
பட மூலாதாரம், Special arrangement
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் மாயமான அசோக் ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவறையின் கீழ் உடல் பல பாகங்களாக போலீசாரால் தோண்டி எடுக்கப்பட்டது.
நாட்டு வைத்தியர் இளைஞரை கொடூரமாகக் கொலை செய்ததன் பின்னணி என்ன? ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததே கொலைக்கு காரணமா? இளைஞர் உடலை தோண்டிய போது போலீசுக்கு சிக்கிய மற்றொரு உடல் யாருடையது? நாட்டு வைத்தியர் என்ற போர்வையில் கேசவமூர்த்தி சோழபுரம் இளைஞர்களுக்கு வழங்கிய போதைப் பொருள் என்ன?.

பட மூலாதாரம், Special arrangement
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோழபுரம் பேரூராட்சி. அதன் அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜ்(27) இவர் சென்னையில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் பணியில் இருப்பதால் பாட்டியின் வீட்டில் வசித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக அசோக் ராஜ் ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 13 தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை. இது தொடர்பாக அவரது பாட்டி பத்மினி (65) சோழபுரம் காவல்நிலையத்தில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடும் பணியை துவங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சோழபுரம் பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து வரும் கேசவமூர்த்தி என்பவரது வீட்டிற்கு கடைசியாக அசோக்ராஜ் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
நாட்டு வைத்தியர் கூறியது என்ன?
கேசவமூர்த்தி(49) சென்னையில் உள்ள நாட்டு வைத்தியரிடம் நாட்டு வைத்தியம் பழகிக் கொண்டு பல ஆண்டுக்கு முன்பாகவே தனது சொந்த ஊரான சோழபுரம் பகுதியில் உள்ள வீட்டிலேயே வைத்து மூலிகைச் செடிகள் வளர்த்து நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
போலீசார் விசாரணையில், அசோக்ராஜ் தன்னைக் கடைசியாக சந்தித்து தனக்கு உடலில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருத்தப்பட்டதாகவும் அதற்கு தஞ்சாவூரில் இருக்கும் மருத்துவரை பார்க்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.
அசோக் வீட்டுக்கு வந்த கடிதம் என்ன?
காவல்துறை அதிகாரிகள் அசோக் ராஜ் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய நேரம் அசோக் ராஜ் எழுதியதாக நவம்பர் 16ஆம் தேதி கடிதம் ஒன்று வந்தது.
அதில் அசோக் ராஜ் எழுதியதாக “எனக்கு ஆண்மை குறைபாடு உள்ளது உன்னை கல்யாணம் செய்து வாழ முடியாது”, என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தக் கடிதம் காவல்துறைக்கு நாட்டு வைத்தியர் மீதான சந்தேகத்தை அதிகரித்தது.

பட மூலாதாரம், Police Source
அசோக்ராஜ்
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிறப்பு தனிப்படை போலீசார் இந்த வழக்கை தனது கையில் எடுத்து விசாரணையை வேகப்படுத்தினர்.
இதில், நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி இளைஞரை கொலை செய்து தனது வீட்டின் கழிவறை அருகே புதைத்ததை ஒப்புக் கொண்டார்.
அசோக் ராஜூடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தாகவும், திடீரென தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால் ஓரினச்சேர்க்கையை தொடர முடியாது அவர் என்று கூறியதால் ஆத்திரமடைந்ததாகவும் நாட்டு வைத்தியர் கூறியுள்ளார்.
இதனால், போதை தரும் மூலிகை மருந்தை அதிகம் கொடுத்து மயக்கம் அடைந்த பின் கொலை செய்து உடலை துண்டுத் துண்டாக வெட்டி வீட்டின் கழிவறை பகுதியில் புதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Police Source
கேசவமூர்த்தி, கைதான நாட்டு வைத்தியர்
தோண்டத்தோண்ட உடல் பாகங்கள்
கேசவமூர்த்தி அளித்த தகவலையடுத்து வருவாய்த்துறையினர் முன்னிலையில் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் காவல்துறை அதிகாரிகள் நாட்டு வைத்தியர் வீட்டிற்குச் சென்று வீட்டின் கழிவறை, பின்பகுதி, மூலிகைச் செடிகள் பகுதியில் தோண்டினர்.
அதில், ஒவ்வொரு பகுதியிலிருந்து ஒவ்வொரு உடல் பாகமாக கண்டெடுக்கப்பட்டது.
இதில் கூடுதலாக ஒரு மனித மண்டை ஓடும், தாடையும் சிக்கியது. இது காவல்துறையினரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நாட்டு வைத்தியரிடம் மீண்டும் விசாரணை

பட மூலாதாரம், Police Source
நாட்டு வைத்தியர் வீட்டின் அடியில் சிக்கிய மண்டை ஓடு குறித்து நடத்திய விசாரணையை போலீசார் மேற்கொண்ட போது எனக்கு இரண்டு திருமணங்கள் நடந்தும் குழந்தைகள் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.
மேலும், “நான் ஓரினச் சேர்க்கையாளர். என்னுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த அனாஸ் திருமணம் செய்ய இருப்பதால் ஓரினச்சேர்க்கைத் தொடர முடியாது என்று கூறியதால் கடந்த 2021 ஆம் ஆண்டு அவரைக் கொலை செய்து துண்டுத்துண்டாக உடலின் பாகங்களை வெட்டிப் புதைத்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர், அந்த எலும்புகளை எடுத்துச் சுடுகாட்டில் வீசியதாகவும், தாடை எலும்பு, கைச் செயினை மட்டுமே வீட்டில் புதைத்ததாக போலீசாரிடம் கூறி இருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி சோழபுரம் காவல்நிலையத்தில் முகமது அனாஸ் தாயார் பரக்கத் நிஷா தனது மகனைக் காணவில்லை என புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பட மூலாதாரம், Police Source
முகமது அனாஸ்
மீண்டும் சோதனை நடத்திய போலீசார்
நாட்டு வைத்தியர் வீட்டில் போலீசார் மீண்டும் பல்வேறு பகுதிகளைத் தோண்டி சோதனை நடத்தினர். இதில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. நாட்டு வைத்தியர் வீட்டில் மருத்துவம் பெற்ற நபர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைத் துவங்கி இருக்கின்றனர்.
கட்டர், கறி அரிவாள் பறிமுதல்
கேசவமூர்த்தி கொலை செய்வதற்காக பயன்படுத்திய பொருட்களை போலீசார் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
அதில், ஆடு வெட்டும் 3 கத்திகள், ஒரு கட்டர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் அதிநவீன 20 பிளேடுகள், கத்திரிக்கோல், கிளவுஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டு வைத்தியர் மீது வழக்கு
கேசவ மூர்த்தியின் மீது சோழபுரம் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 201 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Nambirajan
இதயம், மூளை ஆகிய உள்ளுறுப்புகள் விற்பனையா?
இளைஞர்களை தனது வலையில் சிக்க வைப்பதற்காக போதை மற்றும் பாலுணர்வுத் தூண்டும் மருள் ஊமத்தை செடியை பயன்படுத்தி செய்த பொடியைக் கொடுத்து வந்து இருக்கிறார் நாட்டு வைத்தியர்.
தோண்டி எடுக்கப்பட்ட அசோக் ராஜ் உடலின் பாகங்கள் மாயமாகி இருப்பதாக கூறுகிறார் அவரது உறவினர் ராஜா
“அசோக் ராஜ் உடலின் பாகங்கள் இதயம், மூளை போன்றவை மாயமாகி இருக்கின்றன. உள்ளுறுப்புகள் எடுத்த பின் சதைப் பகுதியை மட்டுமே உடற்கூறு செய்து மருத்துவர்கள் வழங்கினர்.
மாயமான உடல் பாகங்கள் எங்கே என்ற கேள்வி உறவினர்கள் மத்தியில் எழுகிறது. எனவே, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உடல் பாகங்களை நாட்டு வைத்தியர் என்ன செய்தார் என தெளிவுபடுத்த வேண்டும் ” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தச் சம்பவம் சோழபுரம் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அங்கே மேலும் பல மனித உடல்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த வீடு முழுவதையும் தோண்டி மக்களின் அச்சத்தை காவல்துறையினர் போக்க வேண்டும்”, என கூறினார்.

பட மூலாதாரம், Special arrangement
விசாரணையில் முழு உண்மை வெளிவரும்
இதுகுறித்து தஞ்சாவூர் எஸ்.பி ஆஷிஷ் ராவத்திடம் பேசிய போது, “நாட்டு வைத்தியர் விவகாரத்தில் மக்களுக்கு எந்தவிதமான அச்சமும் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் காவல்துறை விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், விசாரணையில் பெறப்பட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
தொடர்ந்து நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெளிவரும் தகவல்கள் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்.மக்கள் இடையே இருக்கும் அச்சத்தை காவல்துறையினர் போக்குவார்கள்” என தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்