சமூக வலைதளமான ட்விட்டர் எக்ஸில், மோடியை காங்கிரஸும், ராகுல் காந்தியை பா.ஜ.க-வும் ஒருவரையொருவர் கடுமையாகத் விமர்சித்து, தாக்கிக்கொள்ளும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. நேற்று முன்தினம், காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் மோடியை, `மிகப்பெரிய பொய்யர், ஜும்லா பாய்’ என்று விமர்சித்து புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தது.

காங்கிரஸின் இத்தகைய செயல் பா.ஜ.க-வினரை எரிச்சலடையச் செய்யவே, அவர்களும் தங்கள் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ராகுல் காந்தியை, `புது யுக இராவணன் வந்துவிட்டார். இவர் தீயவர், தர்மத்துக்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். பாரதத்தை அழிப்பதே இவரின் நோக்கம்’ என்று விமர்சித்து ராவணன்போல பத்து தலைகளை வைத்து, ராகுல் காந்தி புகைப்படத்தை நேற்று பதிவிட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தியை ராவணன்போல சித்திரித்ததற்கு, காங்கிரஸைச் சேர்ந்த பலரும் பா.ஜ.க-வையும், மோடியையும் சாடிவருகின்றனர்.
அந்த வரிசையில், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க தனது அதிகாரபூர்வ பக்கத்தில், ராகுல் காந்தியை ராவணனாகச் சித்திரிக்கும் ஒரு கொடூரமான கிராஃபிக் காட்சியின் உண்மையான நோக்கம் என்ன… ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதே இதன் நோக்கம். அவரின் பாட்டியும், தந்தையும் இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் சக்திகளால் படுகொலைசெய்யப்பட்டனர். பிரதமர் மோடி, தனது கட்சியினரை இவ்வாறு அருவருப்பான ஒன்றை செய்ய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, முற்றிலும் ஆபத்தானதும்கூட. அதேசமயம், நாங்கள் அச்சப்பட மாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார்.

அதோடு, பிரியங்கா காந்தியும் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “மோடி, நட்டா அவர்களே, அரசியலையும் விவாதத்தையும் எந்த அளவுக்கு சீரழிக்க கொண்டு செல்ல விரும்புகிறீர்கள்… உங்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்படும் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டும் ட்வீட்களை ஏற்கிறீர்களா… நீங்கள் அளித்த வாக்குறுதிகளைப்போலவே, ஏற்றுக்கொண்ட உறுதிமொழியையும் மறந்துவிட்டீர்களா?” என்று கேள்வியெழுப்பினார்.

இவ்வாறிருக்க, மீண்டும் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், `மோடியின் அசைவுகள் அதானியின் கைகளில்’ என்று உணர்த்தும்விதமாக மோடியின் புகைப்படம் ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
