இஸ்ரேல் – ஹமாஸ்: இஸ்லாமின் இருபெரும் பிரிவுகளால் மத்திய கிழக்கில் என்ன தாக்கம் ஏற்படுகிறது?

இஸ்ரேல் - ஹமாஸ்: இஸ்லாமின் இருபெரும் பிரிவுகளால் மத்திய கிழக்கில் என்ன தாக்கம் ஏற்படுகிறது?

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்

சுன்னி மற்றும் ஷியாக்கள் – இது முஸ்லிம் உலகின் மிகப்பெரிய பிளவு.

இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மதப் பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இஸ்லாமின் இரண்டு கிளைகளுக்கு இடையேயான வேறுபாடுகளே மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு போட்டியாளர்களான சௌதி அரேபியா மற்றும் இரான் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான உறவுகளுக்கு காரணமாகும்.

இரு நாடுகளும் பிராந்திய ஆதிக்கத்திற்கான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன, மேலும் இந்த பல தசாப்தங்களாக நீடித்த தகராறு மத பிரிவினையினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரான் ஷியா இஸ்லாத்தையும், சௌதி அரேபியா சுன்னி இஸ்லாத்தையும் பின்பற்றுகின்றன.

காஸாவில் நடைபெறும் தற்போதைய மோதலிலும் இந்த வேறுபாடுகள் பிரதிபலித்தன. இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான உறவுகள் சீரமைவதை தவிர்க்கும் முயற்சியாகவே ஹமாஸின் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

என்ன காரணம்?- இரு நாடுகளுக்கும் இடையே அப்படி ஒரு உறவு ஏற்பட்டால், தெஹ்ரானின் முக்கிய மூன்று எதிரிகளான, இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஒரு கூட்டணி உருவாகக் கூடும். சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஊக்குவிக்கிறது.

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

ஷியா – சுன்னி பிரிவினையில், ஹமாஸ் ஒரு சுன்னி பிரிவாகும். பல தசாப்தங்களாக நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கி வரும் இரானின் அணியில் உள்ளது. இந்த போர் தொடங்கியது முதல், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிற மத்திய கிழக்கு குழுக்கள் என்று பார்த்தால் அவை லெபனானின் ஹெஸ்புலா மற்றும் யேமனின் ஹவுதி ஆகிய குழுக்கள் ஆகும். இவை இரண்டுமே ஷியா குழுக்கள் ஆகும். இவை இரானின் அணியில் இருப்பவை.

ஆனால், சௌதி அரேபிய அரசு இஸ்ரேலுடனான ஒப்பந்தத்துக்கு தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது. சௌதி அரச இல்லத்தை சேர்ந்த உறுப்பினர், இளவரசர் துர்கி அல் ஃபைசல், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பையும் குற்றம் சாட்டியுள்ளார்.

முகமது நபிகளின் மறைவுக்குப் பிறகு 632 -ம் ஆண்டில் சுன்னிகள் மற்றும் ஷியாக்களுக்கு இடையேயான பிளவு ஏற்பட்டது. இது முஸ்லிம்களை வழிநடத்தும் உரிமைக்கான போராட்டத்திற்கு வழிவகுத்தது. இது சில வழிகளில் இன்றும் தொடர்கிறது.

இரு பிரிவுகளும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்தாலும், பல நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்தாலும், சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் கொள்கைகள், சடங்குகள், சட்டங்கள், இறையியல் மற்றும் அமைப்பு ஆகியவற்றில் முக்கியமான வேறுபாடுகளைத் தக்கவைத்துள்ளனர்.

அவர்களின் தலைவர்களும் செல்வாக்குக்காக போட்டியிடுவது வழக்கம். சிரியாவிலிருந்து லெபனான் வரை, இராக் மற்றும் பாகிஸ்தான் வழியாக, பல சமீபத்திய மோதல்கள் இந்தப் பிளவை வலியுறுத்தியுள்ளன அல்லது தீவிரப்படுத்தியுள்ளன.

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

சுன்னி முஸ்லிம்கள் யார்?

உலக முஸ்லிம்களிடையே சுன்னிகள் பெரும்பான்மையாக உள்ளனர் – சுமார் 90% பேர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தங்களைக் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் பாரம்பரியமான இஸ்லாமியக் கிளையாகக் கருதுகின்றனர். உண்மையில், சுன்னி என்ற பெயர், “அல்-சுன்னா அஹ்ல்” என்ற பதத்திலிருந்து வருகிறது. அதன் அர்த்தம் பாரம்பரியத்தின் மக்கள்.

இந்த சொல்லில், பாரம்பரியம் என்பது தீர்க்கதரிசி முகமது மற்றும் அவரது சகாக்களின் செயல்களிலிருந்து பெறப்பட்ட நடைமுறைகளைக் குறிக்கிறது. இவ்வாறு, சுன்னிகள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்க்கதரிசிகளையும் மதிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இறுதி தீர்க்கதரிசி எனக் கருதப்படும் முகமது நபியை. அடுத்து வந்த முஸ்லிம் தலைவர்கள் தற்காலிகமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

ஷியாக்கள் யார்?

