
பட மூலாதாரம், Getty Images
மது அருந்துதல் உடலை என்ன செய்யும்?
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1 முதல் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பு மதுபிரியர்கள் பலருக்கும் கவலை தரக்கூடியதாக அமைந்திருக்கலாம்.
ஆனால், அதே மதுவை இவ்வளவு விலைகொடுத்து வாங்கி அருந்துவதன் மூலம் வரக்கூடிய உடல் பாதகங்கள் அதை விட அதிர்ச்சி தரக்கூடியவை. எப்போதாவது மது அருந்தினாலும் சரி, அன்றாடம் மது அருந்தினாலும் சரி அது உடலின் முக்கிய பாகங்களை மோசமாக பாதிக்கும் என்ற மருத்துவர்களின் அறிவுரை இன்னும் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அம்சம்.
அப்படி மதுவால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனரீதியான விளைவுகள், மதுக் குடிப்பதை திடீரென நிறுத்துவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

பட மூலாதாரம், Getty Images
உடலின் உட்பகுதி
நாம் அருந்தும் மது எங்கு செல்கிறது?
பலரும் தாங்கள் அருந்தும் மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைத்து கொள்கின்றனர். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை அது எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் தியாகராஜனிடம் பேசினோம். “மது எப்படி, எவ்வளவு, எத்தனை நாட்கள் அருந்தினாலும் கேடுதான். அதிலும் ஆண்களை விட பெண்கள் மிக எளிதில் மதுவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்கிறார் அவர்.
உடலுக்குள் ஆல்கஹாலின் பயணம் குறித்து விவரிக்கும் மருத்துவர் தியாகராஜன், “ஆல்கஹால் நேரடியாக வயிற்றைத் தாண்டி சிறுகுடல் பெருங்குடல் பகுதிகளுக்கு செல்கிறது. அங்கு ஆல்ஹகால் ஆல்டிகைடு என்ற சேர்மமாக உடைக்கப்படும்.”
“வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள ரத்தம் அனைத்தும் கல்லீரல் வழியாக சென்றே உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லும். அந்த சமயத்தில் உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து ரத்தம் வழியாக முழு உடலுக்கும், கழிவுகளை மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேயும் அனுப்புவது கல்லீரலின் வேலை.”
“இந்நிலையில் கல்லீரலுக்கு சேதத்தை உண்டாக்கும் ஹெபட்டோடாக்சிக் கூறான ஆல்டிகைடு ரத்தம் வழியாக கல்லீரலை அடைகிறது. எனவே மிக குறைவான நேரத்தில் அதிகமாக ஆல்கஹாலை அருந்தும்போது இந்த சேர்மம் அதிமாகி கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டு செல்லும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர்.
பெண்களுக்கு அதிக அபாயம் உண்டு
மது அருந்தும் நபர்கள் எந்த பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது பாதகத்தை ஏற்படுத்தும். அதே பெண்கள் என்று வரும்போது அவர்களது மரபணு அமைப்பு காரணமாக ஆல்கஹாலால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன்.
இதுகுறித்து கூறும் அவர், “தொடர்ச்சியாக மது அருந்துவதால் கல்லீரலில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் அதிகமாகி லிவர் ஸ்காரிங் ஏற்படுகிறது. இது ஃபைரோசிஸ் நிலையை ஏற்படுத்தி விடும். இதோடு மற்ற சுற்றுசூழல் காரணங்களும் இணைந்து காலம் செல்ல செல்ல கல்லீரல் சிரோசிஸ் நிலையை அடைந்து விடும்” என்கிறார்.
ஆனால், நோயின் தீவிரம் தனிநபரின் மரபணுத்தன்மை மற்றும் மது அருந்தும் அளவு ஆகியவற்றை பொறுத்தே உடனடியாக அல்லது மெதுவாக அதிகரிக்கும். அதேசமயம், பெண்கள் மதுவால் எளிதில் கல்லீரல் சார் நோய்களுக்கு ஆளாவதாக கூறுகிறார் மருத்துவர்.

பட மூலாதாரம், THIAGARAJAN
மருத்துவர் தியாகராஜன்
மதுவால் உண்டாகும் கல்லீரல் நோய்கள்
ஆல்கஹாலால் பல விதமான கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவில் கல்லீரல் சார் நோய்கள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 5இல் 1 இந்தியர் கல்லீரல் சார் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லீரல் சார்ந்த இறப்புகளும் அதிகரித்துள்ளன.
அப்படி ஆல்கஹாலால் கல்லீரலுக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளாக மருத்துவர் தியாகராஜன் தெரிவிப்பவை.,
நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ் (Chronic Liver Cirrhosis)
இந்த நிலையானது பல ஆண்டுகளாக கல்லீரல் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அழற்சி அதிகரித்து இறுதியில் கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளாக ஆற்றல் இழப்பு, தசை பலவீனம், நீர்கோர்த்தல், மஞ்சள்காமாலை உயர்தல், ரத்த வாந்தி ஆகியவற்றை குறிப்பிடுகிறார் மருத்துவர்.
அக்யூட் ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ் அல்லது அக்யூட் கல்லீரல் செயலிழப்பு
தொடர்ந்து பகல் இரவாக மது அருந்துதல், மோசமான உணவு பழக்கம் மற்றும் இதர காரணிகளோடு சேர்ந்து இந்த நிலைக்கு ஒருவர் தள்ளப்படலாம். இதில் கடுமையான மஞ்சள் காமாலை , ரத்தம் உறையாமல் போதல் மற்றும் தொடக்க நிலை கோமா கூட ஏற்படலாம்.
நாள்பட்ட கல்லீரல் நோய்
நீண்ட நாட்களாகவே கல்லீரல் குறிப்பிட்ட அளவு பாதிப்படைந்திருக்கும். இந்த நிலையில் குறைவாக அல்லது அதிகமாக என எப்படி மது அருந்தினாலும் திடீரென்று கல்லீரல் செயலிழந்து விடும் என்கிறார் மருத்துவர் தியாகராஜன்.
இந்த மூன்று நிலைக்குமே மருத்துவ ரீதியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறும் அவர், நோயாளிகள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதற்கேற்ற சிகிச்சைகள் உண்டு என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
“ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு”
ஃபேட்டி லிவருக்கும், ஆல்கஹாலுக்கும் என்ன தொடர்பு?
கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டிருந்த ஆய்வு முடிவு ஒன்றில் 38 % இந்தியர்களுக்கு ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு (ஃபேட்டி லிவர்) இருப்பதாக தெரிவித்திருந்தது.
கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வது இயல்பான ஒன்று. ஆனால், அது 5% த்திற்கும் கீழ்தான் இருக்கும். இதே 20 – 25%க்கு மேல் செல்லும்போது அது கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும். இதையே நாம் கல்லீரல் கொழுப்பு என்கிறோம்.
கல்லீரல் கொழுப்பை பொறுத்தவரை இரண்டு வகைகள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தியாகராஜன். அதை விவரிக்கும் அவர், “ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் கொழுப்பு, ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு என இருவகை உண்டு” என்கிறார்.
இந்த கல்லீரல் கொழுப்பு ஏற்பட அதிக காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், மோசமான உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டும் அவர் ஆல்கஹால் சாராத கல்லீரல் கொழுப்பு நோய்களே அதிகம் ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி
ஒரு நாளைக்கு எவ்வளவு ஆல்கஹால் பாதுகாப்பானது?
என்னதான் மது அருந்தினாலும் அதில் தான் சுயகட்டுப்பாடு கொண்டுள்ளதாகவும், குறைவாகவே மது அருந்துவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் பாதுகாப்பான மது அளவு ஒரு மூடி இருமல் மருந்து அளவு மட்டுமே.
“ஒரு நாளைக்கு பாதுகாப்பான ஆல்கஹால் அளவு என்பது 30மி.லி. இதை தினசரி அருந்தினாலும் பெரும்பாலும் தீங்கு ஏற்படாது. ஆனால், அதற்கு மரபணு ரீதியாகவே உங்கள் கல்லீரல் நலமாக இருக்க வேண்டும், வேறு எந்த பிரச்சனைகளாலும் பாதிப்பு இல்லாத கல்லீரலாக இருக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர்.
அதே சமயம் ஆல்கஹாலின் போதை தன்மையால் அப்படி சுயகட்டுப்பாடோடு பாதுகாப்பான அளவை மட்டுமே அருந்துவது சாத்தியமல்ல. நாளாக நாளாக அளவு அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே மதுப்பழக்கத்தையே மொத்தமாக தவிர்ப்பதே நல்லது என்கிறார் அவர்.
மதுப்பழக்கத்தை நிறுத்தினால் கல்லீரல் சரியாகி விடுமா?
சில நேரங்களில் நீண்ட காலம் மது அருந்துபவர்கள் கூட திடீரென முடிவு செய்து மதுப்பழக்கத்தை விட்டு விடுகிறார்கள். இதனால் தங்களது உடல் சீராகி விடும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஆனால், மதுப்பழக்கத்தை விட்டு பல ஆண்டுகள் ஆனவர்களுக்கு கூட கல்லீரல் நோய்கள் வரலாம் என்று கூறுகிறார் மருத்துவர்.
இதுகுறித்து விவரிக்கும் அவர், “ஆல்கஹாலால் கல்லீரல் கொழுப்பு அல்லது பைப்ரோசிஸ் நிலை ஏற்பட்டு தொடக்க நிலையில் இருக்கும்போது நீங்கள் மது அருந்துவதை விட்டுவிட்டால், மேலும் கல்லீரல் சேதமடையாமல் தடுக்கலாம். மருத்துவ உதவிகளோடு சில நாட்களில் மீண்டு வர முடியும்” என்கிறார்.
“ஆனால், அதுவே சிரோசிஸ் நிலைக்கு சென்று விட்டால் நீங்கள் முழுமையாக மதுபழக்கத்தை விட்டாலும் கல்லீரலால் மீண்டு வர முடியாது. அதற்கு மேலதிக சிகிச்சைகள் தேவை. ஆனால், கல்லீரலின் பாதிப்பு எந்த நிலையில் இருந்தாலும் முதலில் மது பழக்கத்தை விட்டால் மட்டுமே அது அடுத்தகட்டத்தை நோக்கி செல்லாது” என்கிறார் மருத்துவர் தியாகராஜன்.

பட மூலாதாரம், POORNA CHANDRIKA
கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா
மதுப்பழக்கத்தால் ஏற்படும் மனநல கோளாறுகள்
மது அருந்துவதால் பாதிக்கப்படும் மற்றுமொரு முக்கிய உறுப்பு மூளை. இதனால் மனரீதியான பல சிக்கல்களுக்கு மது குடிப்போர் ஆளாகின்றனர். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம்.
மதுவின் அளவு மற்றும் அதை ஒருவரின் உடல் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு நபர் மதுவினால் பாதிக்கப்படும் தன்மையும், காலமும் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறும் மருத்துவர் பூர்ண சந்திரிகா முக்கியமான நான்கு மனநல பிரச்சனைகள் குறித்து கூறுகிறார்.
அதீத மதுவினால் வரும் சிக்கல்
சிலர் கொஞ்சம் மது அருந்தினால் கூட மோசமான வெறிபிடித்தவர்கள் போல் ஆகிவிடுவார்கள். பொருட்களை உடைப்பது, சண்டையிடுவது போன்றெல்லாம் செய்வார்கள். இதுதான் முதல்கட்டம் என்கிறார் அவர்.
மேலும் இதற்கு அடுத்த கட்டமாக டெலிரியம் ட்ரமன்ஸ் (Delirium Tremens) என்ற பிரச்னை ஏற்படும் என்கிறார். “இதில் அடிக்கடி பூச்சி ஊறுவது போல் இருக்கிறது என்பார்கள், என்னை போலீஸ் துரத்தி வருகிறது என்பார்கள். இந்த மனநல பிரச்னையில் தூக்கமின்மை, குழப்பம், மறதி, சோர்வு, காதில் குரல் கேப்பது ஆகிய அறிகுறிகள் இருக்கும்” என கூறுகிறார் மருத்துவர்.

பட மூலாதாரம், Getty Images
நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது.
மதுப்பழக்கத்தை விட்டதற்கு பிறகு என்ன நடக்கும்?
மதுப்பழக்கத்தினால் எவ்வளவு துன்பமோ, அதை விட்டொழிந்த பிறகும் கூட பெரும் சவால்களை சிலர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதையே Withdrawal Syndrome என்கிறோம். இதில் குழப்பம், பதற்றம், கைகால் உதறுதல், சோர்வு என நபருக்கேற்ற பிரச்னைகள் உண்டு.
ஆனால் அதை தாண்டி நீண்டநாள் மதுப்பழக்கத்தை திடீரென்று விடும்போது மனரீதியான சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுகுறித்து மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன் (Alcohol Induced Hallucinations)
“சிலர் குடியை நிறுத்தினாலும் கூட காதில் சலங்கை ஒலி கேட்பது, யாரோ கூப்பிடுவது போல் போன்ற பிரம்மை மட்டும் இருக்கும் அதற்கு பெயர் ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் ஹேலுசினேஷன்” என்று கூறும் அவர் இதிலேயே ‘லில்லிபுட் ஹேலுசினேஷன்’ என்ற காட்சி ஹேலுசினேஷன் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்.
ஆல்கஹால் இண்ட்யூஸ்ட் சைக்காட்ரிக் டிஸார்டர் (Alcohol Induced Psychiatric Disorder)
இந்த பிரச்னையில் , பல வருடங்களாக மது அருந்துபவர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை நிறுத்தியிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மூன்று நாட்களிலேயே குழப்பம், கோவம், எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்கிறார் மருத்துவர்.
வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப்
இந்த மனரீதியான நோய்கள் நாள்பட்ட பிரச்னையாக மாறும்போது அடுத்தடுத்த கட்டமாக நரம்பு சார் பிரச்னைகளையும் தூண்டுகிறது. அதன் அடுத்த நிலை வெர்னிக் என்செபலோபதி கொரஸ்காஃப் (Wernicke encephalopathy and Korsakoff).
இதனால் மறதி ஏற்படும். ஆனால், அந்த நபர் மறதி இருப்பது போலவே காட்டிக்கொள்ள மாட்டார்கள். திடீரென்று ஒரு கேள்வி கேட்டால் பதில் தெரியவில்லை என்றாலும், அதை தெரியாது என்று சொல்லாமல் தோராயமான பதிலை சொல்வார்கள். இதெல்லாம் நரம்பியல் சார்ந்த மனநலப் பிரச்னைகள் என்று கூறுகிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
இவை இல்லாமல் நரம்பு சம்பந்தமான வேறு பிரச்னைகளும் கூட ஏற்படும். அதில் மயோபதி, நியூரோபதி சார்ந்த பிரச்னைகளும் அடங்கும். இதனால் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாது, சில வேலைகளை செய்ய முடியாது. உடலில் ஊசி போல குத்துதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
“இதற்கு மருந்தியல் சிகிச்சையே தீர்வு”
மறுவாழ்வு மையங்கள் மூலம் பலன் கிடைக்கிறதா?
இப்போதெல்லாம் போதை ஒழிப்பு மையங்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வு மையங்கள் அதிகரித்து விட்டன.
ஆனால், அது போன்ற பல இடங்களில் அடிக்கிறார்கள், அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று அடிக்கடி குற்றச்சாட்டு எழுவதும் உண்டு. இந்நிலையில் இது போன்ற மறுவாழ்வு மையங்கள் பயனளிக்குமா என்ற கேள்வியை மருத்துவர்களிடம் முன்வைத்தோம்.
இதற்கு பதிலளித்த மருத்துவர் தியாகராஜன்,” சில நல்ல மையங்கள் இருந்தாலும், பல மறுவாழ்வு மையங்கள் முறைப்படுத்தப்படாமல் தான் இருக்கின்றன. அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. எனவே மருத்துவ ரீதியிலான சிகிச்சை மட்டுமே இதற்க்கு தீர்வு. அதை தாண்டி அதில் முக்கியம் குறிப்பிட்ட நபரின் மனஉறுதி. இதில் கட்டாயப்படுத்தி ஒருவரை மாற்ற முடியாது” என்று கூறுகிறார்.
மாநில மனநல ஆணையத்தின் மூலம் உரிமம் வழங்கப்பட்டே பல மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருவதாக கூறும் மருத்துவர் பூர்ணசந்திரிகா, மக்கள் உரிமம் இல்லாத மையங்களை நம்ப வேண்டாம் என்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஏதாவது ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள நபரை வந்து குடும்பத்தினர் பார்க்க வேண்டாம், அவர் தனித்து இருக்கட்டும் என்று சொன்னால் அந்த இடங்களை நம்ப வேண்டாம். சொல்லப்போனால் தினசரி சென்று அவர்களை பார்ப்பதே, நமது குடும்பம் நம்முடன் இருக்கிறது என்ற உத்வேகத்தை கொடுக்கும். எனவே கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் மக்கள் மாநில மனநல ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், IMH / FACEBOOK
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் , சென்னை
அரசு வழங்கும் சிகிச்சைகள்
போதை ஒழிப்புக்கெனவே தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதை விவரித்து பேசிய மருத்துவர் பூர்ண சந்திரிகா, “மதுபழக்கத்தை கைவிட மருந்தியல் சிகிச்சையே தீர்வு. அதற்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளதாக” தெரிவிக்கிறார்.
“இதற்கான சிகிச்சை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மனநல பிரிவுகள், மாவட்ட அரசு போதை ஒழிப்பு மையங்கள் என அனைத்து இடங்களிலும் வழங்கப்படுவதாக” கூறுகிறார் அவர்.
மேற்கூறிய இடங்களில் 21 நாள் முதல் 1 மாதம் வரை அல்லது 10 முதல் 15 நாட்கள் உட்பிரிவு நோயாளியாக வைத்து மருந்தியல் சிகிச்சைகள் வழங்கப்படும். மேலும், மருந்து சாராத சிகிச்சைகளான மனநல ஆலோசனை உள்ளிட்டவையும் வழங்கப்படும். இதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க அரசு முயற்சித்து எடுத்து வருகிறது என்கிறார் மருத்துவர் பூர்ணசந்திரிகா.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்