இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து நாள்கள் நடைபெறும் சிறப்புக் கூட்டத்தொடரில் என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்குமே தெரியாமல் இருந்தது.

எதிர்க்கட்சி எம்.பி-க்கள், ‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால், என்ன செய்யப்போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்றார்கள். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டுவரப்போகிறார்கள், நாட்டின் பெயரை `பாரத்’ என்று மாற்றப்போகிறார்கள் என்றெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் எழுந்தன.
நாடு முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நேரத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. இது வழக்கத்துக்கு மாறான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்’ என்றார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களில் நாடாளுமன்றத்திலுள்ள தனது அலுவலகத்துக்கு வரும் பிரதமர் மோடி, மக்களவைக்கோ, மாநிலங்களவைக்கோ பெரும்பாலும் வருவதில்லை என்ற விமர்சனம் உண்டு. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது உரையில், ‘75 ஆண்டுக்கால நாடாளுமன்றப் பயணம் நம்மை புதிய இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. ஆகையால், எம்.பி-க்கள் புத்துணர்வுடன் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது எதிர்க்கட்சிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியபோது, ‘பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கடைசி அமர்வில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. பிரதமரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளைச் சிறப்பாக எடுத்துவைத்தனர். இனிமேல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் அனைத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும்’ என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை கடந்த மே 28-ம் தேதியே பிரதமர் மோடி திறந்துவிட்டார். அதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வைத்து ஏன் திறக்கவில்லை என்ற சர்ச்சை அப்போது எழுந்தது. தற்போது, சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில், புதிய கட்டடத்துக்கு நாடாளுமன்றம் இடம்பெயர்ந்தது. அங்கு முதல் அமர்வு நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பழைய கட்டடம் 96 ஆண்டுகள் பழைமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல் நாளிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது, சிறப்புக் கூட்டத்தொடரின் சிறப்பான நிகழ்வு. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அதற்கான முயற்சிகள் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்து எடுக்கப்பட்டுவருகின்றன. பல முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டும், அது நிறைவேற்றப்படவில்லை. ஆனால், இந்த முறை அது நிறைவேற்றப்பட்டுவிடும் என்று பா.ஜ.க-வினர் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அவையை முடக்கும் நடவடிக்கைகள் வேண்டாம்’ என்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், அங்கு முதல் நாளிலேயே ஆளும் தரப்புக்கும், எதிர்த் தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமரால் இரண்டு, மூன்று மணி நேரம் பேச முடிகிறது. ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்து அவரால் விரிவாகப் பேச முடியவில்லை” என்று விமர்சித்தார். அதற்கு, “நாடாளுமன்றத்தில் எவ்வித அரசியலையும் கலக்காமல், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு நடுநிலையாக பிரதமர் மோடி பேசினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தலைவரைப்போல பேசவில்லை. அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்” என்றார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
இன்னும் இரண்டு நாள்களுக்கு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வேறு ஏதாவது ஆச்சர்யம் காத்திருக்கிறதா என்பது தெரியவில்லை!
நன்றி
Publisher: www.vikatan.com