ஷியாக்கள் ஒரு அரசியல் அணியாகத் தொடங்கினர் – அதாவது “ஷியத் அலி” அல்லது அலியின் கட்சி என்று பொருள். இந்த அலி, முகமது நபிகளின் மருமகன் ஆவார். மேலும் ஷியாக்கள் அவரது உரிமையையும், அவரது சந்ததியினரின் உரிமையையும் கொண்டு முஸ்லிம்களை வழிநடத்த கோருகின்றனர்.

அலியின் கலிஃபாவின் போது உருவான சதி, வன்முறை மற்றும் உள்நாட்டுப் போர்களின் விளைவாக அவர் கொல்லப்பட்டார். அவரது மகன்கள், ஹஸன் மற்றும் ஹுசைன், தங்கள் தந்தைக்கு பிறகு தங்களுக்கு உரிமையான இடத்தை பெற அனுமதி மறுக்கப்பட்டது.

ஹஸன், உமையாத் வம்சத்தின் முதல் கலிஃபா – அதாவது முஸ்லிம்களின் தலைவர் – முஅவிய்யாவினால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் அவரது சகோதரர் ஹுசைன், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருடன் சேர்ந்து போர்க்களத்தில் உயிரிழந்தார்.

இந்த நிகழ்வுகளே ஷியா பிரிவினரின் உயிர்த் தியாகம் மற்றும் அவர்களின் துக்க சடங்குகளுக்குப் பின்னணியாக உள்ளன.

இஸ்லாமியப் பாடங்களை வெளிப்படையாகவும் நிலையான முறையிலும் விளக்கும் மதகுருக்களின் படிநிலையை ஷியாக்கள் கொண்டுள்ளனர்.

தற்போது சுமார் 120 முதல் 170 மில்லியன் ஷியாக்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது அனைத்து முஸ்லிம்களிலும் சுமார் பத்தில் ஒரு பங்காகும்.

அவர்கள் இரான், இராக், பஹ்ரைன், அசர்பைஜான் மற்றும் சில மதிப்பீடுகளின்படி, யேமன் ஆகிய நாடுகளின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.

ஆப்கானிஸ்தான், இந்தியா, குவைத், லெபனான், பாகிஸ்தான், கத்தார், சிரியா, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் குறிப்பிடத்தக்க ஷியா சமூகங்களும் உள்ளன.

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

அரசியல் மோதல்களில் இந்தப் பிளவு என்ன பங்கை வகிக்கிறது?

சுன்னி பிரிவினர் ஆளும் நாடுகளில், ஷியாக்கள் பொதுவாக சமூகத்தில் மிகவும் ஏழைகளாக இருக்கிறார்கள். ஒடுக்குதலுக்கும் பாகுபாடுக்கும் இலக்காகிறார்கள். சில சுன்னி தீவிரவாதிகள் ஷியாக்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புகின்றனர்.

1979-ம் ஆண்டு இரான் புரட்சி, ஷியா அணுகுமுறை கொண்ட ஒரு தீவிரமான இஸ்லாமிய திட்டத்தைத் தொடங்கியது, இது சுன்னி அரசாங்கங்களுக்கு குறிப்பாக பாரசீக வளைகுடாவில் சவால் விடுக்க வந்தது.

வளைகுடா நாடுகள் எப்படி சுன்னி அரசாங்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள சுன்னி இயக்கங்களுக்கும் ஆதரவு அளிக்கிறதோ அதே போல, தனது எல்லைகளுக்கு அப்பால் உள்ள ஷியா கட்சிகள் மற்றும் போராளிகளை ஆதரிப்பது தெஹ்ரானின் கொள்கையாகும். .

உதாரணமாக, லெபனானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, ஷியாக்கள் ஹெஸ்புலாவின் ராணுவ நடவடிக்கைகளால் முக்கியத்துவம் பெற்றனர்.

தலிபான் போன்ற சுன்னி தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில், ஷியா வழிபாட்டுத் தலங்களை அடிக்கடி குறிவைத்து தாக்குகின்றனர்.

ஷியா Vs சுன்னி

பட மூலாதாரம், Getty Images

பொது எதிரி

இராக் மற்றும் சிரியாவில் சமீபத்திய மோதல்கள் இந்த குழுக்களின் பிளவுகளை காட்டுகின்றன.

சிரியா மற்றும் இராக்கில் பல சுன்னி பிரிவு இளைஞர்கள் கிளர்ச்சிக் குழுக்களுடன் சேர்ந்து சண்டையிடுகின்றனர்.

ஷியா குழுவினர் பெரும்பாலும் அரசாங்கப் படைகளுக்குள் அல்லது அவர்களுடன் இணைந்து சண்டையிடுகிறார்கள். இருப்பினும் இரான் மற்றும் சவுதி அரேபியா இரண்டும் ஒரு பொதுவான எதிரியை அடையாளம் கண்டுள்ளன. அது இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். அமைப்பு.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *