பட மூலாதாரம், Getty Images
சுய மரியாதை திருமணங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
-
சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்கள் முன் நடத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என கடந்த திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த திருமணங்கள் இந்து திருமணம் சட்டம் பிரிவு 7(அ) வின் கீழ் செல்லும் என்றும் கூறியுள்ளது.
2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் முன் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்றும் சுயமரியாதை திருமணங்கள் ரகசியமாக நடைபெறக் கூடாது என்றும் கூறியிருந்தது. தற்போது, வழக்கறிஞர்கள் உட்பட யார் முன்னிலையிலும் நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேபோல், பொது வெளியில் அறிவிக்காமல் ரகசியமாக செய்யப்படும் சுய மரியாதை திருமணங்கள் செல்லுபடியாகுமா? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுயமரியாதை திருமணங்கள் என்றால் என்ன?
வழக்கமான இந்து திருமணங்களில் நடைபெறுவது போன்ற சடங்குகள் இல்லாமல், பூசாரி இல்லாமல் விருப்பப்பட்ட நபர்கள் சிலரின் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வது போன்ற எளிய சடங்குடன் நடைபெறும் திருமணங்கள் சுயமரியாதை திருமணங்கள் எனப்படும். மனமொத்த இரண்டு இந்துகள் யாராவது ஒருவர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டால் கூட அது சுயமரியாதை திருமணமாக சட்டத்தின் முன் கருதப்படும். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வது சிறப்பு திருமணங்கள் சட்டம் 1954-ன் கீழ் பொருந்தும்.
பட மூலாதாரம், Getty Images
இந்து திருமணச் சட்டத்தில் தமிழ்நாடு மட்டும் திருத்தம் ஏற்படுத்தி, அதன் மூலம் சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரிவு 7 (அ) என்ன கூறுகிறது?
1955-ல் இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டம், 1967ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, அதில் பிரிவு 7(அ) சேர்க்கப்பட்டது. இந்த திருத்தம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்
சுய மரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்கள் குறித்து பிரிவு 7 (அ) விளக்குகிறது. சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்கள் எனக் கூறப்படும், இரண்டு இந்து நபர்களுக்கு இடையிலான எந்த திருமணத்தையும் இச்சட்டம் அங்கீகரிக்கும்.
உறவுக்காரர்கள், நண்பர்கள், மற்றும் பிறரது முன்னிலையில் தாங்கள் ஒருவருக்கு ஒருவர் கணவன்-மனைவியாக இருப்பதாக அறிவிக்க வேண்டும். மேலும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல், மோதிரம் அணிதல், தாலி கட்டிக் கொள்ளுதல் போன்ற எளிய சடங்குகள் இருந்தால் போதும். இந்த திருமணங்களை பதிவு செய்வதும் சட்டத்தின் படி கட்டாயம்.
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டது?
பட மூலாதாரம், Getty Images
1967-ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தின் படி மனமொத்த இரண்டு இந்துக்கள் யாராவது சிலர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொள்வதும் திருமணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒத்துழையாமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான தந்தை பெரியார், பிராமண மாணவர்களுக்கும் பிராமண அல்லாத மாணவர்களுக்கும் உணவு வழங்குவதில் காட்டப்பட்ட வேறுபாடுகள் காரணமாக, காந்தியுடன் முரண்பட்டு 1925-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். 1944-ம் ஆண்டில் தான் திராவிடர் கழகத்தை உருவாக்கினாலும் 1920களிலேயே தமிழ்நாட்டில் உயர் சாதியினருக்கு எதிரான, தமிழ் மக்களின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான சுயமரியாதை இயக்கங்களை தீவிரமாக முன்னெடுத்து நடத்தினார். அதன் ஒரு பகுதியாக, புரோகித மறுப்பு திருமணங்கள், கதர் திருமணங்கள், புரட்சி திருமணங்கள் என பல பெயர்களில் சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்று வந்தன.
இதுபோன்ற திருமணங்கள் நிறைய நடைபெற்றாலும், அவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறார், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்.
“இந்த திருமணங்களுக்கு எதிராக யாராவது வழக்கு தொடுத்தால், இந்த திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு விடும். 1953-ல் தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் வழக்கில் சிதம்பரத்துக்கும் ரங்கம்மாளுக்கும் நடைபெற்ற வழக்கை ரத்து செய்து விட்டது உயர்நீதிமன்றம். சிதம்பரம் தனது முதல் மனைவி இறந்த பிறகு ரங்கம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்த திருமணம் ‘சப்த அடி’ என்ற அக்னி குண்டத்தை சுற்றிய ஏழு அடிகள் நடப்பது உள்ளிட்ட சடங்குகள் ஏதும் பின்பற்றாமல் நடைபெற்ற திருமணம் என்று கூறி அந்த திருமணத்துக்கு எதிராக முதல் மனைவியின் மருமகள் வழக்கு தொடுத்த போது, அந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் கூறிவிட்டது.” என்றார்.
அதன் பின் தனி நபர் மசோதா உட்பட பல முயற்சிகள் எடுத்தும் கூட சுய மரியாதை திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை. “1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு, அதே ஆண்டில் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சுய மரியாதை திருமணங்கள் செல்லும்படி செய்தார் என தெரிவித்தார். மேலும், 1967-க்கு முன் நடைபெற்ற திருமணங்களும் செல்லும் என்றும் அண்ணா அறிவித்தார்”
தமிழ்நாட்டில் மட்டும் உள்ள இந்த சட்டப்பிரிவை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என 2004ம் ஆண்டு கருணாநிதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதினார்.
“தமிழ்நாட்டில் மட்டுமே இந்த சட்டப்பிரிவு இருப்பதால் வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து திருமணம் செய்து கொள்பவர்கள் உண்டு” என்கிறார் பிரின்ஸ்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு என்ன?
பட மூலாதாரம், MADRAS HIGH COURT
சென்னை உயர்நீதிமன்றம் 2014ம் ஆண்டு ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் சுய மரியாதை திருமணங்களாக செல்லாது என்று கூறியிருந்தது.
இளவரசன் என்பவர், தான் சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டதாகவும் , ஆனால் தனது மனைவியை அவரது பெற்றோர்கள் சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது திருமணத்தை அங்கீகரித்து வழக்கறிஞர் கொடுத்த திருமணச் சான்றை சமர்ப்பித்துள்ளார். ஆனால் அந்த சான்றிதழை ஏற்காத சென்னை உயர்நீதிமன்றம், அவரது ஆட்கொணர்வு மனுவை நிராகரித்து விட்டது. வழக்கறிஞர்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் செல்லாது என்றும், சுயமரியாதை திருமணங்களை ரகசியமாக செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன கூறியது?
2014ம் ஆண்டு இளவரசன் வழக்கில் தனது உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய போது, “சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்களை முன்னெடுத்தவர்கள் கூட இந்த திருமணங்கள் ரகசியமாக நடைபெற வேண்டும் என்று கருதவில்லை. கொண்டாட்டத்துடன் திருமணங்களை நடத்துவதற்கு காரணம் அந்த திருமணத்தை பொது வெளியில் அறிவிப்பதற்கு தான். தந்தை பெரியார் கூட பொதுவெளியில் தான் சுயமரியாதை திருமணங்களை நடத்தினார். எனவே, திருமண கொண்டாட்டங்கள் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு விரோதமானவை அல்ல” என்று உத்தரவு கூறுகிறது.
2013ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் பதிவு செய்யப்பட்ட 3313 திருமணங்களில் 1937 திருமணங்கள் வழக்கறிஞர்கள் அலுவலகங்களில் நடைபெற்றதாக நீதிபதி பி என் பிரகாஷ் அளித்த அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வழக்கறிஞர்கள் மட்டும் அதிகமான திருமணங்களை செய்து வருவது இந்த தரவுகளின் மூலம் தெரிவதாகவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த திருமணங்கள் பலவற்றில் சம்பந்தப்பட்ட ஆண், ஆட்கொணர்வு வழக்கு தொடருவதாகவும், சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது திருமணம் நடைபெறவே இல்லை என்று கூறுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அதனால், ரகசியமாக, சில தெரியாத நபர்கள் முன்னிலையில், சுயமரியாதை திருமணம் என்று செய்துக் கொள்வதை இந்து திருமணச் சட்டம் பிரிவு 7, 7(அ) கீழ் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியது. மேலும் ‘போலி திருமணச் சான்றிதழ்’ வழங்கியதற்காக வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து இளவரசன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரகசியமாக நடைபெறும் திருமணங்கள் ஏன் செல்லும்?
பட மூலாதாரம், Getty Images
சுய மரியாதை திருமணங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இளவரசனின் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், தனது உத்தரவில் சுய மரியாதை திருமணங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு நடைபெற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் உட்பட யார் முன்னிலையிலும் சுயமரியாதை திருமணங்கள் நடைபெறலாம் என தெரிவித்துள்ளது.
2001-ம் ஆண்டு இதேபோன்ற வழக்கில் வழக்கறிஞர்கள் முன் திருமணம் செய்துகொள்ள தடை இல்லை என்ற தனது உத்தரவையும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
நாகலிங்கம் எதிர் சிவகாமி என்ற வழக்கில், 2001ம் ஆண்டு, நீதிபதிகள் டி பி மோஹபத்ரா மற்றும் கே ஜி பாலகிருஷ்ணன், அக்னி குண்டத்தை சுற்றி ‘சப்த அடி’ என்ற ஏழு அடிகள் நடக்காவிட்டாலும் கூட மனுதாரரின் திருமணம் செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. அக்னி குண்டத்தை சுற்றி நடப்பதை சம்பந்தப்பட்ட தம்பதியினர் அவசியமாக கருதவில்லை என்றும், இதனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 7(அ) இந்த வழக்கில் பொருந்தும் என்றும் தெரிவித்தது.
“இந்த ஷரத்தின் முக்கிய அம்சமே ஒரு திருமணம் செய்து வைத்து அங்கீகரிக்க, ஒரு பூசாரியின் அவசியம் இல்லை என்பது தான். நண்பர்கள், உறவினர்கள், இல்லையென்றால் வேறு நபர்கள் முன்னிலையில், ஒருவருக்கு ஒருவர் கணவன் மனைவியாக வாழப் போகிறோம் என தங்களுக்கு புரியும் மொழியில் அறிவித்துக் கொள்ள வேண்டும். இந்த திருமணத்தின் போது மாலை மாற்றிக் கொள்ளுவது, மோதிரம் அணிவது அல்லது தாலி கட்டிக் கொள்வது போன்ற எளிமையான சடங்குகள் இருக்கும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாகவும், தங்கள் பாதுகாப்பு கருதியும் சில தம்பதிகள் தங்கள் திருமணத்தை பொது வெளியில் அறிவிக்க விரும்ப மாட்டார்கள். தங்களுக்குள் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். திருமணத்தை பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அது அவர்களுக்கு ஆபத்தாகலாம் அல்லது, பெற்றோர்களால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்படலாம். எனவே தெரியாத நபர்கள் சிலர் முன்னிலையில் பொது வெளியில் அறிவிக்காமல் நடைபெறும் திருமணங்கள் சுய மரியாதை திருமணங்களாக செல்லும் என்று கூறியது.
வழக்கறிஞர்கள் முன்னிலையில் சுய மரியாதை திருமணங்கள் நடத்தக் கூடாது என்று எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், நண்பர்கள், உறவினர்கள் என தனிப்பட்ட முறையிலேயே வழக்கறிஞர்கள் அந்த திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்றும் தெரிவித்தது.
“இந்து திருமணச் சட்டம் பிரிவு 7(அ)-ன் படி, யாராவது ஒருவர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே போதும். எனவே, தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘குறுகியப் பார்வை’ கொண்டதாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.” என்கிறார் வழக்கறிஞர் துரை அருண்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
