இந்தியா: 2024 பொதுத் தேர்தல் எப்போது? எப்படி நடக்கும்? – முழு விவரம்

இந்தியா: 2024 பொதுத் தேர்தல் எப்போது? எப்படி நடக்கும்? - முழு விவரம்

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்பாக புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மேலும் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் ஜூன் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுக்கவும் முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதன்படி இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று 39 மக்களைவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

ஏப்ரல் 19 நடைபெறும் முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள இடங்களுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், மூன்றாம் கட்டம் மே 7 அன்றும், நான்காம் கட்டம் மே 13, ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 அன்றும், ஆறாம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும்.

பின்னர் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் குறிப்பாக கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

97 கோடி வாக்காளர்கள்

“2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், அதில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” எனக் கூறினார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மேலும் 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர். மேலும் 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால், இந்திய அரசியல் களத்தில் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் விரைவில் தொடங்கிவிடும்.

தொகுதிகளின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.

இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கில் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்டது, வடகிழக்கில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி) ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

என்டிஏ கூட்டணி Vs இந்தியா கூட்டணி

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

இந்தத் தேர்தல், நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இந்தியா பிளாக் கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகத் தான் பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக நரேந்திர மோதியின் தலைமையில் தேர்தலில் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் இந்தியா கூட்டணி அத்தகைய ஒற்றைத் தலைமைக்கு உடன்படவில்லை.

தேசியக் கட்சிகளில், பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஏ சங்கமாவின் தேசிய மக்கள் கட்சி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி, ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் எச்டி தேவகவுடாவின் ஜனதா தளம் ஆகியவை அடங்கும்.

இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் தவிர, இடதுசாரிக் கட்சிகள், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, திமுக, ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உத்தவ் தாக்கரே குழுவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி, ஆம் ஆத்மி கட்சி உட்பட சுமார் இரண்டு டஜன் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்புகளை இதுவரை வெளியிடவில்லை.

17வது மக்களவையின் முக்கிய நிகழ்வுகள்

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுமார் 90 கோடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 2014 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 8 கோடியே 43 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும், சுமார் 69.40 கோடி வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களித்தனர். இதில் 45 சதவீத வாக்குகளை என்டிஏ கூட்டணியும், சுமார் 26 சதவீத வாக்குகளை காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியும் பெற்றது.

இதில் 17வது மக்களவையின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், 78 பெண்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட மக்களவைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் கொண்ட அவை இதுதான்.

இது தவிர, 2019ஆம் ஆண்டில், 267 உறுப்பினர்கள் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் 475 எம்.பி.க்கள் ரூபாய் 1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தனர். 17வது மக்களவையின் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 17வது மக்களவையின்போது, ​​16 சதவீத மசோதாக்கள் மட்டுமே, நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கு மேற்பட்ட மசோதாக்கள், இரண்டு மணிநேர விவாதத்தில் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ​​ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 55 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் செயல்பட்டுள்ளது.

மணிப்பூரில் நடந்த வன்முறை விவகாரம் தொடர்பாகப் பலமுறை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக டிசம்பர் 12, 2023 அன்று பார்வையாளர்களின் கேலரிமாடத்தில் இருந்து இரண்டு பேர் குதித்த சம்பவமும் நடந்தது.

2019இல் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது?

முன்னதாக, 17வது மக்களவை அமைப்பதற்கான வாக்குப்பதிவு இந்தியாவில் ஏப்ரல் 11, 2019 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அந்தத் தேர்தலில், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மூன்று பெரிய மாநிலங்களிலும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

2019 தேர்தல் முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன, இதில் நரேந்திர மோதி தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வெற்றி பெற்றது.

பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை கைப்பற்றியது.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

எத்தனை மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 83வது பிரிவின்படி, மக்களவை தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்படி, அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 552 ஆக இருக்கலாம். தற்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 545. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 இடங்களுக்கு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

இதைத் தவிர்த்து, மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமுதாய மக்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை பரிந்துரைக்கலாம்.

மொத்த தொகுதிகளில் 131 மக்களவைத் தொகுதிகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 131 இடங்களில் 84 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும், 47 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் மட்டுமே இந்தத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட முடியும்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

எந்த கட்சி ஆட்சி அமைக்க முடியும்?

பெரும்பான்மைக்கு எந்த கட்சிக்கும் குறைந்தது 272 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைந்தாலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம். அரசியல் கட்சிகளின் கூட்டணி தேர்தலுக்கு முன்பும், முடிவுகளுக்குப் பிறகும்கூட நடக்கலாம்.

மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும். 2014 பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 2019இல் கூட காங்கிரசால் 55 இடங்களை பெற முடியவில்லை.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

வேட்பாளர்களை அறிவித்த தேசிய கட்சிகள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக, 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை மார்ச் 2ஆம் தேதி வெளியிட்டது.

அதில் பிரதமர் மோதி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவர் மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி பாஜக சார்பில் 72 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மகாராஷ்டிராவின் நாக்பூரிலும், மும்பையின் வடக்கு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கேராளாவின் திருவனந்தபுரத்திலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 43 மக்களவைத் தொகுதிகளுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை மார்ச் 15 வெளியிட்டது காங்கிரஸ். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பட்டியலை வெளியிட்டனர்.

தமிழ்நாட்டில் நிலவரம் என்ன

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

அதிமுக மற்றும் பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *