
பட மூலாதாரம், PUBLIC DOMAIN
எங்கு பார்த்தாலும் தூய தங்கத்தால் பளபளக்கும் நிலம். அதுதான் ’தங்க நகரமான’ எல் டொராடோ.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கத்தால் நிறைந்த இந்த சொர்க்கத்தைத் தேடினர்.
அந்த நகரம் எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஆய்வாளர்கள் வெகு தொலைவில் தேடினர். அந்நகரம் இந்தியப் பெருங்கடலில் எங்கோ இருப்பதாகக் கருதப்பட்டது.
கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் (1451-1506) கடற்படை அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட பிறகு, அவர்கள் 1492-இல் இந்த பிராந்தியங்களில் தங்கள் பார்வையை பதித்தனர்.
அந்த சூழலில், ஆங்கிலேய ஆய்வாளர் வால்டர் ராலே (1552-1618), இங்கிலாந்தின் ராணி எலிசபெத் சகாப்தத்தின் (1533-1603) முன்னணி நபர்களில் ஒருவரானார். கயானா தங்களுடையது என்று கூறும் எஸ்குவிபோ (Essequibo) நதிப் பகுதி பொய்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த கட்டுரை மூன்று அம்சங்களைக் கையாள்கிறது.
முதலில், இந்த யோசனை எங்கிருந்து வந்தது? இரண்டாவது வால்டர் ராலே யார்? மூன்றாவதாக, ஐரோப்பியர்களுக்குத் தெரியாத இன்றைய கயானாவுக்கு அவர் எப்படி இரண்டு முறை சென்றார்?
அந்த சமயத்தில் அவருக்கு மதிப்புமிக்க கனிம வளங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எல் டொராடோவை கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், PUBLIC DOMAIN
வால்டர் ராலேவின் ஓவியம் – 1588
எல் டொராடோ
“பல ஐரோப்பிய ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு நிலப்பகுதிகளை வெற்றிகொண்டவர்கள், எல் டொராடோ என்பது பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கு முன்னதாக, செல்வத்தையும் அறிவையும் வழங்கிய சாலமன் மன்னரின் சுரங்க நிலங்கள் என்று நினைத்தனர்” என்று வரலாற்றாசிரியர் விக்டர் மிசியாடோ பிபிசியிடம் கூறினார்.
“இடைக்காலத்தின் நிலைமைகள் மற்றும் மனநிலையின் அடிப்படையில், கருத்துகள் பைபிள் கருத்துகளுடன் இணைக்கப்பட்டன. ஆய்வாளர்களுள் பலர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தனர். போர்கள், நோய்கள் மற்றும் அமெரிக்காவை கண்டுபிடித்தது உள்ளிட்டவை தேவதூதர்களிடமிருந்து வந்த பரிசுகள் என அவர்கள் கருதினர்” என்கிறார் அவர்.
இந்த பகுதியில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களை கடவுள் பரிசாக அளித்தார் என்ற நம்பிக்கையால் அவர்கள் உந்தப்பட்டனர்.
“பழங்கால சாகச கதைகளில் கூறப்பட்டுள்ளபடி, துன்பங்களைச் சமாளிப்பவர்கள் மட்டுமே தங்கள் இறுதி இலக்கான அதிசய உலகத்தை அடைகிறார்கள்” என்று விக்டர் மிசியாடோ கூறினார்.
அமெரிக்காவில் கூட இந்த தங்க நகரத்தை ஆராய நினைத்த பல பிரபலங்கள் உள்ளனர்.
“எல் டொராடோ இடைக்கால கலாசாரம் மற்றும் சிந்தனையின் விளைவாகும். தங்கத்தில் தோய்க்கப்பட்டு இந்த சொர்க்கம் இருப்பதாக அவர்கள் நம்பினர். இது தெற்கு நோக்கி இருக்கும் என்றும் கருதப்பட்டது. சில பூர்வீகவாசிகள் தங்கம் நிரம்பிய ஒரு பகுதியைப் பற்றிய புராணக்கதைகளையும் கொண்டிருந்தனர்,” என்று பேராசிரியர் பாலோ நிக்கோலி ரமிரெஸ் பிபிசியிடம் கூறினார்.
பிளேக், நோய்கள் மற்றும் போர்கள் போன்றவற்றிலிருந்து இப்பகுதி வேறுபட்டது. இங்கு நிர்வாணமாக அலையும் உள்ளூர் மக்கள் தங்களை ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்களாக கருதுகின்றனர். பசுமையான மற்றும் வளமான பகுதி சொர்க்கமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்ததாக பாலோ நிக்கோலி கூறினார்.
தங்க நகரம் எங்கே?

பட மூலாதாரம், Getty Images
வால்டர் ராலே
வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான செர்ஜியோ புராக் ஹோலண்டா தனது முனைவர் பட்டத்தின் போது இதுகுறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்னர் அக்கட்டுரைகள் விசாவோ பாராசியோ என்ற புத்தகமாக மாற்றப்பட்டது.
ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல காலமாக தங்கச் சுரங்கங்கள் உள்ள நிலத்தைத் தேடி கிடைக்காததால் சலித்துக்கொண்ட போர்ச்சுகீசியர்கள் இந்த நிலங்களைத் தேடி வந்தனர் என்பது ஹாலந்தின் கூற்று.
அரசரின் கட்டளைப்படி அவர்கள் எல் டொராடோவின் தங்க சொர்க்கத்தைத் தேடி வரவில்லை. ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே பல புராணங்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். அவை உண்மையானவை அல்ல என்று தங்களுக்குத் தெரியும் என்று ராமிரெஸ் கூறினார்.
அவர்கள் உண்மையான ஒன்றைத் தேடுகிறார்கள். எனவே, அவர்கள் பாவ் பிரேசிலில் அதைத் தேடினர்.
இந்த ஸ்பானிய புராணக்கதை கொலம்பஸையும் பாதித்தது. அவர் அக்டோபர் 13, 1492-இல் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபோது தனது பயண நாட்குறிப்பில் பூர்வீகவாசிகளின் மூக்கில் தங்கம் தொங்குவதைக் கண்டதாக எழுதினார்.
அக்டோபர் 15 அன்று, மீண்டும் அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், அங்குள்ள தீவுகளில் வீணாக கிடக்கும் தங்கத்தைத் தேடி பார்த்ததாக தெரிவித்துள்ளார். உள்ளூர்வாசிகள் அணியும் தங்க ஆபரணங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பானிஷ் அமெரிக்காவில் முந்நூறு ஆண்டுகளாக எல்டொராடோவைத் தேடியதாக வரலாற்றாசிரியர் ஹாலண்ட் கூறுகிறார்.
“இந்த புராணக்கதை 1530-களில் இருந்து ஸ்பானிஷ் அமெரிக்கா முழுவதும் பரவியது,” என ராமிரெஸ் கூறினார்.
முதலில் அது இன்றைய கொலம்பியா என்று நினைத்தார்கள். பின்னர் வெனிசுலாவிற்கும் பின்னர் மத்திய அமெரிக்காவிற்கும் சிறிது காலம் சென்றது.
இந்த பிரதேசங்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது என்று யூகிக்கக் கடினமாக இல்லை. செல்வத்தின் புகலிடமாக கருதப்பட்ட அப்பகுதி இன்றைய கயானா என்று யூகிக்க முடியாது.

பட மூலாதாரம், PUBLIC DOMAIN
வால்டர் ராலேயின் சித்தரிப்பு தியோடர் டி ப்ரையால் பொறிக்கப்பட்டது.
வால்டர் ராலே
எப்படியிருந்தாலும், வால்டர் ராலேயின் மனம் எல் டொராடோவைக் கண்டுபிடிக்கும் கனவில் நிறைந்திருந்தது. அவர் இங்கிலாந்தின் டெவோனில் ஒரு புராடெஸ்டன்ட் (இறையியல் கோட்பாடுகளை சீர்திருத்த முயன்றவர்கள்) குடும்பத்தில் பிறந்தார். அவர் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் இளையவர்.
