
பட மூலாதாரம், Getty Images
கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இது பள்ளிக்கூட மட்டத்திலும் சாதி உணர்வு தீவிரமடைந்திருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்புவதோடு, எதிர்காலம் குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் பட்டியலின மாணவர்கள் மீது பிற சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வுகள் தொடர் கதையாகியிருக்கின்றன.
நாங்குநேரியில் தாக்கப்பட்ட பட்டியலின மாணவர்
சம்பவம் 1: ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பட்டியலின மாணவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவருடைய தங்கையும் இதில் வெட்டப்பட்டார்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் கூறிய வேலைகளைச் செய்யாததாலேயே அந்த மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து இந்த மாணவரைத் துன்புறுத்தியதால், அது தொடர்பாக புகார் அறிக்கப்பட்டது. இதில் கோபமடைந்த ஆதிக்க சாதி மாணவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு சிறார்கள் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவரின் வீடு
‘நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம்?’
சம்பவம் 2: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவருக்கு இடையே சிறிய பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று இந்த இரு மாணவர்களுக்கும் இடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியலின மாணவர் ஒருவர் அந்தச் சண்டையை விலக்கிவிட முயற்சித்துள்ளார். ஆனால், “பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம்?” என பட்டியலின மாணவர் மீது ஒரு மாணவர் கேள்வியெழுப்பினார்.
பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, அந்த மாணவர் 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குகளில் அழைத்துக்கொண்டு, பட்டியலின மாணவரின் சொந்த ஊரான லட்சுமிபுரத்துக்கு வந்து அவரைச் சரமாரிாயகத் தாக்கிவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அம்பேத்கர் படத்தால் வந்த பிரச்னை
சம்பவம் 3: இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இராணிபேட்டை சோளிங்கரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவர் அம்பேத்கர் படத்தை தனது செல்போனில் முகப்பு படமாக வைத்திருந்த நிலையில், அதனை மாற்ற வேண்டுமென சில மாணவர்கள் கோரினர். அதனை மாற்ற அந்த மாணவர் மறுத்துவிட்ட நிலையில், அதனை விரும்பாத மாணவர்கள் வெளியிலிருந்து சிலரை அழைத்துவந்து பட்டியலின மாணவரைத் தாக்கச் செய்தனர். இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொள்ளும் காட்சிகள் வைரலான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த வழக்கு சாதி அடிப்படையிலான மோதலாக காட்டப்படாமல், இரு தரப்பு மாணவர்கள் இடையிலான மோதலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அல்லாளி கவுண்டனூரைச் சேர்ந்த பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டி தாக்கப்பட்டனர்
பட்டியலின மாணவர், அவரது பாட்டி மீது தாக்குதல்
சம்பவம் 4: இந்தச் சம்பவத்தின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே இன்னொரு சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. கரூர் மாவட்டம் அல்லாளி கவுண்டனூரைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீடு திரும்பும்போது, அந்த மாணவருக்கும் புலியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பட்டியலின மாணவர் தனது மாமாவிடம் கூறியதையடுத்து, அவர் அந்த மாணவர்களை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர்கள் அல்லாளி கவுண்டனூருக்கு கும்பலாக சென்று பட்டியலின மாணவரையும் அவரது பாட்டி காளியம்மாளையும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இன்னும் ஆறு பேர் தேடப்பட்டுவருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் தமிழ்நாட்டில் பட்டியலின மாணவர்கள் மீது இத்தனை தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது, மாணவர்கள் மிக வேகமாக சாதிரீதியாக அணி திரள்வதைக் காட்டுகிறது.
மாணவர்கள் சாதி ரீதியாக அணி திரள்வது எப்போது துவங்கியது?
தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் கல்வியின் தரம்சார்ந்து, உள்கட்டமைப்புச் சார்த்து பல பிரச்சனைகள் உண்டு என்றாலும், சாதி சார்ந்த பிரச்சனைகள் பெரிய அளவில் எழுந்ததில்லை. ஆனால், 1990களின் மத்தியில் இந்த நிலை மாற ஆரம்பித்தது.
தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கூட மாணவர்கள், சிவப்பு, பஞ்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கயிறுகளை தங்கள் சாதிக்கு ஏற்படி இரண்டு கயிறுகளாகவோ, ஒற்றைக் கயிறாகவோ அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு வர ஆரம்பித்தனர்.
இதன் மூலம் தங்கள் சாதியைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் காண்டுகொள்வதோடு, விளையாட்டு வகுப்புகளிலும் பள்ளிக்கூடங்களுக்கு வெளியிலும் சாதி அடிப்படையில் அணி திரள ஆரம்பித்தனர்.
கயிறுகள் மட்டுமல்லாமல் ரப்பர் பேண்ட்கள், பொட்டு ஆகியவற்றின் மூலமும் சாதியை அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அரசுப் பள்ளிக்கூடங்களில் மட்டும் இருந்த இந்தப் போக்கு மெல்லமெல்ல சில தனியார் பள்ளிகளிலும் நுழைந்தது. 13-14 வயதில் அதாவது, எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இவ்வாறு அணிதிரள ஆரம்பித்தனர் மாணவர்கள். மாணவர்கள் மட்டுமல்லாமல், மாணவிகளும் நெற்றியில் வைக்கும் பொட்டின் மூலம் தங்கள் சாதியை அடையாளப்படுத்துவதும் நடந்தது.
சில மாணவர்கள் தங்கள் சாதியைச் சேர்ந்த தலைவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை பஸ்பாஸ் அட்டையின் பின்புறம் வைத்துக்கொள்வதும் நடந்தது. இது தொடர்பாக மாணவர்களிடம் பல முறை மோதல்கள் நடந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், இது போன்ற சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை விதித்தது. ஆனால் பெரிய அளவில் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பள்ளி மாணவர்கள் இப்படி சாதி ரீதியாக அடையாளப்படுத்திக்கொண்டு, அணிதிரள்வதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மாநில அளவில் 2019ஆம் ஆண்டுவாக்கில்தான் துவங்கின
நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்குத் தயக்கமா?
ஆனால், பள்ளி மாணவர்கள் இப்படி சாதி ரீதியாக அடையாளப்படுத்திக்கொண்டு, அணிதிரள்வதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மாநில அளவில் 2019ஆம் ஆண்டுவாக்கில்தான் துவங்கின.
2019ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கல்வித் துறை இயக்குநர், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் காவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் திலகம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை வைத்து ஒன்று சேர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரிகளுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பைத் தெரிவித்த நிலையில் பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்,” என்று பா.ஜ.க தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வேறு சில பா.ஜ.க பிரமுகர்கள் தாங்கள் கல்வியமைச்சருடன் பேசியதாகவும் எந்த மதத்தினரின் உணர்வுகளையும் அரசு புண்படுத்தாதென கல்வியமைச்சர் தெரிவித்ததாகவும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் அப்போதைய கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் பல தரப்பினரையும் அதிரவைத்தன. இந்தச் சுற்றறிக்கை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறித்தே தனக்குத் தெரியாது என்று கூறினார். மேலும், “தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை,” என்றும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் இந்தப் பின்வாங்கலை பா.ஜ.க. வெற்றியாகக் கருதியது. எச். ராஜா அடுத்த கட்டத்திற்குச் சென்று, “இந்துமத உணர்வுகளைக் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கோரிக்கைவிடுத்தார். அந்தச் சுற்றறிக்கை இப்போதும் அமலில் இருக்கிறது என்றாலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை.

பட மூலாதாரம், PRINCE GAJENDRABABU
சாதிரீதியான சங்கங்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணை்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
‘பள்ளிகளில் சாதிய பிரச்னைகள் எப்போதுமே நடக்கின்றன’
இந்த நிலையில்தான், இந்த ஆண்டில் பல சம்வங்கள் தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன. சாதிரீதியான சங்கங்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணை்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“தமிழ்நாட்டில் சாதீய சங்கங்கள் என்றைக்கு மக்கள் மத்தியில் தங்கள் பிடியை இறுக்கத் துவங்கினவோ அப்போதே இது ஆரம்பித்துவிட்டது. அதற்குப் பிறகு சாதிக் கூட்டங்களுக்கு மக்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால், சாதி உணர்வு என்பது இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது. ஆகவே, பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது சக மாணவனை, நண்பனாக பார்க்காமல், தனக்கு கீழே உள்ளவனாக பார்க்கச் சொல்கிறது” என்கிறார் பிரின்ஸ்.
ஆனால், இப்போதுதான் இதுபோல நடப்பதாகச் சொல்ல முடியாது. எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது தொழில்நுட்ப வசதிகளால் எளிதில் வெளியில் தெரிகிறது என்கிறார் பிரின்ஸ்.
இந்தக் கருத்தையே எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிரும் எதிரொலிக்கிறார். “ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இடையிலான மோதல் தொடர்பாக 50 – 55 வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. ஆனால், பேருந்தில் மோதல், விளையாட்டின் போது மோதல் என பதிவுசெய்திருப்பார்கள். ஆகவே அந்தச் செய்திகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பண்ருட்டியில் கபடி விளையாடும்போது பட்டியலின மாணவரின் கால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரின் மேல்பட்டதால் கொலையே நடந்திருக்கிறது. ஆனால், அது விளையாட்டின் போது நடந்த மோதலாக பதிவுசெய்யப்படும்,” என்கிறார் கதிர்.
மேலும் பேசிய அவர், “வேங்கை வயல் சம்பவம் நடந்த பிறகு, புதுக்கோட்டையில் இருந்து சாதி தொடர்பான விவகாரங்கள் பல வெளியில் வந்தன. மேல்பாதி கோவில் விவகாரம் வந்த பிறகு, அதே போல பல கோவில் நுழைவு முயற்சிகள் செய்திகளாயின. இப்போது நாங்கு நேரி சம்பவத்திறஅகுப் பிறகு பட்டியலின மாணவர்கள் தாக்கப்படும் விவகாரம் ஊடகங்களில் பதிவாகிறது. பிறகு, வேறு ஏதாவது நடந்தால், இதை மறந்துவிடுவார்கள்,” என்கிறார் கதிர்.
ஆனால், இது மிகத் தீவிரமான பிரச்சனை, என்கிறார் அவர். “நாங்குநேரி சம்பவத்திற்குப் பிறகு மாணவர்கள் கையில் இருந்த கயிறு அரிவாளாக மாறியிருக்கிறது என்று எழுதினேன். அதற்கு அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பத்து பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறுகளைக் கட்டுவதாகவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். அதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்கள்?” எனக் கேள்வியெழுப்புகிறார் கதிர்.
கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் இடையில் சாதி ரீதியாக நடந்த மோதல்களில் ஒரு வழக்கில்கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்கிறார் அவர்.
மாணவர்களிடம் சாதி உணர்வு அதிகரிக்கக் காரணம் என்ன?
சாதிப் பாகுபாடு தொடர்பான எந்தக் கல்வியும் மாணவர்களுக்குக் கிடைக்காததுதான் காரணம் என்கிறார் பிரின்ஸ். “பள்ளிக்கூடத்தில் சாதிய உணர்வு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை. வெறுமனே நன்னெறி வகுப்பு வேண்டும் என்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் நன்னெறி வகுப்பு இருந்த காலகட்டத்தில் அதில் படித்துவிட்டு வந்தவர்கள்தானே இன்றைக்கு சாதித் தலைவராக இருக்கிறார்கள். ஏனென்றால், நன்னெறி வகுப்புகளில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுவதில்லை. சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூகக் கட்டமைப்பு. அது அநீதியானது என்பதை மாணவர்களுக்கு உணர வைக்க வேண்டும்,” என்கிறார் பிரின்ஸ்.
அரசியல் தலைவர்கள் சாதி அடையாளங்களை தொடர்ந்து வலியுறுத்துவது இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் கதிர். “இந்தக் குற்றங்களைச் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் 13- 15 வயதில் இருக்கிறார்கள். பதின் பருவம் ஒருவரது வாழ்வில் மிக முக்கியமான பருவம். அந்த காலகட்டத்தில்தான் தான் யார் என்பதை ஒருவன் அடையாளம் காண ஆரம்பிக்கிறான். அந்த காலகட்டத்தில் சாதி அடையாளத்தை நோக்கி ஈர்க்கப்படும் மாணவர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கும். அவர்களுக்கு ஆங்கிலம் வராமல் இருக்கலாம். நல்ல உடை உடுத்தத் தெரியாமல் இருக்கலாம். அதெல்லாம் மீறி தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்த சாதியை கையில் எடுக்கிறார்கள். ஒரு அரசியல் தலைவர் தங்கள் சாதியை ஆண்ட பரம்பரை என்று சொல்லும்போது அந்த அடையாளம் அவனுக்கு வசதியாக இருக்கிறது. தலித்துகளுக்கு மட்டுமல்லாமல், எல்லா சாதியைவிடவும் தான் மேலானவன் என்றுதான் அவன் நினைக்கிறான். ஆனால், கத்தியை மட்டும் தலித்துகளுக்கு எதிராக எடுக்கிறான்,” என்கிறார் கதிர்.
பள்ளிக் குழந்தைகள் வழக்கமாக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்வார்கள்; முன்பெல்லாம் விளையாட்டாக அதைச் செய்தவர்கள், இப்போது சாதி ரீதியான சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிச் செய்வதை மிகச் சாதாரணமாக கருதுகிறார்கள், அது அபாயகரமானது என்கிறார் கதிர். சமீபகாலமாக மாணவர்களிடம் சாதி சார்ந்த கும்பல் மனநிலை மிக வேகமாக அதிகரித்துவருகிறது என்பதையு் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

அரசியல் தலைவர்கள் சாதி அடையாளங்களை தொடர்ந்து வலியுறுத்துவது இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்
இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?
சாதி என்பது இல்லை என்று சொல்லிக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண முடியாது என்கிறார் கதிர். அவர் சில தீர்வுகளை முன்வைக்கிறார். “தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதி எந்த அளவுக்கு ஊறிப்போயிருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அதனைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும். எல்லா பள்ளிக்கூடங்களிலும் சாதி ரீதியான பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் அளிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்,” என்கிறார் கதிர்.
மாணவர்கள் கைகளில் கட்டியிருக்கும் சாதிக் கயிறை வெட்டிவிடுவது அதற்குத் தீர்வு அல்ல என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“அப்படியான கயிறுகளை வெட்டும்போது ஆசிரியருக்கு பயந்தோ, பள்ளியைவிட்டு நீக்கிவிடுவார்கள் என்றோ மாணவர்கள் அந்த சமயத்தில் பேசாமல் இருப்பார்கள். ஆனால், அது ஒரு அடக்கு முறை. அது எப்போதும் பிரச்னைக்கு தீர்வாகாது. மாணவர்களைப் பொறுத்தவரை உணரவைத்து திருத்த வேண்டும். அத்தகைய விவாதம் எந்த பள்ளிக்கூடத்திலும் நடத்தப்படவில்லை. அதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் ஒன்று சாதி உணர்வோடு இருக்கிறார்கள். அல்லது அச்சத்தோடு இருக்கிறார்கள். சாதியை எதிர்க்கும் ஆசிரியர்கள் பிரச்சனைக்குள்ளாகும்போது அரசுக் கட்டமைப்பு அவர்களை கைவிடுகிறது. இதனால், மற்றவர்கள் அந்தத் திசையில் செல்லவே அஞ்சுகிறார்கள்,” என்கிறார் பிரின்ஸ்.

பட மூலாதாரம், DEVANEYAN
பெரும்பாலான ஊடகங்கள் இதில் தொடர்புடைய அனைத்து மாணவர்களின் அடையாளங்களையும் வெளியிட்டுவிட்டன என்கிறார் குழந்தைகள் உரிமைகள் ஆர்வலரான தேவநேயன்
‘ஊடகங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும்’
இந்த விவகாரத்தில் பல ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார் குழந்தைகள் உரிமைகள் ஆர்வலரான தேவநேயன். “இந்தச் சம்பவம் தொடர்பான எல்லாக் குழந்தைகளின் வாழ்க்கையிலும் இது பெரிய வடுவாக மாறிவிடும். காரணம், இந்த சம்பவம் நடந்தவுடன் பெரும்பாலான ஊடகங்கள் இதில் தொடர்புடைய அனைத்து மாணவர்களின் அடையாளங்களையும் வெளியிட்டுவிட்டன. குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும் அதை யாரும் மதிப்பதில்லை,” என்கிறார் தேவநேயன்.
இதில் குழந்தைகளை மட்டும் தண்டிப்பது தீர்வாகாது என்கிறார் அவர். “குழந்தைகள் சமூகத்திடம் இருந்துதான் கற்கிறார்கள். குழந்தைகளை தண்டிப்பதால் மட்டும் இது குறையாது. போக்சோ சட்டம் வந்த அன்றைக்கே நாடு முழுவதும் குழந்தைகள் மீதான குற்றங்கள் பல பதிவாயின. அப்படித்தான் இருக்கிறது நிலவரம்,” என்கிறார் தேவநேயன்.
மேலும் பேசிய அவர் “பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. ஆசிரியர்கள் சாதி ரீதியாக அணிதிரள்கிறார்கள். முன்பெல்லாம், சாக்பீஸ் எடுத்துவரவோ சிறு வேலைகளுக்கோ நன்றாக படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அழைப்பார்கள். இப்போது தன் சாதி மாணவராகப் பார்த்து அழைக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் தீண்டாமை குறித்தோ, அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் உரிமைகள் குறித்தோ சொல்லிக்கொடுப்பதில்லை. அதன் விளைவுதான் இது,” என்கிறார் தேவநேயன்.
சாதி ரீதியான கலவரங்கள், இதுபோன்ற நிகழ்வுகள் மிக தீவிரமான தாக்கத்தை அந்தக் குழந்தைகளிடம் மட்டுமல்லாமல், வேறு பல குழந்தைகளிடமும் ஏற்படுத்தும் என்கிறார் அவர். “90களில் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடந்தபோது, அதைப் பற்றி ஆராய்ந்த ஒரு குழு, சாதிக் கலவரங்களால் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கிறது என்று கூறியது. குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தினால் குழந்தைத் திருமணம் அதிகரிக்கும். குழந்தைகள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கும். ஆகவே இதுபோன்ற சம்பவங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்,” என்கிறார் தேவநேயன்.
இதற்கிடையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டி, மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் மீது புகார் கூறப்பட்ட நிலையில், இவர்கள் மூவரும் கூடலூர் கலைக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியிருப்பது, ஆசிரியர் மட்டங்களில் புரையோடியிருக்கும் சாதி உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்