செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர, கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படவிருக்கிறது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து, இந்தியாவை பாரதம் எனப் பெயர் மாற்றுதல் போன்றவை விவாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, இந்த சிறப்பு கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “பிற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் அஜெண்டா (Agenda) பற்றி எங்களில் யாருக்கும் தெரியாது. எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதெல்லாம், ஐந்து நாள்களும் அரசாங்க அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும்தான். இருப்பினும், இந்த சிறப்பு அமர்வில் நாங்களும் கலந்துகொள்ள விரும்புகிறோம்.
ஏனெனில், இது பொது அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்கும். மேலும், விவாதத்துக்கு உரிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறி, ஒன்பது பிரச்னைகளை சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
சோனியா காந்தி குறிப்பிட்ட பிரச்னைகள்:
1. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஏற்றத்தாழ்வுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துயரம் ஆகியவற்றில் தற்போதைய பொருளாதார நிலைமை.
2. விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அவர்கள் எழுப்பிய பிற கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு உறுதியளித்தல்.
3. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கோரிக்கை.

4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் இன்னல்கள், மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு இயந்திரத்தின் முறிவு.
5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு.
6. இந்தியப் பகுதியில் சீனாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நம் எல்லைகளில் நமது இறையாண்மைக்கு எதிரான சவால்கள்.

7. சாதிவாரி கணக்கெடுப்பின் அவசரத் தேவை.
8. மத்திய-மாநில அரசு உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.
9. சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம்.
கடிதத்தில் இறுதியில், “இந்த பிரச்னைகள் வரவிருக்கும் சிறப்பு அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன்” என்று சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
