ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராமர் கோவிலுக்காக புதுப்பொலிவு பெறும் அயோத்தி நகரத்தின் கவனிக்கப்படாத மறுபக்கம்
ராமர் கோவில்: புதுப்பொலிவு பெறும் அயோத்தி நகரின் கவனம் பெறாத மறுபக்கம்
கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோவில் கட்டப்படுவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வந்ததில் இருந்து சர்ச்சையின் மையத்திலேயே இருந்து வருகிறது உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவில் கட்ட ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன.
தற்போது கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து, வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி கோவிலைத் திறந்து வைக்கிறார். பிரான் பிரதிஷ்டா என்ற கும்பாபிஷேக நிகழ்வும் அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி ‘அயோத்தி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றன.
இதனால், சிறிய, ஆட்கள் அதிகம் வந்து போகாத நகரமாக இருந்த அயோத்தியின் முகம் தற்போது வேகமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், புதிய விமான நிலையத்திற்கு அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருந்த ஃபைஸாபாத் என்ற பகுதிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது. இந்தப் பகுதியின் பெயரும் தற்போது ‘அயோத்தி’ என்றே மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் எந்த மேம்பாட்டுப் பணிகளோ, அலங்காரப் பணிகளோ நடந்திருக்கவில்லை. ராமர் கோவிலைச் சுற்றி வருவதற்கான ராம் பத் மற்றும் பக்தி பத் ஆகிய சாலைகளை இணைக்கும் சாலை இந்தப் பகுதயில் இருக்கிறது.
அதை விரிவாக்கும் பொருட்டு சில கடைகளும் வீடுகளும் அகற்றப்பட்டிருந்தன. அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
முழு விவரம் காணொளியில்…
காணொளி தயாரிப்பு: விஷ்ணு ஸ்வரூப், பிபிசி தமிழ்
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்: பி. டேனியல், பிபிசி தமிழுக்காக

ஃபைஸாபாத் பகுதியின் ஒரு தெரு
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