அவரது இளமை காலம் ஒழுங்கற்ற பயணங்களில் கழிந்தது. அவர் சட்டத்தைப் படித்தார். ஆனால் அதை ஒருபோதும் முடிக்கவில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
1579 முதல் 1580 வரை டெஸ்மண்ட் எதிர்ப்பு இயக்கத்தை அடக்குவதில் ஈடுபட்டார். இப்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஐரிஷ் நிலப்பிரபுக்கள் எழுப்பிய இயக்கம் இது.
வால்டர் ராலே இந்த அடக்குமுறை திட்டத்தில் தனது சாதனைகளுக்காக பெரும் நிலங்களைப் பெற்றார். அயர்லாந்து முழுவதிலும் 0.2 சதவீத நிலத்தை அவர் வைத்திருந்தார்.
சிறிது சிறிதாக ஆங்கிலேயர்களின் மனதை வென்றார். 1584-ஆம் ஆண்டில், ராணி எலிசபெத் ஒரு சாசனத்தை வெளியிட்டார். வால்டர் ராலே கிராமங்கள், மாவட்டங்கள், வெளியூர் பகுதிகள், நாடுகள், கிறிஸ்தவ மன்னர்கள் அல்லது கிறிஸ்தவ மக்களால் கைப்பற்றப்படாத பிரதேசங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி ஆட்சி செய்ய அல்லது அவரது ஆட்சியின் கீழ் வைத்திருக்க அனுமதித்தார்.
பதிலுக்கு, அவர் தனது பகுதியில் கிடைத்த விலைமதிப்பற்ற கனிமங்களில் 20 சதவீதத்தை அரச குடும்பத்திற்கு செலுத்த வேண்டும்.
பின்னர் அவர் அமெரிக்காவை, குறிப்பாக தென் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கினார். 1584-1585-க்கு இடையில் அவரது தலைமையின் கீழ் ஒரு பிரசாரம் தற்போதைய வட கரோலினா கடற்கரையில் உள்ள ரோவனோக் தீவின் கண்டுபிடிப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வட அமெரிக்காவின் முதல் பிரிட்டிஷ் காலனி இதுவாகும்.
தங்க நகரத்திற்கு பிரிட்டிஷ் அரச குடும்பம் குறி

பட மூலாதாரம், Getty Images
ராணி அனுமதியுடன், வால்டர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை வர்ஜீனியாவில் தொடங்கினார்.
1594-இல் தென் அமெரிக்காவில் ஒரு தங்க நகரம் பற்றிய வதந்திகள் அவரது காதுகளை எட்டின. இந்த விஷயத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. தங்க நகரத்தின் கதையைத் தீர்க்க அவர் உறுதியாக இருந்தார்.
“பூர்வீகவாசிகள் சொன்ன கதைகளின் அடிப்படையில் பல பகுதிகள் எல் டொராடோவாக கருதப்பட்டன,” என மிசியாடோ கூறினார்.
இந்த கதைகள் நிலத்தைக் கைப்பற்ற வருபவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் ஒரு வழியாக பூர்வீக மக்களால் பார்க்கப்பட்டது.
தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டது. “எல் டொராடோவைக் கண்டுபிடித்ததன் பெருமையை ஒவ்வொரு குழுவும் கோர விரும்புகிறது. ஏனெனில், பல அணிகள் இந்த பெருமையை பெற முயற்சித்துள்ளன. அவர்களில் சிலர் ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்டவர்கள் என்றும், சிலர் கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடையவர்கள்” என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
ராலேக்கிற்கு ஆட்சியாளர்களின் முழு ஆதரவு உண்டு.
இங்கிலாந்தும் இதுகுறித்து மிகத் தெளிவாக இருந்தது. சாகசக்காரர்களுக்குத் தேவையான பணத்தை வழங்குவதும், அவர்கள் கண்டறிந்த கனிம வளங்களை முழுமையாகக் கைப்பற்றுவதும் அரச குடும்பத்தின் நோக்கமாக இருந்தது.
இந்த ஆங்கில ஆய்வாளரின் பங்கு ராமிரெஸால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எல் டொராடோ இருப்பதாக அவர் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை நம்ப வைத்தார். சொர்க்கத்தைத் தேடிய ஸ்பானியர்களின் கதையால் ஈர்க்கப்பட்டதாக அவர் அரச குடும்பத்திடம் கூறினார். அந்தப் பகுதியை ஆராய்வதற்கான அவரது யோசனையைப் புரிந்துகொண்டதாக ராமிரெஸ் கூறினார்.

பட மூலாதாரம், PUBLIC DOMAIN
வில்லியம் சேகர் வரைந்த வால்டர் ராலேயின் வண்ண உருவப்படம்
கயானாவிற்கு பயணம்
வால்டர் ராலேயின் சாகசம் வரலாற்று அடிப்படையில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. 1585-இல், ஸ்பானிஷ்-ஆங்கிலோ போர் வெடித்தது. இது இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் மத மோதல்.
தனியார் கொடிகளை பறக்கவிட்டு கப்பல்களை மூழ்கடித்து வெளிநாடுகளை சங்கடப்படுத்தியது. அவர் ராணி எலிசபெத்தின் ஆதரவைப் பெற ஸ்பெயின் மீது படையெடுத்தார்.
அதேசமயம், ராணியிடம் எல் டொராடோவைப் பற்றி வால்டர் ராலே சொன்னார். “இது தங்கம் நிறைந்த பகுதி. பெருவை விட லாபம் அதிகம்” என இன்றைய கயானாவைப் பற்றி அவர் கூறுகிறார்.
பல வருடங்களாகப் போற்றி வந்த இந்தக் கதையை ராலே முழுமையாக நம்புவதாகத் தோன்றியது. 1580-களில் ஸ்பெயினின் சாகச வீரர் பெட்ரோ சர்மினென்டோ டீ கம்போவா என்பவருக்குச் சொந்தமான கப்பலை அவரது தலைமையில் ராணுவம் கைப்பற்றியது.
கம்போவா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நேரத்தில்தான் அவர் தன்னிடம் இருந்த ஸ்பானிஷ் அறிக்கைகளை ஆங்கிலேயர்களுக்கு அனுப்பியிருக்கலாம்.
மற்றொரு ஸ்பானிஷ் சாகசக்காரரைப் பற்றி கம்போவா ராலேயிடம் கூறியிருக்கலாம். அதன் சாராம்சம் என்னவென்றால், அவர் ஓரினோகோ நதிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பூர்வீகவாசிகளால் கடத்தப்பட்டு, கண்ணை மூடிக்கொண்டு எல்லாமே பொன்னிறமாகத் தோன்றும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கண் மூடப்பட்டிருந்ததால் அவருக்கு அந்தப் பகுதியைப் பற்றியும், அங்குள்ள மக்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை.
தன்னிடமிருந்த வரைபடங்களின் உதவியுடன் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முயன்றார். எல் டொராடோ என்பது ஓரினோகோ ஆற்றின் தெற்கே உள்ள எஸ்குவிபோ ஆற்றின் அருகே உள்ள மனோவா நகரம் என்று ஊகிக்கப்பட்டது. அங்கே ஒரு ஏரி இருப்பதாகவும் அதன் பெயர் பரிமே என்றும் நினைத்தார். இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, எல்டொராடோ பற்றிய ஒரு கணிப்பு வந்துள்ளது.
பின்னாளில் இந்த எண்ணம் அவர் மனதில் பதிந்தது.
”பூர்வகுடி புராணங்களும் இடைக்கால சிந்தனையும் ஒன்றாக கலந்து இந்த ஆங்கிலேயரின் மனதை ஆக்கிரமித்துள்ளது” என்கிறார் ராமிரெஸ்.
ஆய்வாளர்களின் கடினமான பயணம்

பட மூலாதாரம், Getty Images
ராணி எலிசபெத் மற்றும் வால்டர் ராலேவை சித்தரிக்கும் ஓவியம்
அரச குடும்பத்தை இதில் முதலீடு செய்ய அவர் சமாதானப்படுத்தினார். பிப்ரவரி 6, 1595 அன்று, ராலேயின் கப்பல் இங்கிலாந்தின் பிளைமவுத்திலிருந்து புறப்பட்டது.
கேனரி தீவுகளுக்கு அருகில் ஒரு ஸ்பானிஷ் கப்பலை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்தார்கள். இதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கும் சில வெடிபொருட்கள் கிடைத்தன.
ஸ்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த டிரினிடாட்டில் இருந்து தங்கள் ஆய்வுகளை தொடங்க முடிவு செய்தனர். இந்த செயல்பாட்டில் அவர்கள் அந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி புவேர்ட்டோ டி எஸ்பானாவின் சிறிய கோட்டையை கைப்பற்றினர்.
அங்கிருந்து அந்த காலனித்துவ ஆட்சியின் மையமாக இருந்த சஞ்சோஸ் டீ ஓருனா (Sanjos de Oruna) சென்றார்.
ராலே ஒருனா கவர்னரை விசாரித்தார். மனோவா, எல் டொராடோ பற்றி அந்த ஆளுநருக்குத் தெரிந்திருக்கலாம். இருப்பினும், அவர் ஆங்கிலேய மாலுமிகளை அங்கு செல்வதை ஊக்கப்படுத்தியிருக்கலாம்.
பின்னர் பயணம் ஓரினோகோ நதியை நோக்கி தொடர்ந்தது. ஒரு மாதத்திற்குத் தேவையான உணவு நிரப்பப்பட்ட இரண்டு படகுகளில் நூறு ஆய்வாளர்கள் பயணம் செய்தனர்.
பருவநிலை மாறியதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெப்பமண்டலத்தின் கடுமையான வெப்பமும் அடிக்கடி பெய்யும் மழையும் அவர்களை எரிச்சலூட்டின. வழிகாட்ட வந்த பூர்வீகவாசிகள் காணாமல் போனதால், ஆய்வாளர்கள் குழு மனம் உடைந்தது.
இருப்பினும், அவர்கள் ஓரினோகோ கடற்கரையை அடைந்தவுடன், அவர்கள் ஒரு நேர்மறையான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அடர்ந்த காடு அவர்களை புல்வெளிகளை நோக்கி அழைத்துச் சென்றது.
அவர்களுக்கு சில பின்னடைவுகள் இருந்தன. வழியில் ஸ்பானிய கப்பல்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்று பயந்தார்கள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு ராலேயின் பயணம் கரோனி ஆற்றின் கரையை அடைந்தது. அங்கு அவர்கள் வாராவ் மற்றும் பெமாங் என்ற இரண்டு பேரை சந்தித்தனர். அங்கு ராலேயும் அவரது குழுவினரும் மனோவா, எல் டொராடோவின் வளமான நாகரிகத்தைப் பற்றி பூர்வீக மக்களிடமிருந்து மீண்டும் ஒருமுறை கேட்டறிந்தனர்.
ராலே மவுண்ட் ரோரைமா என்ற மலையைக் கண்டார். அதிலிருந்து 12 நீர்வீழ்ச்சிகள் விழுகின்றன என்று அவர் தனது புத்தகத்தில் எழுதினார். அதில் ஒன்று தேவாலய கோபுரத்தை விட உயரத்தில் இருந்து விழுகிறது என்றார். ஆனால், அவர் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியைப் பார்த்திருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தார்கள். ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த தடையும் இல்லாமல் 807 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது.
ஆனால், அவர்கள் ஏற்கனவே 400 மைல்கள் பயணம் செய்திருந்தனர். மழைக்காலம் வருவதால், குழுவின் அனைத்து உறுப்பினர்களும் திரும்பிச் செல்வதற்கு முன் தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ராலே உத்தரவு பிறப்பித்தார். ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து திரும்பினார்கள்.
திரும்பிய அவர்களுக்கு இங்கிலாந்தில் பெரிய வரவேற்பு இல்லை. உயர் மதிப்பு கொண்ட ராபர்ட் செசில், அரச குடும்பத்தின் முதலீடு இருந்த போதிலும், குழுவால் மதிப்புமிக்க பொருட்களை மீண்டும் கொண்டு வர முடியவில்லை என்று குறிப்பிட்டார். அவர்கள் கொண்டு வந்த கற்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதிக மதிப்பு இல்லாதது தெரியவந்தது.
இதனால் கோபமடைந்த ராலே தனது பயணத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட முடிவு செய்தார். புத்தகம் ‘தி டிஸ்கவரி ஆஃப் தி கிரேட்’ (The Discovery of the Great), ’ரிச் அண்ட் பியூட்டிஃபுல் எம்பையர் ஆஃப் கயானா’ (Rich and Beautiful Empire of Guyana) என்று பெயரிடப்பட்டது. இதில் ’கிரேட்’ என்ற சொல் மனோவாவின் தங்க நகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (மனோவாவை ஸ்பானியர்கள் எல் டொராடோ என்று அழைத்தனர்).

பட மூலாதாரம், PUBLIC DOMAIN
1860 இல் ராலே தூக்கிலிடப்பட்ட காட்சியின் சித்தரிப்பு
”ராலே தலை துண்டிக்கப்பட வேண்டும்”
இந்த புத்தகம் பயணம் பற்றிய உண்மையான தகவல்களை வழங்குகிறது. அந்தப் பகுதியில் விலையுயர்ந்த கற்கள் கிடைத்ததாக அவர் எழுதினார்.
இருப்பினும், சில வழிகளில், வால்டர் ராலேயின் செல்வாக்கு குறைந்துவிட்டது. “இது பயண இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு” என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பெஞ்சமின் ஷ்மிட் எழுதினார். மேலும், புதிய உலகைக் கண்டுபிடிப்பதற்கான ஐரோப்பியர்களின் தேடலைப் புதுப்பிப்பதற்கான முக்கிய வழிமுறைகளை இந்தப் புத்தகம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு, ஆங்கிலேய சாகசக்காரர் தனது தோழரான லாரன்ஸ் கெம்ஸை (1562-1618) மற்றொரு பயணத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்.
அவர் உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதிலும், வரைபடங்களில் அந்தப் பகுதியைப் பாதுகாக்க தகவல் சேகரிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக எஸ்குவிபோ ஆற்றின் கரையோரப் பகுதியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் கெம்ஸின் பங்கு மறுக்க முடியாதது.
பரிமே என்று கருதப்படும் ஏரியை கெம்ஸ் கண்டுபிடித்தார். இப்போது இந்த ஏரி பெரிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1603-ஆம் ஆண்டில், எலிசபெத்-I இன் வாரிசுகள் ஆட்சிக்கு வந்த பிறகு, கிளர்ச்சி மற்றும் சதி குற்றச்சாட்டின் பேரில் ராலே கைது செய்யப்பட்டார். 1616-ஆம் ஆண்டு அரச குடும்பம் அவரை மன்னித்த பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1617-இல் பிரிட்டிஷ் அரச குடும்பம் மீண்டும் ஒருமுறை கயானா செல்ல அவருக்கு அனுமதி அளித்தது.
இந்த பயணத்தின் போது, அவரது குழு இங்கிலாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி, ஓரினோகோ ஆற்றில் ஒரு ஸ்பானிஷ் கப்பலைத் தாக்கியது.
ஸ்பானிய மாலுமிகளின் அழுத்தத்தின் கீழ், ஸ்பெயினின் மன்னர் ஜேம்ஸ் I வால்டர் ராலே தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
29 அக்டோபர் 1618 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள பழைய அரண்மனை முற்றத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்