
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் ஐயரின் மகள் சுரண்யா அய்யர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சமூக வலைதளம் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் தில்லியில் குடியிருக்கும் பகுதியின் குடியிருப்போர் நலச்சங்கம் அக்கருத்துக்காக மன்னிப்பு கோரும்படிக் கேட்டிருக்கிறது.
மேலும், ‘ராமர் கோவிலுக்கு எதிரான கருத்து நியாயம் என்று கருதினால் , வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து கொள்ளுங்கள்’ என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், சுரண்யா அயர் அதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
என்ன நடந்தது இந்த விஷயத்தில்?
மணிசங்கர் அய்யரின் மகள் சுரண்யா அய்யர் புதுதில்லியின் ஜங்புரா பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 19-ஆம் தேதி, தனது சமூக வலைதளப் பக்கம் ஒன்றில் அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ‘தில்லியில் பரவிவரும் இந்து ஆதிக்கவாதச் சூழலை எதிர்த்து’ மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகப் பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தற்போது மணிசங்கர் அய்யரின் வீடு அமைந்துள்ள தில்லியின் ஜங்புராவில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கம், இந்தப் பதிவிற்காக மணிசங்கர் ஐயர் மற்றும் அவரது மகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் அச்சங்கம் அனுப்பியிருந்த கடிதத்தில், “ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் நியாயமானது என்று நீங்கள் கருதினால், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துகொள்ளுங்கள்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுரண்யா கூறியதை மணிசங்கர் அய்யர் கண்டிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
குடியிருப்போர் சங்கத்திற்கு பா.ஜ.க. ஆதரவு
குடியிருப்போர் நலச்சங்கத்தின் இந்த எதிர்வினைக்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது.
பா.ஜ.க.வின் தேசிய தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, ‘இந்த அறிக்கை இந்துக்களை இழிவுபடுத்தும் அனைவருக்குமானது,’ என்று கூறியுள்ளார்.
சுரண்யா தனது பதிவில் சொன்னது என்ன?
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சுரண்யா ஐயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புதிய பதிவினைப் பகிர்ந்திருக்கிறார். அதில், தான் ஒரு அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும், அரசியல் மிகவும் தீவிரமானது என்பதை தான் அறிந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். “இது சித்தாந்தம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல. உணர்ச்சிகள், உணர்வுகள் ஆகியவை பற்றியதும் கூட. உங்கள் அரசியல் நம்பிக்கையில் நீங்கள் எந்தப் பக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி,” என்று கூறியிருக்கிறார்.
சுரண்யா ஐயர் ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.
இந்த சர்ச்சை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, தி டெலிகிராப் நாளிதழிடம் பேசிய சுரண்யா, “நான் அந்த வீட்டில் வசிக்கவில்லை. நான் அதன் உரிமையாளரோ வாடகைதாரரோ அல்ல. எனக்கு அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை. செய்தியாளர்களிடம் இருந்துதான் இதை அறிந்துகொண்டேன்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பதிவினை சுரண்யா ஜனவரி 19-ஆம் தேதி பகிர்ந்திருந்தார். அது ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
அப்பதிவில் அவர் மேலும், ‘தில்லியில் ஏற்கெனவே காற்று மாசுபட்டிருக்கிறது. இப்போது ஆன்மீக மாசுபாடும் அதிகரித்துள்ளது. மேலும் இந்து மத அதிக்க உணர்வு, வெறுப்பு, மிரட்டல் ஆகியவற்றால் மேலும் மாசுபட்டுள்ளது. ஒரு இந்தியனாகவும், இந்துவாகவும் இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்,” என்றிருந்தார்.
மேலும் அதில், ‘நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அயோத்தியில் நிகழ்ச்சி நடக்கும் நேரம், ஜனவரி 20 முதல் 23 வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.
அப்பதிவில், ‘இந்தியாவின் சக இஸ்லாமிய குடிமக்கள் மீதான எனது அன்பு மற்றும் துக்கத்தின் வெளிப்பாடாக இந்த உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்கிறேன். இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நான் உங்களை நேசிக்கிறேன், இந்துத்துவம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் அயோத்தியில் நடப்பதை நான் கண்டிக்கிறேன், நிராகரிக்கிறேன் என்று உரக்கச் சொல்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
தனது பதிவில் சுரண்யா மணிப்பூரையும் குறிப்பிட்டிருந்தார். ‘பழைய பகைகள் தூண்டப்பட்டதால், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்’ என்று கூறியிருந்தார்.
அவர் தனது பதிவில், ஒரு சில மசூதிகளை அழிப்பதற்காக ஆழமான சமூக அமைதியின்மையை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை, என்று கூறியிருந்தார். ‘இது ஒருபோதும் முடிவடையாது. மசூதியை இடிப்பதாக கர்நாடக ஒரு பா.ஜ.க எம்.பி பேசியதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவில்கள், மசூதிகள் என்று சண்டை போடுவதற்குப் பதிலாக, நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று ஏன் சொல்ல முடியாது?’ என்று கேட்டிருக்கிறார்.
மேலும் சுரண்யா, ‘இந்தக் கோயிலைக் கட்டியதில் பழிவாங்கும் உணர்வு இருந்தால், இந்து மதத்தில் அது எப்படி நியாயமாக இருக்கும்? அயோத்தியில் நடப்பது பொய்க் கொண்டாட்டமாகவும், இந்து மதத்தை அவமதிப்பதாகவும் உள்ளது. அதனால், அதனை எதிர்க்கவும், துக்கத்தின் அடையாளமாகவும் உண்ணாவிரதம் இருக்கிறேன்,’ என்றார்.

பட மூலாதாரம், Getty Images
குடியிருப்போர் நலச்சங்கம் என்ன சொன்னது?
சுரண்யாவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜங்புரா குடியிருப்போர் நலச்சங்கம், மணிசங்கர் ஐயர் மற்றும் அவரது மகளுக்கு அனுப்பிய நோட்டீஸில் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அதில், “நீங்கள் மூன்று நாள் உண்ணாவிரதம், வெறுப்புப் பேச்சு ஆகியது குறித்து பேசியிருக்கிறீர்கள். அதுவும் பிரிவினையின் போது அனைத்தையும் இழந்து, பாகிஸ்தானிலிருந்து பெரும்பாலான மக்கள் வந்து குடியேறிய, அமைதியை விரும்பும் சமூகத்தில். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறப்பட்டிருந்தது.
குடியிருப்பு நலச்சங்கத்தின் தலைவர் கபில் கக்கர் கூறுகையில், “மணிசங்கர் அய்யர் அவர்களே, உங்கள் மகள் சுரண்யாவின் செயலைக் கண்டிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ராமர் கோவிலுக்கு எதிரான போராட்டம் நியாயமானது என்று நீங்கள் நினைத்தால், வேறு ஏதாவது காலனிக்கு குடிபெயருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்க பல ஊடக நிறுவனங்கள் மணிசங்கர் ஐயரை தொடர்பு கொள்ள முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி, 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மணிசங்கர் அய்யரின் சொத்தின் முகவரியாகும்.
பதிவு தபால் மூலம் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ செய்தித்தாளிடம் கக்கர் தெரிவித்தார்.
அவர், “எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இந்த முகவரியில் அய்யர் குடும்பம் வசித்து வருகிறது. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அவர்கள் இதைச் செய்யாவிட்டால், அத்தகைய வெறுப்பை பொறுத்துக் கொள்ளக்கூடிய இடத்திற்குச் செல்லுமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டோம். நாங்கள் அனுப்பியது காலி செய்வதற்கான அறிவிப்பு அல்ல, கோரிக்கை மட்டுமே,” என்று அவர் கூறினார்.
சர்ச்சை கிளம்பிய பிறகு சுரண்யா என்ன சொன்னார்?
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து சுரண்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதில் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“இந்த நேரத்தில் இந்திய ஊடகங்கள் வெறுப்பையும் குழப்பத்தையும் மட்டுமே பரப்பி வருவதால் ஊடகங்களிடம் பேசுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்,” என்று சுரண்யா கூறியிருக்கிறார். “நான் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக எல்லா அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்களுடனும் பழகியிருக்கிறேன், செயல்பட்டிருக்கிறேன். எனது பணி சமூக ஊடகங்களில் இருக்கிறது. நீங்களே பார்க்கலாம்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு மணிசங்கர் அய்யரின் இரண்டாவது மகள் யாமினி அய்யரும் செய்திகளில் பேசப்பட்டார்.
யாமினி கொள்கை ஆராய்ச்சிக்கான சிந்தனை மையத்தின் தலைவர். சமீபத்தில் இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் அதாவது FCRA-வின் கீழ் உரிமம் பெற்ற பின்னரே ஒரு அமைப்பு அல்லது தனிநபர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற முடியும்.
மணிசங்கர் அய்யர் பிரதமர் மோதியை விமர்சித்து வந்திருக்கிறார். மோதி குறித்த அவரது சில கருத்துக்கள் விவாதத்திற்குள்ளாகின.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்