
இந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்கிறார் கோவையைச் சேர்ந்த ஷாஹிரா பானு.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.
2019இல் நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டமானது, மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் நேற்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது தேர்தல் பத்திரங்கள் விவகாரத்திலிருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி என்றும், இந்திய இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் நோக்கம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என்று கூறிவருகின்றனர்.
“இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சட்டம் மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது” என்கிறார்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள்.
இந்த திட்டத்தைக் குறித்து தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இஸ்லாமியர்களை, இலங்கைத் தமிழர்களை இதில் இணைக்காமல் விட்டதைக் குறித்து மக்களின் கருத்து என்ன? இந்த திட்டம் குறித்த தெளிவான புரிதல் மக்களுக்கு உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
‘பிரித்தாளும் சூழ்ச்சி’
“இது ஒருவகையான அரசியல் விளையாட்டு. ஒற்றுமையாக வாழும் நாட்டில் பிளவை ஏற்படுத்த இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. 30 ஆண்டு காலமாக கொடுமைகளை அனுபவித்த இலங்கை தமிழர்களுக்கு எந்த பதிலும் இல்லை. ஆனால் கிறித்தவர்களையும் இதில் சேர்த்திருப்பதன் மூலம், தலித் மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது” என்கிறார் மதுரையைச் சேர்ந்த வியாபாரி ஜான் முகமது.
“நாமே பல சிக்கல்களோடு இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மக்களை கொண்டுவந்து இங்கு குடியமர்த்துவது சரியில்லை. எனவே இந்த சட்டம் தேவையில்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த லதா.
“இந்த சட்டத்தை ஏன் மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டுவரவேண்டும். இதனால் இந்து-இஸ்லாமிய மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்கப் பார்க்கிறார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் என்றாலே குற்றவாளிகள் தான் என்ற எண்ணத்தை விதைக்கப் பார்க்கிறார்கள். இது சர்வாதிகாரம். எங்கள் இந்தியாவுக்கு இது தேவையில்லை” என்கிறார் கோவையைச் சேர்ந்த மதீனா பானு.
“இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஆப்கனிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்று சொல்லும்போதே இதில் தவறு உள்ளது தெரிகிறது. இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன் பலனை தேர்தல் காலத்தில் அறுவடை செய்யவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது” என்கிறார் கோவையைச் சேர்ந்த சமீர் அகமது.
“எல்லோரையும் இணைக்க வேண்டும். அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அதில் எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சட்டத்தின் மூலமாக மதரீதியாக மக்களை பிரிக்கக்கூடாது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார்
“இதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல தரப்பைச் சேர்ந்த மக்களும் இதை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் படிக்காத, பாமர மக்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்காது அல்லவா. அவர்கள் என்ன செய்வார்கள்? இந்த மக்கள் விரோத சட்டத்தை கொண்டு வரக்கூடாது” என்கிறார் கோவையைச் சேர்ந்த ஷாஹிரா பானு.
“நாட்டில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களால் ஏதேனும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தானே இந்தச் சட்டம். எனவே இதைக் கொண்டு வருவதில் தவறில்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சதீஷ்.

இலங்கைத் தமிழர்களையும் இதில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார் மருத்துவர் ஸ்ரீகுமார்.
‘இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்’
“குடியுரிமை கொடுப்பதை எல்லோருக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இல்லை என்றால் அது சரியில்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மதியழகி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தால் சிஏஏ சட்டத்தை கைவிட்டு விட்டார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் அதை கிடப்பில் போட்டு இப்போது கொண்டுவருவார்கள் என நினைக்கவில்லை. இந்தியாவில் பல மதங்கள், கலாச்சாரத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். பாதிப்புகள் வரும் என்பதால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். எனவே மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து பேசி, இதில் யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு சுமூகமாக கொண்டு செல்ல வேண்டும்” என்கிறார் மதுரையைச் சேர்ந்த லியாகத் அலி.
“வெளிநாட்டில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை என சொன்ன போது நன்றாக தான் இருந்தது. ஆனால் குறிப்பிட்ட பிரிவினர் இல்லை, இலங்கைத் தமிழர்கள் இல்லை என சொல்லும்போது ஏதோ தவறாக இருக்கிறது. எனவே இந்தச் சட்டம் வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. பல தலைவர்களும் இதைத்தான் கூறுகிறார்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுப்பையா.
“தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது வந்திருப்பதால் இந்த சட்டம் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதை வைத்து அனைத்துக் கட்சிகளும் ஆதாயம் தேடவே பார்க்கிறார்கள். இது ஒருவகையில் நல்ல சட்டம் தான். தீவிரவாதிகள், சமூக விரோதிகள் நாட்டில் ஊடுருவதை இந்தச் சட்டம் தடுக்கும். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் செயல்களை இது கட்டுப்படுத்தும். மதரீதியிலான இன்னல்களுக்கு ஆளான பிறநாட்டு இந்தியர்களுக்கு இதை தருவது மனிதாபிமான அடிப்படையில் கொடுப்பது நல்ல விஷயம். ஒரு முக்கிய பிரச்னை என்னவென்றால், இலங்கைத் தமிழர்களை இதில் சேர்க்காதது. எத்தனையோ கஷ்டங்களை இலங்கையில் அனுபவித்துவிட்டு, அகதிகளாக இந்தியா வந்து முகாம்களில் பல வருடங்களாக அடைபட்டுக் கிடக்கும் அவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவரும் யோகா நிபுணருமான ஸ்ரீகுமார்.

இந்த சட்டம் குறித்த மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் ஷண்முகம்.
‘தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பில்லை’
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏற்கனவே உள்ள சட்டத்தில் ஒரு பக்கத்திற்கு மட்டுமே திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷண்முகம்.
“இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே இந்தியக் குடிமக்கள் தான். அவர்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது. எனவே இதைக் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். மத்திய அரசால் கொண்டுவரப்படும் இந்த சட்டத்தை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. பாதிப்புகள் இல்லையென்றாலும் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட காரணம், ஒரு வித குழப்பநிலையால் தான்.
இதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களிடம் தான் உள்ளது. அவர்கள் தான் மக்களுக்கு சட்டத்தை விளக்கிச் சொல்லி புரிய வைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை, காரணம் அரசியல். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் பலர் சட்டவிரோதமாக நுழைந்து, ஆவணங்களை தயார் செய்து இந்தியர்களாகவே வாழ்கிறார்கள். அதில் சிலர் ஏதேனும் குற்றங்களை செய்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுக்காகத் தான் இந்த சட்டம்” என்கிறார் ஷண்முகம்.
தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிக்க, இந்தியர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் இந்தியர்களுக்கு மட்டும் சென்றடைய இந்தச் சட்டம் உதவும். எனவே வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியிருப்பவர்கள் தான் பயப்பட வேண்டும். இந்தியாவின் குடிமக்கள் அல்ல. இந்த சட்டம் குறித்த அச்சத்தைப் போக்க, அரசு நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட வேண்டும். அப்போது தான் இந்தச் சட்டம் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதை மக்கள் இதைப் புரிந்து கொள்வார்கள்.
சில கட்சிகள் இதை வேண்டாம் என்று சொல்வதால் பாதிக்கப்படப்போவது கிறித்தவர்கள் தான். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத இன்னல்களால் பாதிக்கப்பட்ட கிறித்தவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் தங்கியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை அவசரப்பட்டு எதிர்க்கக்கூடாது” என்கிறார் வழக்கறிஞர் ஷண்முகம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்றால் என்ன?
1955ஆம் ஆண்டில் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் 2019இல் சில மாற்றங்களைச் செய்தது மத்திய அரசு. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2019இல் இந்த சட்டத்திற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.
ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்திருந்த மத்திய அரசு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
