பட மூலாதாரம், reuters
நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளைச் சுற்றி பாலத்தீனர்கள் திரண்டதால், குறைந்தது 112 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இந்த விபத்தில் 760 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா நகரில் வியாழக்கிழமை காலை நடந்த இந்தச் சம்பவத்தில், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் வந்து கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மக்கள் லாரிகளைச் சுற்றி திரண்டனர். அப்போது அங்கு இஸ்ரேலிய ராணுவமும் இருந்தது.
இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, நிவாரணப் பொருட்களை சேகரிக்க வந்த மக்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இறந்ததற்கு யார் காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
பிபிசி வெரிஃபை(BBC Verify) இந்த சம்பவம் தொடர்பான முக்கிய உண்மைகளை ஆராய்ந்து, இந்த சம்பவம் எங்கு, எப்படி, எப்போது நடந்தது என்பதை அறிய முயன்றது.
இதற்காக பிபிசி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளை ஆய்வு செய்து, என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை நமக்குத் தெரிந்ததை அறிய முயன்றது.
பட மூலாதாரம், REUTERS/KOSAY AL NEMER
நூற்றுக்கணக்கானோர் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர்
பிப்ரவரி 28 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவின் படி, காஸாவில் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர். அந்த மக்கள் பல்வேறு இடங்களில் தீ மூட்டி அவர்களை சுற்றி ஒரு வட்டம் அமைத்து, மனிதாபிமான உதவி கேட்டு வாகனங்களுக்காக காத்திருந்தனர்.
வடக்கு காஸாவில் உள்ள மக்கள் பட்டினி அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, காஸாவின் இந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீரின்றி சுமார் மூன்று லட்சம் மக்கள் உள்ளனர். சமீப நாட்களாக, இப்பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் குறைவாகவே வந்துள்ளன.
காஸா நகரின் தென்மேற்கே அல்-ரஷித் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருப்பதை அந்த வீடியோவில் காணலாம். அந்தச் சாலை வடக்கே காசா நகரத்திலிருந்து, மத்திய தரைக்கடல் கடற்கரையை ஒட்டி, தெற்கே எகிப்தை நோக்கிச் செல்கிறது.
சமீப காலமாக, காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்தப் பகுதி பயன்படுத்தப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, பிபிசி ஒரு வீடியோவை ஆய்வு செய்தது. அதில் மக்கள் அந்த பகுதியில் நிவாரணப் பொருட்களை சேகரிக்க கூடினர்.
அந்த இடத்தில் இருந்த பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம், “ஏதாவது உணவுப் பொருட்கள் அல்லது ஒரு மூட்டை மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு வந்திருந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர்” என்றார்.
பட மூலாதாரம், INSTAGRAM
நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட வண்டிகள் வந்தன
பிப்ரவரி 29, வியாழன் அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், எகிப்தியப் பகுதியிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள் இஸ்ரேலிய ராணுவம் அமைத்த சோதனைச் சாவடியைக் கடந்தன. விசாரணைக்குப் பிறகு, அந்த வாகனத் தொகுதி அல்-ரஷித் சாலையில் மேலும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது.
இது நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 30 டிரக்குகளின் தொகுதி என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. வாகனத் தொகுதியில் 18 வாகனங்கள் அல்லது சற்று குறைவாக இருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், அதிகாலை 4:45 மணியளவில் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளின் தொகுதி நபுல்சி சந்திப்பை நோக்கி நகர்ந்த போது, மக்கள் வாகனங்களைச் சூழ்ந்து கொண்டனர்.
கூட்டம் லாரிகளை சூழ்ந்து கொண்டது
பட மூலாதாரம், IDF
அகச்சிவப்பு(Infrared) ட்ரோன் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சிகள் முழுமையான வரிசை அல்ல, ஆனால் நான்கு பாகங்கள் திருத்தப்பட்டு அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதில் இரண்டு இடங்களில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. வீடியோவின் முதல் இரண்டு பகுதிகளில், நபுல்சி சந்திப்பின் தெற்குப் பகுதியில் மக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களைச் சுற்றி வளைத்ததைக் காணலாம்.
கான்வாயைச் சுற்றி என்ன நடந்தது?
வீடியோவின் மற்ற இரண்டு பகுதிகளில், படம் ஐநூறு மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கி காட்டப்பட்டுள்ளது.
இதில் நான்கு வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கும் வாகனங்களை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் வாகனங்களைச் சுற்றிச் செல்வதைக் காணலாம். ஆனால் பலர் செயலற்றவர்களாக தரையில் கிடப்பதையும் காணலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டது. இதில், சிவப்பு வட்டத்தில் காணப்படுவது தரையில் படுத்திருப்பவர்கள்.
படத்தில், இஸ்ரேலிய ராணுவ துப்பாக்கிகளும் மக்களுக்கு அருகில் காணப்படுகின்றன.
இந்த சம்பவத்தின் முழுமையான ட்ரோன் காட்சிகளை வழங்குமாறு பிபிசி வெரிஃபை இஸ்ரேலிய இராணுவத்திடம் கோரியுள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள்
பட மூலாதாரம், AL JAZEERA
அல் ஜசீரா தொலைக்காட்சியின் பிரத்யேக வீடியோ காட்சிகளை பிபிசி ஆய்வு செய்துள்ளது. இது மற்றொரு இடத்திற்கு அருகில் படமாக்கப்பட்டது. இந்த இரண்டாவது இடம் நபுல்சி சந்திப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தெற்கே நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட டிரக்குகளுக்குப் பின்னால் உள்ளது.
இந்த வீடியோவில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது மற்றும் மக்கள் வாகனங்களின் மேல் ஏறுவதையோ அல்லது பின்னால் ஒளிந்து கொள்வதையோ காணலாம். சிவப்பு நிற ட்ரேசர்களையும் வானத்தில் காணலாம்.
நிவாரணப் பொருட்கள் வந்த பிறகு, இஸ்ரேலிய வாகனங்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம் தெரிவித்தார்.
“இஸ்ரேலியர்கள் வேண்டுமென்றே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மக்கள் மாவு ஏற்றப்பட்ட வாகனங்களை அடைய விரும்பினர். அவர்கள் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், கொல்லப்பட்டவர்கள் அவர்கள் அருகே வருவதைத் தடுத்தனர்.” என்று அவர் கூறினார்.
அதன் பிறகு என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
இது தவிர, தோட்டாக்கள் வீசப்பட்ட பகுதி தொடர்பான மேலும் சில வீடியோ காட்சிகளையும் பிபிசி ஆய்வு செய்துள்ளது. அதில் இறந்த உடல்களை வாகனங்களில் ஏற்றி நபுல்சி சந்திப்பிலிருந்து வடக்கு நோக்கி எடுத்துச் செல்வதைக் காணலாம்.
இது தவிர, ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடைக்கால மருத்துவமனை மேலாளர் டாக்டர். முகமது சல்ஹா பிபிசியிடம் பேசுகையில், “காயமடைந்த 176 பேர் அல்-அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவற்றில் 142 நோயாளிகளின் உடலில் தோட்டாக் காயங்கள் இருந்தன. இது தவிர, சில சந்தர்ப்பங்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிலரின் கை, கால்கள் உடைந்துள்ளன.” என்று கூறினார்.
இஸ்ரேல் என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், IDF
இஸ்ரேல் ராணுவ செய்தித் தாெடர்பாளர் டேனியல் ஹகாரி
வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 13:06 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், “இன்று காலை, நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகள் வடக்கு காசா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, காஸா மக்கள் லாரிகளை சுற்றி வளைத்தனர். விநியோகிப்பதற்கான பொருட்களை அவர்கள் சூறையாடினர். இந்த நேரத்தில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நெரிசல் காரணமாக, “டஜன்கணக்கான காஸா மக்கள் காயமடைந்தனர்.” என குறிப்பிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, 15.35 மணிக்கு (பிற்பகல் 3:35) இஸ்ரேல் இராணுவம் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ராணுவம் முன்பு கூறிய தகவலை மீண்டும் வலியுறுத்தியது.
இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர் இங்கிலாந்தின் சேனல் 4 செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாகனங்கள் அருகே திரண்டதால், கான்வாய் முன்னோக்கி செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
“பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள், மக்கள் மத்தியில் பீதி இருப்பதைக் கண்டனர். கூட்டத்தை கலைக்க அவர்கள் சில எச்சரிக்கை குண்டுகளை வீசினர்.” என்று கூறினார்.
இதற்குப் பிறகு, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியின் வீடியோ அறிக்கை ராணுவத்தின் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், பிற்பகல் 22.35 மணிக்கு (இரவு 10.35) வெளியிடப்பட்டது. அதில் அவர், “நூற்றுக்கணக்கானவர்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரங்களாக மாறியது மற்றும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது” என்று கூறினார்.
பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், டாங்கி கமாண்டர் பின்வாங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். “இராணுவம் எச்சரிக்கையுடன் பின்வாங்கத் தொடங்கியது; அவர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிறப்பு ஆலோசகர் மார்க் ரெகேவ் சிஎன்என்- க்கு பேட்டி அளித்திருந்தார் .
இஸ்ரேல் எந்த வகையிலும் நேரடியாக ஈடுபடவில்லை என்று அவர் கூறினார்.
மற்ற சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆனால் அவை நிவாரணப் பொருட்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அவர் கூறினார். இருப்பினும், அவர் தனது கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
மார்க் ரெகெவ் கூறுகையில், “டிரக்கை சுற்றி வளைத்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, ஆனால் அவை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களால் சுடப்பட்டன. அது ஹமாஸ் அல்லது வேறு ஏதேனும் குழுவா என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.
என்ன சொல்கிறது ஹமாஸ்?
இஸ்ரேலிய ராணுவத்தின் அந்த அறிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது. பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தாரில் நடைபெற்று வரும் விவாதங்கள் ஆபத்தாக இருக்கக்கூடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக செவ்வாயன்று, காஸா பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பிறகு, காஸாவில் மனிதாபிமான நிலைமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.
(அலெக்ஸ் முர்ரே, குமார் மல்ஹோத்ரா, மர்லின் தாமஸ் மற்றும் பிபிசி அரபு சேவை நிருபர்களின் கூடுதல் அறிக்கையுடன்)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
