சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½ ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. வறட்சிக் காலங்களிலும் வற்றாத கிணற்றுப் பாசனம் உண்டு. கிருஷ்ணன் திருமணமானவர், அவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை. கண்ணையனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. ஒருவர் மும்பையில் இருக்கிறார். மற்றொருவர் சேலம் அருகே இரைச்சிபாளையத்தில் வசித்து வருகிறார். மற்ற இரண்டு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது.
தற்போது கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை வைத்து விவசாயம் செய்துவருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்குப் பக்கத்து காட்டுக்காரரான பா.ஜ.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்ற நபர், அவர்களுடைய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க எண்ணி பொய்யான ஆவணங்களைத் தயாரித்து மிரட்டி வருகிறார் என்று புகார் எழுந்தது. அதன்மூலம் அவருடைய பதவியை வைத்தும், அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சம்பந்தப்பட்ட விவசாயிகள்மீது அமலாக்கத்துறையில் புகார் அளித்திருப்பதாகக் குற்றசாட்டு எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக விவசாயி கிருஷ்ணன் நம்மிடம் பேசியபோது, “நானும் என் அண்ணன் கண்ணையனும் சேர்ந்து, எங்கள் நிலத்தில், 5 ஏக்கரை அடமானமாக வைத்து, 1991-ம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் பெற்றது போன்ற போலி ஆவணத்தைத் தயாரித்து, ஆத்தூர் சப்-கோர்ட்டில் வழக்கு பதிவுசெய்திருக்கிறார் பா.ஜ.க-வைச் சேர்ந்த குணசேகரன். அதன்மூலம் ஒருபக்கம் இந்த வழக்கு 2020-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்காலமாக சென்றுகொண்டிருக்கிறது. அதுவரையிலும் நாங்கள் பயிரிட்டிருந்த பயிர்களை அறுவடை செய்யக் கூடாது. விவசாயம் செய்யக் கூடாது என்று தடுத்து வந்தார்.
பின்னர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அமலாக்கத்துறையில் எங்கள்மீது கள்ளநோட்டு பரிமாற்றம் செய்து வருகிறோம் என்கிற தவறான புகார்களை அளித்திருக்கிறார். அதன்மூலம் 2022 ஜூலை மாதம் அமலாக்கத்துறையின் மூலம் எங்களுக்குக் கடிதம் வந்தது. அதில், எங்களுடைய சமூகத்தைக் குறிப்பிட்டு, நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தனர். இது குறித்து வழக்கறிஞர்கள் மூலம் நாங்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதமே நேரில் ஆஜராகினோம்.

அப்போது `உங்களை தனியாக அழைத்து விசாரிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் வேண்டாம்’ என்று கூறினர். அதற்கு நாங்கள் சம்மதிக்காததால், `நீங்கள் மீண்டும் ஆஜராகுங்கள்’ எனக் கூறினார்கள். இதனால் அங்கேயே எங்களது வழக்கறிஞர்களுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதனுடன் நாங்கள் வந்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்டச் செயலாளர் குணசேகரன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள்மீதும் புகார் அளித்தோம். அதன் பின்னர் தமிழகக் காவல்துறையினர், நாங்கள் கொடுத்த புகாரிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளின் பெயர்களை நீக்கிவிட்டு, புகாரளிக்க வற்புறுத்தினர். அதையடுத்து நாங்கள் ஊடகங்களில் தெரியப்படுத்தவே, பல்வேறு விதத்தில் பா.ஜ.க நிர்வாகி தொந்தரவு அளித்துவருகிறார். அதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட பா.ஜ.க நிர்வாகிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.
மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து பா.ஜ.க நிர்வாகி குணசேகரனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “என்மீது சுமத்தப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மைக்குப் புறம்பானவை. என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக மேற்கண்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் இதை அரசியலாக்குகின்றனர். அமலாக்கத்துறைக்கு நான் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும்” என்றார்.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவசாயிகளின் வழக்கறிஞர் பிரவீனாவிடம் பேசியபோது, “ஒரு சாதரண விவசாயிகளை இப்படிக் கட்டம் கட்டி தொந்தரவு செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை முடக்கும்விதமாக அமலாக்கத்துறை செயல்பட்டிருக்கிறது. இதனைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழகக் காவல்துறை, ஆதாரம் இருந்தும் அமலாக்கதுறை அதிகாரிகளின் பெயர் இல்லாமல் புகார் அளிக்கக் கூறுகிறது. யார்தான் இந்த விவசாயிகளுக்கு நீதி வழங்குவார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகளைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது தமிழக காவல்துறைக்கு?” என்றார்.
இந்த நிலையில் சென்னை சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையரகத்தின் துணை ஆணையராக இருந்து வருகிற பாலமுருகன் ஐ.ஆர்.எஸ்., “தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறையை பா.ஜ.க-வின் அமலாக்கத்துறையாக மாற்றி, ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயலும் பா.ஜ.க சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரனுக்குச் சாதகமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று இந்திய ஜனாதிபதிக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து பாலமுருகன் ஐ.ஆர்.எஸ் நம்மிடம் பேசியபோது, “எங்கள் துறைக்குக்கீழ்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருவார்கள். சேலம் விவசாயிகள் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த பிறகு இந்த துறையே நாசமாகிவிட்டது. எனவே இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். மேலும், சேலம் விவசாயிகள் தரப்பில் வழக்கு நடத்தி வரும் வழக்கறிஞர் பிரவீனா என்னுடைய மனைவி. இந்த விவகாரத்தில் அப்பாவி விவசாயிகளுக்கு நடக்கக்கூடிய அநியாயத்தைக் கண்டிப்பாகத் தட்டிக்கேட்போம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
