AFG vs AUS ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியைப் பறித்த மேக்ஸ்வெல் – தனி ஒருவனாக சாதித்தது எப்படி?

AFG vs AUS ஆப்கானிஸ்தான் கையில் இருந்த வெற்றியைப் பறித்த மேக்ஸ்வெல் - தனி ஒருவனாக சாதித்தது எப்படி?

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

நடப்பு உலகக்கோப்பையில் ஆச்சர்யங்களை நிகழ்த்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி பலமிக்க ஆஸ்திரேலியாவுக்கும் ஆட்டம் காட்டி விட்டது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நேரத்தில், அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக களத்தில் நின்று இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது-

தொடக்க வீரர் இப்ராகிம் ஜாட்ரன் அடித்த சதத்தின் உதவியுடன் 291 ரன்களை குவித்த ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் தவறவிட்டுவிட்டது.

ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதல் பேட்டிங்

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய அதே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எதிர்பார்க்கப்பட்ட படியே ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றதுமே சற்றும் தயங்காமல் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டது.

ரமானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜாட்ரன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். உலகின் அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது பந்துவீச்சை ஆப்கன் வீரர்கள் அச்சமின்றி ஆடினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது.

இருவரது சிறப்பான ஆட்டத்தால் மிட்செல் ஸ்டார்க் தனது முதல் 3 ஓவர்களிலேயே 19 ரன்களை கொடுக்க நேரிட்டது. குர்பாஸ் 21 ரன்கள் சேர்த்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பையில் பவர் பிளேயில் அவர் எடுத்த முதல் விக்கெட் இதுவாகும்.

அடுத்துவந்த ரஹ்மத் ஷா களத்தில் நிலைத்து நின்று, ஜாட்ரனுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்ததார். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் இப்ராகிம் ஜாட்ரன் 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தொடர்ந்து அபாரமாக ஆடியது. இதனால், ஆப்கன் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இப்ராகிம் ஜாட்ரன் அபார சதம்

நிலைத்து ஆடிய இப்ராகிம் ஜாட்ரன் – ரஹ்மத் ஷா ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 121 ரன்னாக இருந்த போது ரஹ்மத் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சுழற்பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல் வீழ்த்தினார்.

அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி களம் புகுந்தார். அவரும் ஒருமுனையில் நிலைத்து ஆடிய இப்ராகிம் ஜாட்ரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் மறுமுனையில் ஜாட்ரன் மனம் தளராமல் ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களையும் அவர் பறக்கவிட்டார். இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது.

மறுமுனையில் அஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜாட்ரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குறிப்பிடத்தகுந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

அவர்களின் ஒத்துழைப்புடன் ஜாட்ரன் அபாரமாக சதம் கடந்தார். இதற்காக அவர் 131 பந்துகளை எதிர்கொண்டார்.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

கடைசி நேரத்தில் ரஷித்கான் அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் ரஷித் கான் அதிரடியில் மிரட்டினார். மேக்ஸ்வெல் வீசிய 47-வது ஓவரில் 16 ரன்களை விளாசிய ரஷித் கான், ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரும் கடுமையான அடி வாங்கியது.

ரஷித் கான் – ஜாட்ரன் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி கடைசி 6 ஓவர்களில் மட்டும் 75 ரன்களை குவித்தது. இதன் மூலம் 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது. ரஷித்கான் 18 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். 131 பந்துகளில் சதம் அடித்த ஜாட்ரன், அடுத்த 12 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே சரிவு

இந்தியா – இலங்கை போட்டி நடைபெற்ற வான்கடே மைதானத்தில் இரண்டாவது பேட்டிங்கில் 292 ரன்களை எடுப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றே கருதப்பட்டது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் அதனை நிரூபிப்பதாகவே அமைந்தன.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன் கணக்கை தொடங்கும் முன்பே நவீன் உல் ஹக் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு உள்ளே வந்த மிட்செல் மார்ஷூம், மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் சிறிது நேரம் மட்டுமே நிலைத்து நின்றனர்.

அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவீன் உல் ஹக் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவர்களில் 43 ரன்களை சேர்த்திருந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வார்னர் 18 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லபுஷேனே 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் 6 ரன்களில் வெளியேறியதும் ஆஸ்திரேலிய அணியை தோல்வி பயம் தொற்றிக் கொண்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

கூடுதலாக 4 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. மிட்செல் ஸ்டார்க் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவை மீட்ட மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. 8-வது விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல்லுடன் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைகோர்த்தார். ஒரு புறம் மேக்ஸ்வெல் அடித்து அடி ரன் ரேட்டை பார்த்துக் கொள்ள மறுபுறம் அவருக்கு உறுதுணையாக விக்கெட் விழாதபடி கேப்டன் கம்மின்ஸ் காத்து நின்றார்.

மேக்ஸ்வெல் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து ரன் ரேட்டை சிறப்பாக பராமரித்தபடி இருந்தார். ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து அவர் அரைசதத்தை எட்டினார். 51 பந்துகளில் அவர் அரைசதம் கண்டார்.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் ‘தனி ஒருவன்’

மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் ஆட்டம் மெல்லமெல்ல ஆப்கானிஸ்தான் பக்கம் இருந்து ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது. களத்தில் தன்னை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட பிறகு மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்த வண்ணம் இருந்தன.

இதனால் 76 பந்துகளிலேயே மேக்ஸ்வெல் சதத்தை எட்டிவிட்டார். முதல் அரைசதத்தை அடிக்க 51 பந்துகளை எடுத்துக் கொண்ட மேக்ஸ்வெல், அடுத்த 25 பந்துகளில் 51 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார்.

ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

இரட்டை சதம் அடித்து மேக்ஸ்வெல் மிரட்டல்

களத்தில் நன்றாக காலூன்றிவிட்ட பிறகு மேக்ஸ்வெல் வெகு எளிதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டார். சர்வசாதாரணமாக பவுண்டரி, சிக்சர்களை அவர் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் அணியை எளிதாக வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.

சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார்.

முதல் சதத்தை 76 பந்துகளில் அடித்த மேக்ஸ்வெல் அடுத்த 100 ரன்களை வெறும் 52 பந்துகளில் எட்டிவிட்டார். அவரது ஸ்கோரில் 10 சிக்சர்களும், 21 பவுண்டரிகளும் அடங்கும். அதாவது, பவுண்டரி, சிக்சர் வகையிலேயே 144 ரன்களை அவர் திரட்டிவிட்டார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை பாதுகாக்கும் வகையில் விளையாடிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *