
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த முறை அனைவரின் கவனமும் எந்த விளையாட்டு மற்றும் வீரர் மீது இருக்கும்? எல்லா விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்-2023 எங்கே, எப்போது தொடங்குகிறது?
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளன.
இது தவிர நிங்போ, வென்சோ, ஹூசோ, ஷவோக்ஸிங், ஜின்ஹூவா ஆகிய ஐந்து நகரங்களிலும் இந்த நிகழ்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன?

பட மூலாதாரம், VCG/GETTY IMAGES
இந்தப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இந்த விளையாட்டுகளின் 61 கிளைகளுடன் மொத்தம் 481 போட்டிகள் நடத்தப்படும்.
இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, இரான், இந்தோனீசியா உட்பட மொத்தம் 45 நாடுகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன. இதற்காக சுமார் 12 ஆயிரம் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து எத்தனை வீரர்கள் பங்கேற்கிறார்கள்?
இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தடகள போட்டிக்கான அணி பெரியது. மொத்தம் 65 வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணியில் 44 வீரர்களும், படகோட்டும் போட்டியில் 33 பேர், துப்பாக்கி சுடுவதில் 30 பேர், பேட்மின்டன் விளையாட்டில் 19 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளது.
இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கை உள்ள விளையாட்டு மற்றும் வீரர்கள்
18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் இன்று வரையிலான சிறப்பான ஒன்றாக் கருதப்படுகிறது. இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.
1951 முதல் 2018 வரையிலான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறனைப் பார்த்தால், தடகளப் போட்டியில் இந்திய வீரர்கள் அதிகபட்சமாக 240 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்த ஆண்டின் இந்திய அணிக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்குகிறார். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
தடகளம் (ட்ராக் அண்ட் ஃபீல்ட்)
- நீரஜ் சோப்ரா – ஆடவர் ஈட்டி எறிதல்
- முகமது அனஸ் யஹியா – 4×400மீ இருபாலர் தொடர் ஓட்டம், ஆடவர் 400மீ, ஆடவர் 4×400மீ தொடர் ஓட்டம்
- ஜோதி யாராஜி – மகளிர் 100 மீ தடை ஓட்டம், மகளிர் 200 மீ
- மன்பிரீத் கெளர் – மகளிர் ஷாட் புட்
- ஷைலி சிங் – மகளிர் நீளம் தாண்டுதல்
பேட்மிண்டன்
- கிடாம்பி ஸ்ரீகாந்த் – ஆடவர் ஒற்றையர்
- லக்ஷ்யா சென் – ஆடவர் ஒற்றையர்
- பிவி சிந்து – மகளிர் ஒற்றையர்
- காயத்ரி கோபிசந்த் – மகளிர் இரட்டையர்
- எச்எஸ் பிரணாய் – ஆடவர் ஒற்றையர்
- த்ரிஸா ஜாலி – மகளிர் இரட்டையர்
குத்துச்சண்டை
- நிகத் ஜரீன் – மகளிர் 50 கிலோ
- ப்ரீத்தி பவார் – மகளிர் 54 கிலோ
- பர்வீன் ஹூடா – மகளிர் 57 கிலோ
- ஜாஸ்மின் லம்போரியா – மகளிர் 60 கிலோ
- லவ்லீனா போர்கோஹைன் – மகளிர் 75 கிலோ
சதுரங்கம்
- பிரக்ஞானந்தா – ஆடவர்
- கோனேரு ஹம்பி – மகளிர்
- ஹரிகா துரோணவல்லி – மகளிர்
- வைஷாலி ரமேஷ் பாபு – மகளிர்
- குகேஷ் டி – ஆடவர்
- விதித் குஜராத்தி – ஆடவர்
ஃபென்சிங்
- பவானி தேவி

பட மூலாதாரம், VCG
- அதிதி அஷோக் – மகளிர்
- ஜோஷ்னா சின்னப்பா – மகளிர்
- தீபிகா பல்லிகல் – மகளிர்
- அனாஹத் சிங் – மகளிர்
பளு தூக்குதல்
- மீராபாய் சானு – மகளிர் 49 கிலோ
துப்பாக்கி சுடுதல்
- மனு பாக்கர் – மகளிர் 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்
- ரிதிம் சங்வான் – மகளிர் 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்
- சிஃப்ட் கெளர் சம்ரா – மகளிர் 50மீ ரைபிள் 3-பொசிஷன்
மல்யுத்தம்
- அந்திம் பஞ்சால் – மகளிர் 53 கிலோ
- பஜ்ரங் புனியா – ஆடவர் 65 கிலோ
- தீபக் புனியா
டேபிள் டென்னிஸ்
- ஷரத் கமல் – ஆடவர் ஒற்றையர், இரட்டையர்
- ஜி சத்யன் – ஆடவர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர்
- மனிகா பத்ரா – மகளிர் ஒற்றையர், இருபாலர் இரட்டையர்
வில்வித்தை
- அதனு தாஸ்
- அதிதி கோபிசந்த் சுவாமி
- பர்னீத் கெளர்
ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி விளையாட்டுகளிலும் பதக்கங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2023 கிரிக்கெட் பற்றிய முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 முறையில் கிரிக்கெட் விளையாடப்படும். முதன்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இம்முறை சர்வதேசப் போட்டிகள் என்ற அந்தஸ்தையும் ஐசிசி வழங்கியுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தலா 20 பேர் கொண்ட குழு அனுப்பப்படும். 5-5 வீரர்கள் காத்திருப்பில் (stand by) வைக்கப்படுவார்கள்.
ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும்.
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் ஷெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி: ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)
காத்திருப்பு வீரர்கள்: யஷ் தாக்கூர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் கிஷோர், சாய் சுதர்ஷன்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: ஹர்மன்பிரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கெளர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அஞ்சலி சர்வானி, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, திதாஸ் சாது, அனுஷா பாரெட்டி, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்)
காத்திருப்பு வீரர்கள்: காஷ்வி கெளதம், சினேஹ் ராணா, ஹர்லீன் தியோல், பூஜா வஸ்த்ராகர், சைகா இஷாக்

பட மூலாதாரம், OLYMPIC COUNCIL OF INDIA ARCHIVES
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்தெந்த நாடுகள் முன்னணியில் உள்ளன?
முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1951ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த விளையாட்டுகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணையின்படி 1950இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்பாடுகளில் தாமதம் காரணமாக அது 1951க்கு ஒத்திவைக்கப்பட்டது.
லண்டனில் 1948ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜப்பான் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆசிய விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாக கூட்டத்தில் பங்கேற்கவும் அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அது இந்த விளையாட்டுகளில் பங்கேற்றது.
முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஜப்பானும், சீனாவுமே முதலிடத்தில் இருந்துள்ளன.
சீனா, ஜப்பான், தென் கொரியா, இரான் மற்றும் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்ற முதல் 5 நாடுகள்.
1951 முதல் இந்தியாவின் செயல்பாடு எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
1951, புது டெல்லி, இந்தியா
முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி என மொத்தம் 31 பதக்கங்களை வென்றது. இதுவே இதுவரையிலான இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.
மணிலா, பிலிப்பைன்ஸ்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றது.
டோக்கியோ, ஜப்பான்
மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7வது இடத்தில் இருந்தது. இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றது.
ஜகார்த்தா, இந்தோனேஷியா
நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை வென்றது.
பாங்காக், தாய்லாந்து
ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் வென்றது. இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது.
பாங்காக், தாய்லாந்து
ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியும் பாங்காக்கில் நடைபெற்றது. இந்தியாவுக்கு 6 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் கிடைத்தன.

பட மூலாதாரம், Getty Images
தெஹ்ரான், இரான்
ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 4 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றது.
பாங்காக், தாய்லாந்து
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 26 பதக்கங்களை வென்றது. இதில் 10 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும்.
புது டெல்லி, இந்தியா
ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்றது.
சியோல், தென் கொரியா
பத்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களை வென்றது.
பெய்ஜிங், சீனா
பதினோராவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா டாப்-10இல் இருந்து 12வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தியா ஒரு தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை மட்டுமே பெற்றது.
ஹிரோஷிமா, ஜப்பான்
பன்னிரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 8வது இடத்தில் இருந்தது. இந்தியா 4 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றது.
பாங்காக், தாய்லாந்து
பதிமூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 7 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றது. இந்தியா 9வது இடத்தை பிடித்தது.

பட மூலாதாரம், Getty Images
புஸான், தென் கொரியா
பதினான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஏழாவது இடத்தைப் பிடித்தது. இந்தியா 11 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்றது.
தோஹா, கத்தார்
பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 52 பதக்கங்களை வென்றது. இதில் 10 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலம் அடங்கும்.
க்வான்சோ, சீனா
பதினாறாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை வென்றது. இந்த விளையாட்டுகளில் கிரிக்கெட் அறிமுகமானது. இருப்பினும் இந்தியா அதில் பங்கேற்கவில்லை.
இன்சியான், தென் கொரியா
இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 57 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் உள்ளன. இந்தியா எட்டாவது இடத்தில் இருந்தது.
ஜகார்த்தா, இந்தோனேஷியா
பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரையிலான இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இந்தப் போட்டியிலும் இந்தியா எட்டாவது இடத்தையே பிடித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்