
பட மூலாதாரம், Getty Images
நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நாக் அவுட் சுற்றுக்கான பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அரையிறுதிச் சுற்று நெருங்கும் நிலையில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துள்ளன.
எதிரணிகளை தங்களின் வலுவான பேட்டிங் திறனால் திணறடித்துவந்த தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் நெதர்லாந்துடன் மட்டும் ஒரு ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் அதிலும் வென்றுவிட்டால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அரையிறுதிக்குச் செல்லும்.
ஆனால், கடைசி 2 இடங்களுக்கு மட்டும் 4 அணிகள் போட்டியிடுகின்றன. கணக்கீடு அடிப்படையில் பார்த்தால் இலங்கையும் நெதர்லாந்தும்கூட அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்.
இந்த 2 இடங்களைப் பெறப்போவது யார் என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் வரும் அணியுடன்தான் இந்திய அணி அரையிறுதியில் மோதும்.
இதுகுறித்தும் பல்வேறு வகையான விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்தியாவுடன் மோதப்போவது யார்?
4-வது இடத்தைப் பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நியூசிலாந்து 4வது இடத்தைப் பிடித்தால், கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பையைப் போன்று இந்தியா நியூசிலாந்துடன் மோத வேண்டி வரும்.
ஒருவேளை பாகிஸ்தான் 4-வது இடத்தைப் பிடித்தால் லீக் போட்டி தவிர்த்து, 2-வது முறையாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். இரு அணிகளையும் தவிர்த்து ஆப்கானிஸ்தான் அணியும் 4-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுடன் தோற்றாலும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் 1.376 என்ற அளவில் வலுவாக இருக்கிறது
2-ஆவது இடத்துக்கான போட்டி
தென் ஆப்பிரிக்க அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.
கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். அதேநேரம், ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால், 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முயற்சிக்கும். ஆனால், தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணியைவிட, நிகர ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்க அணி 1.376 என்ற அளவில் வலுவாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட் 0.924 ஆக இருக்கிறது. அடுத்துவரும் வங்கதேசம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் தென் ஆப்பிரிக்காவின் நிகர ரன்ரேட்டை முறியடிக்க முடியும்.
ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணியும் தோற்று, ஆஸ்திரேலிய அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோற்றால், இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது, நிகர ரன்ரேட்டில் எந்த அணி சிறப்பாக இருக்கிறதோ அந்த அணி 2-வது இடத்தைப் பிடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இப்போதுள்ள நிலையில் நிகர ரன்ரேட்டைப் பொறுத்த வரை, நியூசிலாந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைவிட வலுவாக இருக்கிறது
நியூசிலாந்துக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?
நியூசிலாந்து அணி தொடக்கத்தில் குட்டி அணிகளை வீழ்த்தி புள்ளிக்கணக்கில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் வலுவான அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் 0.396 என பாகிஸ்தானைவிட வலுவாக இருக்கிறது.
இன்னும் நியூசிலாந்து அணிக்கு இலங்கை அணியுடன் மட்டும் கடைசி ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வென்றால் 10 புள்ளிகளுடன் முடிக்கும். ஆனால், இலங்கை அணியுடனான வெற்றி மட்டும் நியூசிலாந்து அரையிறுதியை தீர்மானிக்காது. அதற்கு சில காரணிகளும் சாதகமாக இருக்க வேண்டும்.
அதாவது ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால், நியூசிலாந்து அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து அரையிறுதி செல்வதில் சிக்கல் இருக்காது.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் வென்று ஒரு போட்டியில் தோற்றால் 10 புள்ளிகளுடன் நியூசிலாந்துக்கு சிக்கல் ஏற்படுத்தும். ஆதலால் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து சாதாரண வெற்றியாக அல்லாமல் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பெரிய வெற்றியாகப் பெறுவது பாதுகாப்பாக அரையிறுதிக்குள் செல்ல உதவும்.
ஒருவேளை பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்து அணியை வென்றால், 10 புள்ளிகள் பெறும். அப்போது நியூசிலாந்து அணியின் கடைசி இடத்துக்கும் போட்டியாக பாகிஸ்தான் மாறும். இந்த சிக்கல் வராமல் தவிர்க்க இலங்கைக்கு எதிராக பிரமாண்ட வெற்றியை நியூசிலாந்து அணி பெறுவது அவசியமாகிறது.
இப்போதுள்ள நிலையில் நியூசிலாந்து அணி நிகர ரன்ரேட்டை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைவிட வலுவாக 0.398 என்ற அளவில் வைத்துள்ளது. பாகிஸ்தானின் நிகர ரன்ரேட் 0.036 ஆகவும், ஆப்கானிஸ்தானுடையது இன்னும் மைனஸிலிருந்து வெளியேவராமல் -0.330 ஆகவும் இருக்கிறது.
இது நியூசிலாந்து அணிக்கு மிகவும் சாதகமான அம்சமாகும். ஆதலால் இலங்கை அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும். அவ்வாறு நியூசிலாந்து அணியின் நிகர ரன்ரேட்டை முறியடிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமானால், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்தபட்சம் 130 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பைப் பெற முடியும்.
ஒருவேளை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தங்களின் கடைசி லீக்கில் வென்று, ஆப்கானிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் வென்றால் 3 அணிகளும் 10 புள்ளிகள் பெறும். அப்போது நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி வலுவாக இருக்கிறதோ அந்த அணி நான்காவது இடத்தைப் பெறும்.
இப்போதுள்ள நிலையில் நிகர ரன்ரேட்டைப் பொறுத்த வரை, நியூசிலாந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைவிட வலுவாக இருக்கிறது. இதை தக்கவைக்கும் வகையில் இலங்கையை வென்றாலே அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பாதுகாப்பாக அரையிறுதி செல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும்
பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு உண்டா?
பாகிஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானின் நிகர ரன்ரேட் இப்போதுதான் பிளஸ்சிற்கு வந்து +0.036 ஆக உயர்ந்துள்ளது. இதை உயர்த்தும் வகையில் கடைசி வெற்றி அமைய வேண்டும். அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியின் நிகர ரன்ரேட்டைக் கடக்கும் வகையில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும்.
இதில் பாகிஸ்தான் அரையிறுதி செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணி தனது கடைசி லீக்கில் இலங்கையுடன் விளையாடிய பின்புதான் பாகிஸ்தான் அணி கடைசி லீக்கில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. ஆதலால், நியூசிலாந்து அணி வைத்திருக்கும் நிகர ரன்ரேட்டை முறியடிக்கும் வகையில் எத்தனை ரன்களைக் குவிக்க வேண்டும், எத்தனை ஓவர்களில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும், சுருட்ட வேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வை கிடைத்துவிடும்.
இதை வைத்துக் கொண்டு இங்கிலாந்து அணியை வென்று 10 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் நியூசிலாந்தைவிட அதிகமாக உயர்த்தி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருக்கிறது.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோற்றால் 10 புள்ளிகளுடன் பாகிஸ்தானுக்கு போட்டியாக மாறிவிடும்.
பாகிஸ்தான் பாதுகாப்பாக அரையிறுதி செல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து அணியை வெல்ல வேண்டும், நியூசிலாந்து அணியை இலங்கை தோற்கடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இவை நடந்தால் பாகிஸ்தான் அணி எந்தவிதமான தொந்தரவும் இன்றி கடைசி இடத்தைப் பிடித்து அரையிறுதி செல்லும்.
இப்படி நடந்தால் அரையிறுதியில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டங்களிலும் தோற்கும்பட்சத்தில், அதன் நிகர ரன்ரேட் மோசமாகக் கீழே சரியும்
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணி தற்போது 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதாவது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோத வேண்டும். இந்த இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வென்றால், 14 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.
ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் தோற்றுவிட்டால் 12 புள்ளிகளுடன் நின்றுவிடும். ஆஸ்திரேலிய அணி தனது கடைசி இரு லீக்கிலும் வென்றால், 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது.
ஒருவேளை தென் ஆப்பிரிக்கா கடைசி லீக்கில் தோற்று, ஆஸ்திரேலிய அணியும் கடைசி இரு லீக்கில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்றால், 12 புள்ளிகளுடன் இரு அணிகளும் சமநிலையில் இருக்கும். அப்போது, நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 2-வது இடத்தைப் பிடிக்கும்.
இப்போதுள்ள நிலையில் ஆஸ்திரேலியஅணியைவிட தென் ஆப்பிரிக்க நிகர ரன்ரேட் 1.376 என வலுவாக இருக்கிறது. ஆனால், கடைசி லீக்கில் தோற்றால் நிகர ரன்ரேட் குறையும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி பிரமாண்ட வெற்றி பெறும் பட்சத்தில் நிகர ரன்ரேட்டை உயர்த்தி, 2-வது இடம் செல்லவும் வாய்ப்புள்ளது.
அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணி கடைசி லீக்கில் வெல்லும்பட்சத்தில் 14 புள்ளிகளுடன் 2வது இடத்தைப்பிடிக்கும். ஆஸ்திரேலிய அணியும் கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் வங்கதேசம், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பிரமாண்ட வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டை தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகமாக உயர்த்தினால் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் வென்றால் 8 புள்ளிகளுடன் இருப்பது 12 புள்ளிகளாக உயரும். ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோற்கும்பட்சத்தில் அந்த அணியும் 12 புள்ளிகள் பெறும். தென் ஆப்பிரிக்காவும் தோற்கும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் ரேஸில் குதிக்கும். அப்போது 3 அணிகளுக்கும் நிகர ரன்ரேட் ஒப்பீடு செய்யப்படும். அதில் எந்த அணி சிறப்பாக இருக்கிறதோ அந்த அணிகள் 2வது, 3வது இடங்களைப் பிடிக்கும்.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை இரு போட்டிகளில் வென்றாலும், நிகர ரன்ரேட் பெரிதாக உயருமா என்பது சந்தேகம்தான். ஆதலால் இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரட்டை உயர்த்தினால், அரையிறுதிக்குள் வரலாம்.
ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டங்களிலும் தோற்கும்பட்சத்தில், அதன் நிகர ரன்ரேட் மோசமாகக் கீழே சரியும். அப்போது, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி லீக்கில் வென்றிருந்தால், 3 அணிகளும் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குச் சண்டையிடும்.
அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தும்பட்சத்தில் 10 புள்ளிகளுடன் அந்த அணியும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். அப்போது கடைசி இடத்துக்கு மட்டும் 4 அணிகள் மல்லுக்கட்டும். இதில் ஆஸ்திரேலியா வலுவான நிகர ரன்ரேட் வைத்திருந்தால் 4வது இடத்தைப் பிடிக்க முடியும்.
ஒருவேளை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தங்களின் கடைசி இரு லீக்கிலும் தோற்று, ஆஸ்திரேலியாவும் கடைசி இரு லீக்கிலும் தோற்றாலும் 10 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் தனது கடைசி இரு லீக்கிலும் வென்றால், 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்குக் கூட முன்னேற முடியும்.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இரு வெற்றிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெரிதாக மாற்றி, நிக ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்
ஆப்கானிஸ்தான் அதிசயம் நிகழ்த்துமா?
ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் நிகர ரன்ரேட் மைனசில் -0.330 எனச் சரிந்துள்ளது. இன்னும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய இரு வலிமையான அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.
இந்த இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெல்லும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். நிகர ரன்ரேட் ஓரளவு உயர்ந்தால்கூட 4-வது இடத்தைப் பிடிக்க முடியும்.
ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களும், அதன் நிகர ரன்ரேட் மைனசில் இருப்பதும்தான் கவலைக்குரிய விஷயம். ஆப்கானிஸ்தான் அடுத்து ஒரு ஆட்டத்தில் வென்று, ஒன்றில் தோற்றால்கூட நிகர ரன்ரேட் மைனசில் இருந்து மேலே உயருமா என்பது தெரியாது. அப்போது 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அரையிறுதி செல்வது ஆப்கானிஸ்தானுக்கு கடினமாகிவிடும். அதற்கு ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இரு வெற்றிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெரிதாக மாற்றி, நிக ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்.
இல்லாவிட்டால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தங்களின் கடைசி லீக்கில் தோற்க வேண்டும் அவ்வாறு நடந்தால் 8 புள்ளிகளுடன் நிற்கும். அப்போது ஆப்கானிஸ்தான் இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்றால்கூட 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் அமர்ந்து அரையிறுதிக்குள் முதல்முறையாக நுழையலாம்.
தென் ஆப்பிரிக்கா இரண்டாவ இடத்தைத் தக்கவைக்குமா?
தென் ஆப்பிரிக்க அணி தற்போது 8 போட்டிகளில் 6 வெற்றிகள், 2தோல்விகள் என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் 2லிருந்து சரிந்து 1.376 ஆகக் குறைந்திருக்கிறது. இன்னும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆப்கானிஸ்தானுடன் மட்டும் ஆட்டம் மீதமிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பிரமாண்ட வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டையும் வலுவாக உயர்த்தி, தனது 2-வது இடத்தை தக்கவைக்க முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தானுடன் தோற்கும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா 12 புள்ளிகளுடன் நின்றுவிடும், நிகர ரன்ரேட்டும் குறையும்.
அதேசமயம், ஆஸ்திரேலிய அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் வென்றால், 14 புள்ளிகள் பெறவும் வாய்ப்புள்ளது. நிகர ரன்ரேட்டும் உயர்ந்து, 2வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை ஒரு போட்டியில் வென்று, ஒரு போட்டியில் தோற்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணியும் கடைசி லீக்கில் தோற்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடனும் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தால், 2வது இடத்துக்கு முன்னேறலாம்.
ஆதலால், தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலும், இப்போது இருக்கும் 2வது இடம் உறுதியில்லை. ஆஸ்திரேலியாவின் 2 பிரமாண்ட வெற்றிகள், நிச்சயம் தென் ஆப்ரிக்காவுக்கு தொந்தரவாக அமையக்கூடும்.
இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தான் அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நிகரரன்ரேட்டை 2 புள்ளிக்கு மேல் உயர்த்தினால், 2வது இடத்தை பாதுகாப்பாகத் தக்கவைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கை, நெதர்லாந்துக்கு வாய்ப்பு உள்ளதா?
இலங்கையும் நெதர்லாந்தும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கின்றன. இரு அணிகளும் 7 போட்டிகளில் ஆடி 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கின்றன. அடுத்து வரும் இரு ஆட்டங்களிலும் வென்றால் 8 புள்ளிகளைப் பெற முடியும்.
ஆனால் ஏற்கெனவே 8 புள்ளிகளைப்பெற்றிருக்கும் அணிகள் அடுத்துவரும் போட்டிகளில் தோற்க வேண்டும். அப்படி நடந்து நிகர ரன் ரேட்டிலும் கூடுதலாக இருந்தால் இலங்கை அல்லது நெதர்லாந்து அணிகளில் ஏதாவது ஒன்று அரையிறுதிக்குச் செல்ல முடியும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்