன் மாளவியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மனோஜ் மிட்டா கூறுகிறார்.
யாரும் கோவிலுக்குள் நுழைவதில் எந்தவிதமான அரசுத் தலையீட்டுக்கும் எதிரானதாக மதன் மோகன் மாளவியாவின் நிலைப்பாடு இருந்தது.
இருப்பினும், காந்தியால் வலியுறுத்தப்பட்ட மசோதாவில், இறுதி முடிவு உயர் சாதி இந்துகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மதன் மோகன் மாளவியா 23 ஜனவரி 1933 அன்று வாரணாசியில் ‘சனாதன தர்ம மகாசபை’க்கு அழைப்பு விடுத்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், UDHAY/X
சனாதனம் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து அது பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது.
உதயநிதி ஸ்டாலின் கருத்தால் சர்ச்சை
சனாதனம் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து சனாதனம் குறித்த விவாதம் தொடங்கியது. சனாதனத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் அவர் ஒப்பிட்டார்.
உதயநிதியின் இந்த பேச்சு தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையே அரசியல் ரீதியிலான வாத-விவாதங்கள் தொடங்கின. சனாதனம் சாதி அமைப்பை நம்புகிறதா, சமத்துவத்திற்கு எதிரானதா என்பதுதான் இங்கே கேள்வியாக உள்ளது.
சனாதனம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து, மூத்த மொழியியலாளர் மற்றும் மானுடவியலாளரான டாக்டர் கணேஷ் நாராயணதாஸ் தேவி கூறுகையில், காலப்போக்கில் சனாதனத்தின் கருத்து மாறி வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளிக்கும் போது, ”18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வங்காளப் பகுதியில் ஒரு விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்திற்கு இரண்டு முகங்கள் இருந்தன. ஒரு பக்கம் ‘நுதன்’ வர்க்கம் இருந்தது. மறுபுறம் சனாதனத்துக்கான ஆதரவாளர்கள் இருந்தனர். நுதன் வர்க்கத்தின் பக்கம் இருந்த அனைத்து ஆதரவாளர்களும், அனைவருக்கும் ஆங்கிலத்தில் கல்வி, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, மற்றும் குழந்தை திருமண ஒழிப்பு ஆகியவை அடங்கியிருந்தன. அதே நேரத்தில் சனாதன ஆதரவாளர்கள் இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சமூகத்தை மாசுபடுத்தும் என்று கூறினர்,” என்றார்.
மேலும் பேசுகையில், “இந்த விவாதம் வங்காளத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. அதன் பிறகு அங்கு மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது. எனவே, 18 ஆம் நூற்றாண்டில் சனாதனம் என்ற சொல் பண்டைய மரபுகளுக்கு பயன்படுத்தப்பட்டபோது, அடுத்த சகாப்தத்தில் இதில், பல்வேறு வகையான மரபுகள் அதில் சேர்க்கப்பட்டு மாற்றத்துக்கு உள்ளானது. இதில் வேதங்கள், உபநிடதங்கள், மத நூல்கள் மற்றும் மதம் தொடர்பான அனைத்து வகையான பழக்கவழக்கங்களும் அடங்கும்,” என்றார் அவர்.
சனாதனத்தின் மரபுகள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானவை என்கிறார் டாக்டர் கணேஷ் நாராயணதாஸ் தேவி. மேலும், ஆனால், சனாதனம் எந்த ஒரு மரபையோ அல்லது விளக்கத்தையோ நம்பிய கருத்தல்ல என்றும் இருப்பினும், 18 ஆம் நூற்றாண்டில் தான், இந்த மரபுகளில் ஒன்றான, சாதி அமைப்பு, சனாதனத்துடன் உறுதியாக இணைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சாதீய ஏற்றத்தாழ்வுகளைக் களையும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் கணேஷ் தேவி கூறுகிறார்.
19-20 ஆம் நூற்றாண்டில் சனாதனம், சாதி அமைப்பு மற்றும் கொந்தளிப்பு
சனாதனம் தொடர்பான விவாதத்தின் போது உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை சமூக நீதி மற்றும் சம உரிமைகளுக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார்.
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி பெற்றபோது, சனாதனவாதிகள் அல்லது சீர்திருத்தவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட சில சமூகங்களில் இருந்து வெவ்வேறு குழுக்கள் தோன்றின. டாக்டர் கணேஷ் தேவியின் பகுப்பாய்வின் படி, நவீன யுகத்தின் இந்த விவாதங்களில் ஒரு முக்கிய பிரச்சினை சாதி அமைப்பு மற்றும் அது உருவாக்கிய சமத்துவமின்மை என்பதைக் காட்டுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காண பல்வேறு பகுதிகளில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான வி.கீதா சமூக இயக்கங்களின் வரலாற்றுச் சூழல் குறித்த ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். சனாதனம் உண்மையில் சாதி அடிப்படையிலான அமைப்பு என்று அவர் கூறுகிறார். இது சாதி அமைப்பு இல்லாமல் கூட இருக்கக்கூடிய மதமோ, நம்பிக்கையோ அல்ல. சனாதனத்திற்கும் ஜாதி அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூற முடியாது என்கிறார் அவர்.
வி. கீதா இதைப் பற்றி மேலும் பேசுகையில், “சனாதனம் என்ற வார்த்தையே அதன் உண்மையை வெளிப்படுத்துகிறது. சனாதனம் என்றால் நித்தியம், நிரந்தரமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பழைய இந்து “மக்கள் பாரம்பரியங்களில் ஆர்வம் அதிகமாகத் தூண்டப்பட்ட போது சனாதனம் என்ற கருத்து புதிய வலிமையைப் பெற்றது. அப்போது தான் நாடு முழுவதும் சனாதன சபைகள் நிறுவப்பட்டன,” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், © CORBIS/CORBIS VIA GETTY IMAGES
கடந்த காலங்களில் தோன்றிய பல்வேறு அமைப்புகள் சாதீயத்துக்கு ஆதரவாகவே இருந்துவந்தன.
“இந்த அனைத்து அமைப்புகளும் பழைய மற்றும் பழமைவாத கருத்துகளை ஆதரிக்கும் அமைப்புக்களாகவே இருந்தது மட்டுமின்றி, சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதன் மூலம் ஏதோ ஒரு வடிவத்தில் சாதி அமைப்பை ஆதரித்தன. இந்த சனாதன சபைகள் இந்து மதத்தை ஒரே ஒரு விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்தின. இது மற்ற மதங்கள் குறிப்பாக வட இந்தியாவில் இஸ்லாம் மதத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில் இருந்த நிலையில், சனாதனம் என்ற கருத்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சில அறிவு சார்ந்த பிராமணர்களிடையே மட்டுமே பிரபலமாக இருந்தது.
வேத காலத்தில் சனாதனத்தில் வர்ண ஆசிரம அமைப்பு நிறுவப்பட்டது என்கிறார் டாக்டர் கணேஷ் தேவி. இந்த வர்ண அமைப்பு இன்றைய சாதி அமைப்பிலிருந்து வேறுபட்டது என்றும், சாதி அமைப்பு இடைக்காலத்தின் பிற்பகுதியில் வளர்ந்தது என்றும் அவர் கூறுகிறார்.
டாக்டர் தேவி மேலும் பேசுகையில், “சாதி மற்றும் வர்ணத்தின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவை. சனாதன காலத்தில் எழுதப்பட்ட பண்டைய நூல்களில் வர்ணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வர்ணம் என்பது வர்க்கம். அது சாதி அல்ல. வர்ணாஷ்ரம அமைப்பு என்பது போலி-ஆன்மிக அடிப்படையில் சமூக வகைப்படுத்தும் முயற்சியாகும். அது மறுபிறவியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், சாதி அமைப்பு தொழிலை அடிப்படையாகக் கொண்டது. அது ஆன்மீக அடிப்படையிலானது அல்ல. அது தெய்வீக, வேத அல்லது உபநிடத அடிப்படை எதையும் பெறவில்லை,” என்கிறார்.
மேலும், சாதி அமைப்பு வளர்ந்தவுடன், அது வேரூன்றி, இது சமூகத்தில் பரவலான ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்றும், இதற்கு ஏன் எதிர்ப்பு தொடங்கியது என்றால், இந்த அமைப்பின் கீழ், சில சாதிகள் சமூகத்தில் தங்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை அளித்து மற்றவர்களை ஒடுக்கத் தொடங்கின என்பதால் தான் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
19-ம் நூற்றாண்டில் சாதி அடிப்படையிலான அமைப்புக்கு எதிராக சம உரிமை கோரும் இயக்கங்கள் படிப்படியாக நாடு முழுவதும் தோன்றின.
இருப்பினும், சாதி அடிப்படையிலான அமைப்புக்கு எதிராக சம உரிமை கோரும் இயக்கங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாகின. உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள வரகாரி பாரம்பரியம் ஆன்மீக உலகில் சமத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, சாதி அமைப்புக்கு எதிரான எதிர்ப்பு ஒரு சமூக இயக்கமாக உருவெடுத்தது.
மகாத்மா ஜோதிபா பூலே சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு எதிராக தனது குரலை வலுவாக எழுப்பினார் என்பதுடன், அதற்கு மாற்றாக ‘சர்வஜனிக் சத்திய தர்மத்தை’ முன்வைத்தார். டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்தினார்.
உண்மையில், சாதி அமைப்பு மற்றும் சாதியின் அடிப்படையிலான பாகுபாடு கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஆனால், சனாதனம் சாதி அமைப்பை ஆதரிக்கிறது என்ற கூற்றைப் பற்றி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் என்ன சொல்கிறது என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.
ராஜ்யசபா எம்பியும் ஆர்எஸ்எஸ் நிறுவனருமான டாக்டர் கேபி ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் ராகேஷ் சின்ஹா, சனாதனம் சாதி அமைப்பை ஆதரித்து வருகிறது என்ற கூற்றை மறுக்கிறார். அவர், “சனாதனம் ஒரு தொடர்ச்சியான முற்போக்கான செயல்முறை. சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை சனாதனத்தின் அடிப்படை கூறுகள்,” என்கிறார்.
தொடர்ந்து பேசிய ராகேஷ் சின்ஹா, “சமுதாயத்தில் பல பிரிவுகள், வாழ்க்கை முறைகள் மற்றும் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன. யாரும் அதை எதிர்ப்பதில்லை. எனவே, சனாதனம் மற்றும் இந்து மதம் என்று வேறுபடுத்துவது அடிப்படையில் தவறு. ஏனெனில், இந்து மதத்தின் அடிப்படைக் கூறு சனாதனம்,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 7ஆம் தேதி நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த சமூகங்களுக்காக பிற சமூகங்கள் ஒரு 200 ஆண்டுகளுக்கு கொஞ்சம் கஷ்டப்பட ஏன் கேட்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், ராகேஷ் சின்ஹா, “சமத்துவக் கருத்து சனாதனத்தில் உள்ளார்ந்ததாக இருப்பதாகக் கூறுவதே சரி. ஆனால், ‘சனாதனம்’ பற்றிய விளக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமீபத்திய சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதியின் யதார்த்தத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது,” என்கிறார்.
சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்தால் கொந்தளிப்பு ஏற்பட்ட போது, செப்டம்பர் 7ஆம் தேதி நாக்பூரில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “இரண்டாயிரம் ஆண்டுகளாக சக மனிதர்களை நாம் அடக்கி வைத்திருந்தோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாக சில சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ள போது, இருநூறு ஆண்டுகளுக்கு அவர்களுக்காக கொஞ்சம் கஷ்டப்படும்படி நாம் ஏன் மற்றவர்களைக் கேட்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் நோக்கரான சுஹாஸ் பால்ஷிகர் மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை முரண்பாடாக பார்க்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “சனாதனத்தைப் பற்றி உரக்கப் பேசுபவர்கள், சனாதனத்தை உதயநிதி கடுமையாக எதிர்த்தபோது பல வகையில் எதிர்க்கத் தொடங்கினர். மோகன் பாகவத் சனாதனத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார். தற்போதுள்ள சாதி அமைப்புக்கு அவர்களிடம் தீர்வு இல்லை. இதனால்தான் மோகன் பாகவத் ஒருபுறம் சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை அளிக்க வலியுறுத்துகிறார். அதே நேரம் மறுபுறம் சனாதனத்தையும் ஆதரிக்கிறார்.” என்றார்.
சனாதனம் குறித்த இந்த விவாதம், மூன்று மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலின் முக்கிய பிரச்சினையாக நிச்சயம் மாறும். தற்போது பிரதமர் மோதியும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன் இந்த விவகாரத்தை பெரிதாக்கியுள்ளார். இதன் மூலம் இப்போது தேர்தல் கூட்டங்களிலும், பேச்சுகளிலும் இந்தப் பிரச்னையே ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதே உண்மை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்