கஜகஸ்தான்: உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு விபத்து எப்படி நடந்தது? – ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்கள்

கஜகஸ்தான்: உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு விபத்து எப்படி நடந்தது? - ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்கள்

கஜகஸ்தான், மீத்தேன் கசிவு

பட மூலாதாரம், INSTAGRAM/MANGYSTAU ECOLOGY DEPARTMENT

படக்குறிப்பு,

கஜகஸ்தானில் பதிவான மோசமான மீத்தேன் கசிவு சம்பவம்

பசுமைக்குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மீத்தேன். உலக நாடுகள் அனைத்தும் மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனாலும், உலகம் முழுவதிலும் ஆங்காங்கே நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் மீத்தேன் கசிவு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான மீத்தேன் கசிவு கஜகஸ்தானின் கிராமப்புறப்பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான புதிய பகுப்பாய்வு அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளது பிபிசி வெரிஃபை குழு.

இந்த விபத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதில் 1,27,000 டன் வாயு வெளியேறியதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மீத்தேன் வெளியேறிய கிணற்றின் உரிமையாளரான புசாச்சி நெஃப்ட் நிறுவனம், இந்த அளவுக்கான மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற கூற்றை மறுத்துள்ளது.

அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பசுமைக்குடில் வாயு கால்குலேட்டரின் படி, இந்த அளவிற்கான மீத்தேன் கசிவினால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பானது, ஒரு ஆண்டிற்கு 7,17,000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் கார்களை ஓட்டுவதற்கு நிகரானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கசிவு குறித்து பேசியுள்ள ஐ.நா.வின் சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தின் தலைவர் மன்ஃப்ரெடி கால்டகிரோன், “இந்தக் கசிவின் அளவு மற்றும் கால அளவு அசாதாரணமானது என்றும், இது மிகவும் பெரியது,” என்றும் கூறியுள்ளார்.

கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

2023 ஜூன் தொடங்கிய தீ பரவல் 2023 இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

விபத்து எப்படி நடந்தது?

தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் துளையிட்டுக் கொண்டிருக்கும்போது, 2023-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கிணற்றில் இருந்து மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ பரவல் 2023-ஆம் ஆண்டு இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

இறுதியில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்றுதான் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த கிணற்றை சிமெண்ட் கொண்டு மூடும் பணி நடந்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவின் முதன்மைகூறான மீத்தேன் வாயுவை மனிதர்களால் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது.

ஆனால், மீத்தேன் கூட்டமாக சூழ்ந்துள்ள இடத்தில் சூரியஒளி படும்போது, தனித்துவமான தடயத்தை அது உருவாக்குகிறது. இதை சில செயற்கைக்கோள்களால் கண்டறிய முடியும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மீத்தேன் கசிவு குறித்து முதலில் பிரெஞ்சு புவி பகுப்பாய்வு நிறுவனமான கெய்ரோஸ் ஆய்வு செய்தது. அவர்களது ஆய்வு முடிவுகள் தற்போது நெதர்லாந்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளது.

​​ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்து, 115 தனித்தனி சூழல்களில் அதிக செறிவுள்ள மீத்தேன் காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

மீத்தேன் கசிவு ஏற்பட்ட கிணறு

‘இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு’

இந்த அளவீடுகளை அடிப்படையாக கொண்டு, அந்த ஒரே கிணற்றிலிருந்து 1,27,000 டன் மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எனவே, இந்த நிகழ்வை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது மோசமான மீத்தேன் கசிவு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

கசிவை உறுதிசெய்யும் ஆய்வில் உதவிய வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் குவாண்டர், ” ‘நோர்ட் ஸ்ட்ரீம்’ (Nord Stream) அழிவு மட்டுமே இந்தளவு அதிகமான கசிவை ஏற்படுத்த முடியும்,” என்று கூறுகிறார்.

செப்டம்பர் 2022-இல், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இயற்கை வாயுவைக் கொண்டு செல்லும் இரண்டு குழாய்கள், நீருக்கடியில் குண்டு வெடித்ததில் சேதமடைந்தது. இதில் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களில் இருந்து 2,30,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது.

சர்வதேச ஆற்றல் முகமையின் கூற்றுப்படி, தொழிற்ப்புரட்சிக்குப் பின் உலக அளவில் ஏற்பட்ட 30% வெப்பநிலை அதிகரிப்புக்கு மீத்தேன் தான் காரணம்.

மேகமூட்டம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் செயற்கைக்கோள் கணக்கீடுகளில் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், இந்த ஒரு கிணற்றில் இருந்து மட்டும் அதிகளவிலான மீத்தேன் கசிந்துள்ளது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதுகுறித்து பேசிய குவாண்டர், “வெவ்வேறு மீத்தேன் உணர்திறன் கொண்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மூலம், இந்த மீத்தேன் புகைப்படலம் (Plume) கண்டறியப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

மேலும், “இந்த ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் மீத்தேனை குறிப்பிட்ட வழிகளில் அளவிடுகின்றன, ஆனால், அவற்றிலிருந்து நிலையான அளவீடுகளை மட்டுமே நாங்கள் எடுத்துக்கொண்டோம்,” என்று தெரிவிக்கிறார்.

மங்கிஸ்டாவ் சூழலியல் துறை தனது அறிக்கை ஒன்றில், ஜூன் 9 மற்றும் செப்டம்பர் 21-க்கு இடைப்பட்ட காலத்தில் 10 வெவ்வேறு நேரங்களில், காற்றில் மீத்தேன் செறிவு சட்டவரம்புகளுக்கு அதிகமாக காணப்பட்டதாக, உறுதிப்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான், மீத்தேன் கசிவு
படக்குறிப்பு,

கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது.

நிறுவனம் என்ன சொல்கிறது?

மேலும், வெடிவிபத்துக்கு அடுத்த சில மணிநேரங்களில் காற்றில் மீத்தேன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 50% அதிகமாக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது.

மேலும், அந்தக் கிணற்றில் குறைந்த அளவு வாயுவே இருந்ததாகவும், ஆழ்துளை கிணற்றில் இருந்து எந்தளவிலான வாயு வெளியாகியிருந்தாலும் தீ பற்றியிருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல், கிணற்றிலிருந்து நீராவி மட்டுமே வெளியாகியிருக்கும் என்றும், அதுவே செயற்கைக்கோள் பார்க்கும்போது வெள்ளை புகைப்படலாம் போல் தெரிந்திருக்கும் என்றும் தாங்கள் நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ள அந்த நிறுவனத்தின் மூலோபாய வளர்ச்சிக்கான துணை இயக்குனர் டானியார் துசெம்பாயேவ் , “நாங்கள் இந்த விபத்தை பொறுப்புடன் அணுகியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து ஆராய புசாச்சி நெஃப்ட் நிறுவனமும், தனி ஆய்வு குழு ஒன்றை அமர்த்தியுள்ளது. இந்த ஆய்வு கெய்ரோஸின் ஆய்வு முடிவுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஆனால், அதன் அறிக்கைகளை பார்க்க பிபிசி அனுமதிக்கப்படவில்லை.

அந்த நிறுவனத்தின்படி, செயற்கைகோள்கள் மீத்தேனுக்கு பதிலாக, வளிமண்டலத்தில் தெரிந்த நீராவி போன்ற வேறு வாயுக்களை தவறுதலாக கணிக்கிட்டு விட்டதாகவும், கெய்ரோஸின் ஆய்வில் இந்த வெடிப்பு சம்பவத்திற்கு முன்பே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், கசிவு குறித்த கெய்ரோஸின் ஆரம்பகட்ட ஆய்வை சரிபார்த்த குழுக்கள் இந்த கூற்றை மறுக்கின்றன.

இதுகுறித்து பேசிய குவாண்டர், “நீராவி அல்லது புகையின் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் சோதித்தோம். அதன் முடிவுகளுக்கும், எங்களது அளவீடுகளுக்கும் எந்த தொடர்பையும் நாங்கள் கண்டறியவில்லை,” என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களது விஞ்ஞானிகள் ‘ஒற்றை மீத்தேன் புகைப்படலங்களை’ மட்டுமே தேடியதாகவும், எனவே ‘விபத்திற்கு முன்பு ஏற்கனவே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் தங்களது வழிமுறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

கஜகஸ்தான், மீத்தேன் கசிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

மீத்தேன் உமிழ்வை குறைக்க கஜகஸ்தான் முடிவு

இந்த விபத்து குறித்த அதிகாரபூர்வ விசாரணை அட்யூராவின் தொழில்துறை பாதுகாப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், புசாச்சி நெஃப்ட் நிறுவனம் கிணறு துளையிடும் பணியை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் துளையிடும் பணியில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளுக்கு துணை ஒப்பந்ததாரான ஜமான் எனர்கோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கஜகஸ்தான் எரிசக்தி அமைச்சகம் பிபிசிக்கு வழங்கியுள்ள அறிக்கையில், “இந்தக் கசிவை கையாள்வது சிக்கலான தொழில்நுட்ப பணி என்றும், இது போன்ற விபத்துகளுக்கு உலக அளவில் எந்த விதமான தீர்வும் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய ஆசிய பகுதியில் இது போன்ற பெரிய மீத்தேன் கசிவு விபத்து ஏற்படுவது இது முதல் முறையல்ல.

அண்டை நாடான துர்க்மெனிஸ்தானைப் போலவே, கஜகஸ்தானும் டஜன் கணக்கான ‘சூப்பர்-எமிட்டர்’ நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.

சூப்பர்-எமிட்டர் என்பது வளிமண்டலத்தில் அதிக அளவு மீத்தேன் வெளியிடப்படும் நிகழ்வுகளை விவரிக்க விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படும் பதமாகும்.

ஆனால், இதுவரை நடந்த மீத்தேன் கசிவு சம்பவங்களிலேயே மங்கிஸ்டாவில் நடந்த நிகழ்வே பெரியது எனவும், மற்றவற்றில் இருந்து அது தனித்து நிற்பதாகவும் தெரிவிக்கிறார் குவாண்டர்.

காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் காலநிலை நிபுணர்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவிலான மீத்தேன் உமிழ்வை 30% குறைப்பதற்கான தன்னார்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 150 நாடுகளில் கஜகஸ்தானும் ஒன்று.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *