அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக போராடிய யூதர்கள் – நாடாளுமன்றம் முன் திரண்டது ஏன்?

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக போராடிய யூதர்கள் - நாடாளுமன்றம் முன் திரண்டது ஏன்?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான “கேனான் ஹவுஸ்” அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வாஷிங்டனில் நடந்த பேரணி, இரண்டு இடதுசாரி யூத அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டு அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.

ஒரு பெரிய போராட்டக் குழுவினர் பேரணி நடத்தியதாகத் தெரிவித்த போலீசார், நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள தெருக்களை புதன்கிழமையன்று மூடிவிட்டனர்.

இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த கோரி அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூதக்குழுவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துரிதப்படுத்தியுள்ளன.

ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கி 1,400 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று 200 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து இன்று இரண்டு வாரங்களாகிறது.

காஸாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட சுமார் 200 பணயக்கைதிகளில் முதன் முதலாக 2 பேர் வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று அமெரிக்க பிரஜையான ஜூடித் ரானனும் அவரது 17 வயது மகள் நடாலியும் காஸாவிற்கு அருகில் உள்ள தெற்கு இஸ்ரேலில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அவர்களை கடத்திச் சென்றனர்.

கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இருவரை விடுதலை செய்துள்ளது ஹமாஸ் ஆயுதக்குழு.

இதுகுறித்து அமெரிக்க ஊடகத்திடம் பேசிய நடாலின் தந்தை, தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான இரண்டு வாரங்களை தான் கழித்திருப்பதாக விவரித்துள்ளார்.

“நான் கண்ணீரில் இருக்கிறேன், நான் இப்போதுதான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன்,” என்றார் அவர்.

அவர் தனது 17 வயது மகள் தொலைபேசியில் “அதிகம் எதுவும் சொல்லவில்லை” ஆனால் அவர் ஒரு வாரத்தில் சிகாகோவில் வீட்டிற்கு வருவார் என்று கூறினார்.

இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், POTUS

படக்குறிப்பு,

பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு பணயக் கைதிகளான நடாலி மற்றும் ஜூடித் ரானன் ஆகியோர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசும் படத்தை ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

“(அதிபர் பைடன்) இன்று மாலை ஹமாஸால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க குடிமக்களுடன் பேசினார்” என்று தூதரகம் X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

“அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பணயக்கைதிகள் அனைவரையும் அவர்களது அன்புக்குரியவர்களுடன் ஒன்றிணைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”

முன்னதாக வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஜோடி விரைவில் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைவதில் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக பைடன் கூறினார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி தொடங்கிய போதிருந்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு வரும் கத்தார் ஒரு முக்கியமான நாடாகவே பார்க்கப்படுகிறது.

கத்தாரில் ஹமாஸின் அரசியல் அலுவலகம் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை உள்ளடக்கிய அல் உடீத் எனப்படும் ஒரு பெரிய விமானத் தளமும் உள்ளது.

ஹமாஸ் மற்றும் பிற பாலத்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஆறு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கத்தார் அமீரை சந்தித்து காஸாவிற்குள் கொண்டு செல்லப்பட்ட பணயக்கைதிகளின் அவலநிலை குறித்து விளக்கினார்.

கத்தார் ஹமாஸுடன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்க உதவ முன்வந்தது. கத்தாரில் இஸ்ரேலிய தூதரகம் இல்லாவிட்டாலும், கத்தார் அரசின் சார்பில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியர்கள் என இருதரப்பிலும் நுட்பமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் மூலம் இந்த விடுதலை சாத்தியமாகியுள்ளது.

இரண்டு அமெரிக்க பணயக்கைதிகள் இப்போது விடுவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் மற்றும் இங்கிலாந்து பிரதமர் இருவரிடமிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில், கத்தார் மேலும் பல நடவடிக்கைகளில் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவரையும் விடுவித்ததற்கு ஈடாக ஹமாஸ் அமைப்புக்கு என்ன கிடைத்தது என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை, இது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மட்டுமே,” என கத்தார் அதிகாரி ஒருவர் கூறினார்.

நாங்கள் அழுத்தம் கொடுப்போம் – இஸ்ரேலிய அதிகாரி

இஸ்ரேல் பிரதமரின் மூத்த ஆலோசகரான மார்க் ரெகேவ், பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் நியூஷோர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடாலியும் ஜூடித் ரானனும் “நிபந்தனையின்றி” விடுவிக்கப்பட்ட நாள் ஒரு “மகிழ்ச்சியான நாள்” என்று கூறினார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக உருவான “அழுத்தம்” தான் தாயையும் மகளையும் விடுவிக்கக் காரணமாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.

“தூதரக நடவடிக்கைகள் மற்றும் இஸ்ரேலிய ராணுவ வலிமை என இரண்டு நிலைகளின் அழுத்தத்தின் கீழ் இருப்பதை ஹமாஸ் புரிந்து கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அந்த அழுத்தம் தான் பணயக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட செயல்களைச் செய்ய ஹமாஸை கட்டாயப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

“இதேபோன்ற அழுத்தம் தொடர்ந்தால், ஹமாஸ் மேலும் பல பணயக்கைதிகளை விடுவித்துவிடும் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் ஹமாஸ் மீது அந்த அளவுக்கு தொடர்ந்து அழுத்தத்தை அதிகரிப்போம்.”

ஹமாஸ் தனது பங்கிற்கு, “மனிதாபிமான காரணங்களுக்காக” அமெரிக்க ஜோடியை விடுவித்ததாகத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், PALESTINIAN PRESIDENCY/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்தார்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் முன்னதாக காஸாவில் இருந்து ஜூடித் மற்றும் நடாலி ரானன் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். மேலும் அவர்களை விடுவிப்பதில் கத்தார் காட்டிய “தலைமைத்துவத்துக்கு” நன்றி தெரிவித்தார்.

வளைகுடா நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்து பேசியதாக சுனக் கூறுகிறார்.

“அனைத்து பணயக்கைதிகளும் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் கத்தார், இஸ்ரேல் மற்றும் பிறருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று X பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, சுனக் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக எகிப்தில் பாலத்தீன அதிகார சபையின் தலைவரை சந்தித்தார். இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை இருவரும் கூட்டாக கண்டித்தனர் – மேலும் காஸாவில் பொதுமக்கள் இறந்ததற்கு சுனக் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

காஸாவில் இன்னும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருநூறு பணயக்கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இன்னும் பலரை விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இஸ்ரேல் ஹமாஸை அழித்தொழிப்பதாக சபதம் செய்து லட்சக்கணக்கான வீரர்களை காஸாவிற்குள் அனுப்ப தயாராக வைத்துள்ளது.

அந்த வீரர்கள் தாக்குதலைத் தொடங்கினால், பணயக் கைதிகளை மீட்கும் வகையில் கத்தார் அல்லது வேறு தரப்பு பேச்சு நடத்துவது கடினமான பணியாக மாறும்.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சண்டை தொடங்கியதில் இருந்து குறைந்தது 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

இவர்களில் 18 பேர் பாலத்தீனர்கள், மூன்று பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

இந்த இறப்புகளில் 15 பேர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலும், இரண்டு பேர் தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களிலும், உயிரிழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், எட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், மூவர் காணாமல் போயிருக்கலாம் அல்லது பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பத்திரிகையாளர்கள் நெருக்கடி காலங்களில் முக்கியமான பணியைச் செய்யும் பொதுமக்கள் என்றும், போரில் ஈடுபடும் தரப்புகள் அவர்களைக் குறிவைக்கக்கூடாது என்றும் எங்கள் அமைப்பு வலியுறுத்துகிறது” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *