பட மூலாதாரம், UGC
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப் படுகொலை செய்ய வேண்டும் எனறு மட்டக்களப்பு பகுதியிலுள்ள மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் என்ற புத்த பிக்கு தெரிவித்த கருத்து, இன்று பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கருத்து பாரதூரமானது எனவும், அந்த புத்த பிக்கு கைது செய்யப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
வீதியின் நடுவே இருந்தவாறு இனவாதத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக அவர் தெரிவித்த கருத்து, சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு கள்ளியன்காடு பகுதியில் வீதியோரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இந்த கல்லறை அமைந்துள்ளதாக கூறப்படும் இடத்திற்கு வருகை தந்தவாறே, அவர் தமிழர்களுக்கு எதிராக இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.
மட்டக்களப்பு நிர்வாகத்திலுள்ள பெரும்பான்மையினர் தமிழர்கள் என்ற அடிப்படையில், சிங்களவர்களின் அடையாளங்களையே தமிழர்கள் இல்லாது செய்வதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியம் போன்ற அரசியல்வாதிகளே, சிங்களவர்களின் அடையாளங்களை அழிப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான புத்த பிக்குவின் இனவாத கருத்து இலங்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமணரத்ன தேரர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
தமிழர்களுக்கு எதிராக கருதுக்களை வெளியிட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு – மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடிதமொன்றின் ஊடாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஏன் இதுவரை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன், போலீஸ் மாஅதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலீஸ் மாஅதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியனை, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ச்சியாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட மூலாதாரம், MANO GANESAN
தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட அனைவரும் கவனத்திற்கு எடுத்து, தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.
”மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் இனவாதத்தை கக்கியிருக்கின்றார். அதற்கு இடமளிக்க முடியாது. நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். நடுத் தெருவிற்கு வந்து, தமிழர்களை வெட்ட வேண்டும். கொல்ல வேண்டும் என்று பேச்சினாலும், சைகையினாலும் செய்கின்றார்; சொல்கின்றார். இது என்ன? மனநோயா?
அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவரின் தாயின் மயான பூமியிலே ஏதோ நடந்து விட்டதாக சொல்கின்றார். அது உண்மையானால், அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டுகின்றார். மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக குற்றஞ்சாட்டுகின்றார்.
அதற்கு வேறு வழியிருக்கின்றது. போலீஸில் புகார் செய்யலாம். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பேசலாம். ஒரு முடிவு காணலாம். வழியிருக்கின்றது. அதனை செய்யாமல் நடுத் தெருவிற்கு வந்து தமிழர்களை கொல்வேன் என்று சொல்ல முடியாது.
ஐ.சி.சி.பீ.ஆர் சட்டம் என்று ஒன்று நாட்டில் இருக்கின்றது. அதன் பிரகாரம், எவரது இனத்திற்கு எதிராகவும் பேச முடியாது. இனங்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்த முடியாது. இந்த அம்பிட்டிய தேரரும் கைது செய்யப்பட்டே ஆக வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். நாட்டிலுள்ள பௌத்த மகாநாயக்க தேரர்களும் இதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
அவரை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்ல, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதை கவனத்தில் எடுக்க வேண்டும். நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும். ஜனாதிபதி வழமை போல இதையும் கடந்து போகக்கூடாது என கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், CWC MEDIA
”தமிழ் மக்களை இலக்கு வைத்து அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் இனக்குரோதத்தை விதைக்கும் வகையில் உள்ளது” என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பு
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு – அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மாஅதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் தலைமையகத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மேலும், குறித்த தேரரின் கடந்த கால செயற்பாடுகள் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால் அது தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், தனக்கும் அறிக்கையொன்றை வழங்குமாறும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
”தமிழ் மக்களை இலக்கு வைத்து அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் இனக்குரோதத்தை விதைக்கும் வகையில் உள்ளதுடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
கொரோனா பெருந்தொற்றால் எமது நாட்டு பொருளாதாரம் சரிந்தது. அதன்பின்னர் அரசியல் குழப்பத்தால் அதலபாதாளத்திலேயே விழுந்தது. எனவே, அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் இந்நாட்டை கட்டியெழுப்பலாம்.
நாட்டில் முன்னேற்றத்துக்கு இன, மத நல்லிணக்கம் மிக முக்கியம். இந்நிலையில் இனவாதம் கக்கி, இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் குறித்த தேரர் செயற்பட்டு வருகின்றார்.
கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட முற்படுகின்றார். எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், RAJKUMAR RAJEEVKANTH
தேரரின் பேச்சுக்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ராஜ்குமார் ரஜீவ்காந்த் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தமிழர்களுக்கு எதிராக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
வடக்கு கிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் ராஜ்குமார் ரஜீவ்காந்த் இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
”குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு முன்னிலையில், அவரின் தனிப்பட்ட பிரச்னைகளை பொது பிரச்னையாக மாற்றி, தெற்கில் வசிக்கக்கூடிய அத்தனை தமிழர்களையும் தான் துண்டு துண்டாக வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.
இந்த நாட்டை பொருத்த வரையில் இன, மதவாதங்களை தூண்டுபவர்கள் மீது, குறிப்பாக பௌத்த பிக்குகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது. இங்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் முதல் ஐ.சி.சி.ஆர்.பி வரை சாதாரண மக்கள் மீது பாவிக்கப்படுகின்றது.
எனக்கு தெரிந்த பல பேர், முகப்புத்தக பதிவிற்காக மூன்று வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, நான் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். என்னுடன் மேலும் சிலர் வருகைத்தந்திருக்கின்றார்கள். அவர்களும் இதே கோரிக்கையை விடுத்திருக்கின்றார்கள். உடனடியாக அவர் கைது செய்யப்படவேண்டும். இந்த கைது இடம்பெறும் வரை இதற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம்.” என ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு மங்களாராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்த நிலையிலேயே, தற்போது தமிழர்களை வெட்டுவதாக கூறி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பௌத்த விகாரையான மங்களாராமய விகாரையின் விஹாராதிபதியாக (பிரதான பிக்கு) அவர் செயற்பட்டு வருகின்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
