
பட மூலாதாரம், Sriram Murali
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (NHM) மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ள 19 உலகளாவிய திறமையாளர்களில் இந்திய புகைப்படக் கலைஞர்கள் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.
உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில், கோடை இரவில் அந்த அதிசயம் நடக்கிறது.
ஆண்டுதோறும், கோடையில் மழை பெய்தவுடன், டாப்சிலிப் மற்றும் நெல்லியாம்பதி காப்புக்காட்டில், இரவு நேரங்களில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளால், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வனம் ஒளிர்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி ஆனமலை புலிகள் காப்பக பகுதியில், மின்மினிப் பூச்சிகளால் இரவில் ஒளிரும் வனத்தை, மனதைக் கவரும் வகையில் புகைப்படமாக எடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் ‘நடத்தை: முதுகெலும்பில்லாத’ பிரிவில் “உலகின் சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர்” என்ற விருதைப் பெற்றுத் தந்துள்ளது. 16 நிமிடங்களுக்கு மேல் மயக்கும் மின்மினிப் பூச்சிகளை 19 விநாடிகள் கொண்ட 50 காட்சிகளாக அவர் பதிவு செய்துள்ளார்.

பட மூலாதாரம், Sriram Murali
கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் முரளி. இவரது தந்தை எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். தாய் உமா இல்லத்தரசி. இரு சகோதரர்கள் இருக்கின்றனர். பொள்ளாச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின், திருச்சி ரீஜனல் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் எம்.டெக் படித்துள்ளார். அதன் பிறகு கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
விருது கிடைத்துள்ளது தொடர்பாக ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சி வல்லுநர் ஸ்ரீராம் முரளி கூறும்போது, “வானியலின் மீது தீராத ஆர்வம் அமெரிக்காவில் படிக்கும்போது ஏற்பட்டது. லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ஓர் இரவில் பார்க்கும்போது, இரவின் வெளிச்சத்தை ரசிக்கவும், ஆராயவும் என்னைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து இரவில் அதிக நேரம் நட்சத்திரங்களோடு செலவிட ஆரம்பித்தேன். அதுவே மின்மினி பூச்சியின் ஆராய்ச்சிக்கு உதவியது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலாந்தி வனச்சரகத்திற்கு வன அதிகாரிகளோடு கடந்த 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மாலை 5 மணிக்குச் சென்றோம். ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த எதிர்பார்ப்போடு, மின்மினிப் பூச்சிகளைப் பார்க்க கிட்டத்தட்ட இரண்டறை மணிநேரம் காத்திருத்தோம்.

பட மூலாதாரம், Sriram Murali
மின்மினிகள் வருமா, வராதா என்ற கேள்விகளோடும், குழப்பத்தோடும் ஒவ்வொரு நிமிடமும் கடக்க, ஏழரை மணியளவில், காட்டில் வெளிச்சம் மெல்ல, மெல்ல பரவத் தொடங்கியது.
கீழே அமர்ந்திருக்கும் பெண் பூச்சிகளைக் கவர, ஆண் பூச்சிகள் வெளிப்படுத்திய ஒளி வெள்ளத்தில் காடே விழாக் கோலத்தில் இருப்பது போலக் காட்சியளித்தது. பல கிலோமீட்டருக்கு கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கார விளக்குகள் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி மின்மினிப் பூச்சிகளால் காட்டில் “உயிர் ஒளிர்வு” உண்டாகியது,” என்று அந்தத் தருணத்தை விவரித்தார் ஸ்ரீராம் முரளி.
மேற்கொண்டு விவரித்தவர், “ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் ஆண் மின்மினி பூச்சிகள் இந்த உயிர் ஒளிர்வுகளை வைத்து, தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டறிய இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்துகின்றன.
தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை லார்வாக்களாக கழிக்கும் அவை மென்மையான மண்புழு, நத்தை உள்ளிட்ட பூச்சிகளை உண்கின்றன.
வளர்ந்த மின்மினிப் பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை தேன் மற்றும் மகரந்தத்தை உணவாக உட்கொள்கின்றன,” எனத் தெரிவித்தார்.
விருதுக்கு 50,000 பேர் விண்ணப்பிப்பு

பட மூலாதாரம், Sriram Murali
சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞருக்கான விருதுக்கு 17 வயதிற்கு உட்பட்டோருக்கும், அதற்கு மேல் வயதானவர்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 16 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் இந்த விருதுக்கு ஸ்ரீராம் முரளி விண்ணப்பித்துள்ளார். காட்டில் இரவில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளின் படம் முதுகெலும்பற்ற உயிரினங்கள் பற்றிய புகைப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது. இந்த விருதுக்கு 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் 1000 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, போட்டோஷாப் மற்றும் கணிணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதா, வண்ணம் இந்த போட்டோவில் கூட்டப்பட்டுள்ளதா என வல்லுநர்கள் ஆராய்ந்து இறுதியாக 100 படங்களை நடுவர்களின் சோதனைக்கு அனுப்புவார்கள். அதில் 16 பிரிவுகளுக்கான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த புதன்கிழமை விருது வழங்கப்பட்டது.
இந்த விருது, காட்டைப் பாதுகாக்கவும், மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படும் என்று ஸ்ரீராம் முரளி கூறுகிறார்.

பட மூலாதாரம், Sriram Murali
“மின்மினிப் பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்த அரசு நிதிகளை ஒதுக்கி, அவை வாழ உகந்த சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த விருது விதைத்துள்ளது. நேரம் கிடைக்கும்போது செய்த ஆராய்ச்சிகளை, தற்போது முழுநேரமாகச் செய்ய, கூகுள் பணியை ராஜினாமா செய்துள்ளேன்,” என்றார்.
தன்னுடைய வைல்ட் அண்ட் டார்க் எர்த் தொண்டு நிறுவனம் மூலம் இரவாடி உயிரினங்களின் வாழ்விடங்களைப் பற்றிய ஆய்வு மற்றும் பாதுகாப்பு குறித்த பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்திய பூச்சியியல் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட இவரது ஆய்வு, மின்மினிப் பூச்சிகளின் ஒளிரும் வடிவங்களைப் பதிவுசெய்த ஒத்திசைவான ஆராய்ச்சியாளர்களின் சூழலியல் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“மின்மினிப் பூச்சிகள் தங்கள் வயிற்றின் கீழே பிரத்யேக ஒளி உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவை ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கின்றன. சிறப்பு செல்களுக்குள், ஆக்ஸிஜன் லூசிஃபெரின் என்ற பொருளுடன் இணைந்து ஒளியை உருவாக்குகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நடந்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சி தொடர்பான விஞ்ஞானிகளுடனான தகவல் தொடர்புகள் மூலம் தெரிய வந்துள்ளது,” என்றும் கூறுகிறார் ஸ்ரீராம் முரளி.

“கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2012ஆம் ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனத்தைக் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சிகள் உள்ளன. ஆனால், ஒரு சில மட்டுமே ஒத்திசைவானவை.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா (Abscondita) இனத்தைச் சேர்ந்தவை அல்லது புதிய இனமாகவும் இருக்கலாம். அதன் இனத்தைச் சரியாக அடையாளம் காண விரிவான ஆராய்ச்சி மற்றும் டி.என்.ஏ வரிசைமுறை தேவை. இவை கருப்பு நிற கோடுகளுடன் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளன.
உலகம் முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் இந்த மிக அரிதான இந்த ஆபூர்வ நிகழ்வு நமது எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று ஸ்ரீராம் முரளி கூறுகிறார்.

பட மூலாதாரம், Sriram Murali
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சி இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய ஆய்வு, ஒவ்வோர் ஆண்டும் கோடையில் அங்கு பார்க்கப்படும் கோடிக்கணக்கான பூச்சிகளின் கூட்டம், அவற்றின் ஒத்திசைக்கப்பட்ட உயிர் ஒளிர்வு ஆகியவை காணப்படுகின்றன.
ஆறு இந்திய புகைப்பட கலைஞர்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருது
இளம் புகைப்படக் கலைஞர் விஹான் தல்யா விகாஸ் எடுத்த, கர்நாடகாவின் நல்லூர் பாரம்பரிய புளியந்தோப்புக்கு அருகில் காணப்படும் ஓர் அலங்கார மரத்தின் சிலந்தியின் படம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் விருது பெற்றுள்ளது.
இதேபோல நெஜிப் அகமது எடுத்த அசாமின் ஓராங் தேசியப் பூங்காவின் புறநகர்ப் பகுதியில் புலி மற்றும் அதை கிராம மக்கள் பார்ப்பது போன்ற புகைப்படம், விஷ்ணு கோபால் எடுத்த பிரேசிலிய காட்டில் உள்ள லோலேண்ட் தாப்பிர் என்ற உயிரினத்தின் புகைப்படம், வினோத் வேணுகோபாலின் சிலந்தி புகைப்படம் மற்றும் ராஜீவ் மோகனின் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான கழுகுப் பார்வை புகைப்படம் ஆகியவையும் விருதுகளைப் பெற்றுள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்