பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.
தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. மேல் முறையீட்டுக்கு சம்பத் குமார் கோரிக்கை வைக்கவில்லை என்றாலும், தண்டனை நிறுத்தப்படுவதற்கான முடிவை நீதிமன்றமே எடுத்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு தோனி, சம்பத் குமார் மீது 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடுத்தார். ஐபிஎல் சூதாட்ட ஊழலில் தோனி தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியதற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாகத் தனது கூற்றை வழங்கியிருந்த சம்பத் குமார், நீதிமன்றம் சட்டத்தின் பாதையிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி முட்கல் கமிட்டி, அறிக்கையை சரியாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்திருந்த சம்பத் குமார், உச்சநீதிமன்றம் சில ஆவணங்களை சிபிஐக்கு வழங்காதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
தோனி தனது மனுவில், சம்பத் குமாரின் இந்தக் கருத்துகள் நீதித்துறை மீது இழிவானவை மற்றும் அவமதிப்பானவை என்றும், அவரது கருத்துகளின் மூலம் நீதித்துறையின் நேர்மையைக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சம்பத் குமாரின் கருத்துகளுக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கை ஆய்வு செய்த தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆர். சுண்முகசுந்தரம், தோனிக்கு அவமதிப்பு வழக்கில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
தோனி தொடுத்த ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு
பட மூலாதாரம், Getty Images
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக 2013ஆம் ஆண்டு, குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக டெல்லி காவல்துறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அன்கீத் சவன் ஆகியோரைக் கைது செய்தது.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்து, நீதிமன்ற வழக்குகள் பலவும் நடந்தன. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க, நீதிபதி முகுல் முட்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு மே மாதம் நியமித்தது.
இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.ஸ்ரீநிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா மற்றும் 12 வீரர்களின் பங்கு குறித்து விசாரிக்க இந்த கமிட்டி நியமிக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் அறிக்கை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தில் தனது மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் இந்த அறிக்கை குறித்து விவாதம் நடத்திய ஊடகத்தின் மீதும் தோனி ரூ.100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கை 2014ஆம் ஆண்டு தொடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அந்த ஊடகம், கமிட்டியின் முன்பு சம்பத் குமார் கொடுத்த அறிக்கையைத்தான் தாங்கள் செய்தியாக வெளியிட்டதாகத் தெரிவித்தனர்.
தேசிய அளவில் முக்கியமான விவகாரம் ஒன்று ஊடகங்கள் பேசுவதைத் தடுக்க தோனி நினைக்கிறார் என்றும் கூறியிருந்தது.
தோனி வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு
பட மூலாதாரம், Getty Images
தோனி தொடுத்த மானநஷ்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சம்பத் குமார் க்யூ பிரிவின் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற முறையில், கமிட்டியின் முன்பு சமர்ப்பித்த அறிக்கையை வைத்துக்கொண்டு அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வது சரியல்ல என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் வழக்கின் விசாரணை தொடங்கவுள்ள நேரத்தில், தோனி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
எனவே, உச்ச நீதிமன்றத்தில், சம்பத் குமார் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2022ஆம் ஆண்டு தொடர்ந்தார் தோனி.
தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அவர் தனது மனுவில், 2014ஆம் ஆண்டு தாம் தொடுத்த வழக்குக்கு 2021ஆம் ஆண்டுதான் ஐபிஎஸ் அதிகாரி பதிலளிக்க விரும்பியுள்ளார் என்றும், அவரது கூற்றைப் படிக்கும்போது, மிக அதிர்ச்சிகரமான வகையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
“உச்சநீதிமன்றம் நீதியின் பாதையிலிருந்து தனது கவனத்தைத் திருப்பிவிட்டதாக சம்பத் குமார் குறிப்பிட்டுள்ளார்” என்று தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தோனி தொடர்வதற்குக் காரணமே வாய்ப்பூட்டு உத்தரவு பெறுவதற்காக என்றும், தோனி நியமித்திருக்கும் வழக்கறிஞரை பார்க்கும்போதே இந்த வழக்கின் பின்னால் உள்ள திட்டம் தெரிகிறது எனவும் குமார் தெரிவித்திருப்பதாக தோனி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரியின் கூற்று நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கூட்டாளியாக இருக்கிறது எனக் கூறுவது போல் உள்ளது என்று தெரிவித்தது. எனவே தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உத்தவிட்டது.
இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நீதிமன்ற அவமதிப்புக்காக ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
