
பட மூலாதாரம், GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களின் மொபைல் எண், சாதி உள்ளிட்ட விவரங்கள் நடத்துநர் மூலம் சேகரிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பெண்களின் தனியுரிமையில் தலையிடுவதாகவும் சாதி ரீதியான பாகுபாடுகளை ஏற்படுத்தும் எனவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், மக்கள் நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற விவரங்கள் அவசியம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற அன்றே, தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார். உடனேயே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஏழை, எளிய பெண்களிடையே இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து 2022ஆம் ஆண்டு மாநில திட்டக்குழு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கை கடந்தாண்டு நவம்பர் மாதம் முதலமைச்சரிடம் ஒப்படக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் சராசரியாக ரூ.888 மிச்சம் ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2022, அக்டோபர் 5-ஆம் தேதி வரை 176.84 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், தினசரி போக்குவரத்து செலவுக்கு குடும்ப உறுப்பினர்களை பெண்கள் நம்பியிருப்பது குறைந்துள்ளதாகவும் இதனால் மிச்சப்படுத்தும் தொகையை வீட்டுச் செலவுக்கு அவர்கள் பயன்படுத்துவதாகவும் தெரியவந்தது.
அரசுப் பேருந்துகளில் பெண்களிடம் சாதி, மொபைல் எண் கேட்பது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்நிலையில்தான் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களின் சாதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை நடத்துநர்கள் மூலமாக போக்குவரத்துத் துறை சேகரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்கள் சிலரிடம் அவர்களின் பெயர், தொலைபேசி, சாதி, வயது உள்ளிட்ட 15 விவரங்களை நடத்துநர்கள் கேட்டு, அதனை தமிழ்நாடு போக்குவரத்துறை வழங்கியுள்ள படிவங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ. 26) வெளியிட்ட அறிக்கையில், பெண்களிடம் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்பது அவர்களின் “தனியுரிமையில் தலையிடுவது” போன்றது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் தங்களின் மொபைல் எண்களை கூறும்போது அதை நடத்துநர்களோ அல்லது அருகில் உள்ளவர்களோ குறிப்பெடுத்து, அப்பெண்களுக்கு தேவையற்ற புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப வாய்ப்புள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் இதுபோன்று சாதியை கேட்பது உலகில் வேறு எங்கும் நிகழாத ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், உடனடியாக இந்த கணக்கெடுப்பை நிறுத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
“திட்டத்தை செழுமைப்படுத்துவதற்காக தான்”

பட மூலாதாரம், SIVASANKAR FB
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”சமூக நீதியின் அடிப்படை தெரியாமல்” எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தும்போது எந்தளவுக்கு மக்களுக்கு பயனளிக்கிறது என்பதையும் அதை இன்னும் செழுமைப்படுத்த முயல்வது அரசின் கடமை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதற்காகவே இத்திட்டம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு, சாதி ரீதியான மக்கள் கணக்கெடுப்பு இரண்டுமே சமூக, அரசியல் ரீதியாக பல்வேறு சாதியினர் தங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதுதான் என்பது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் தரப்பாக உள்ளது.
இதுவரை 380 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
“தேவையற்ற செயல்”
ஆனால், பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் பெயர், மொபைல் எண், சாதி உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பது தேவையற்றது என்கிறார், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பத்மாவதி.
“நான் தினமும் கட்டணமில்லா பேருந்தில்தான் பயணிக்கிறேன். என்னிடமோ அல்லது எங்கள் பகுதியிலோ இதுவரை அப்படிப்பட்ட விவரங்களை கேட்கவில்லை. ஆனால், ஒருவேளை என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அளிக்கப் போவதில்லை. பெண் பயணிகளிடம் சாதியை கேட்க வேண்டியதன் அவசியம் என்ன? எல்லா சமூக பெண்களும் கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கலாம் எனும்போது இது தேவையற்றது.
பேருந்துகளில் சாதி போன்ற விவரங்களை அளிப்பதற்கு தயக்கங்கள் இருக்கும். கிராமப்புறங்களில் அருகே அமர்ந்திருப்பவர்கள் மற்றவர்களின் சாதியை அறிந்துகொண்டு பாகுபாடு காட்டலாம் என்பதால் இது தேவையற்றது.
’உயர் சாதி’ என கூறப்படும் சாதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் கணவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர் எனும்போது இந்த திட்டம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் முக்கியமானது. அந்த வகையில் இதுபோன்ற விவரங்களை கேட்பது அவசியமற்றது” என்றார்.

பட மூலாதாரம், FACEBOOK
“தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்”
பேருந்தில் பயணிக்கும் அனைத்து பெண்களிடமும் இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை எனவும் திட்டம் குறித்த செயல்பாடு பற்றி அறிந்துகொள்ள சிலரிடம் மட்டுமே கேட்கப்படுவதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இது தமிழ்நாடு முழுவதும் இத்தகைய ஆய்வு நடத்தப்படுமா என்பதில் தெளிவு இல்லை. மேலும், இதுபோன்ற விவரங்களை கூறுமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், தாமாக முன்வருபவர்களிடமே கேட்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சாதி தவிர்த்து மொபைல் எண் போன்ற விவரங்கள் கேட்பது, அதனை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார் பத்மாவதி.
”மொபைல் எண்களை பகிரும்போது அதை யார் வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.
எனினும், ”சாதி ரீதியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்தான், அந்த புள்ளிவிவரம் அரசுக்குத் தேவை. அதனால் நிச்சயம் எடுக்க வேண்டும். ஆனால், பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சாதியை கேட்பது தேவையற்றது” என்றும் அவர் கூறினார்.
“பேருந்துகளை அதிகப்படுத்துவதே முக்கியம்”
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, இதுபோன்ற விவரங்களை பெண் பயணிகளிடம் கேட்பது தவறானது என்றார். மேலும், இதை வைத்து திமுக என்ன திட்டம் வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். “அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவசம் என்றாகிவிட்டது. இம்மாதிரியான தகவல்களை வைத்து திட்டத்தை எப்படி மேம்படுத்துவார்கள் என தெரியவில்லை. திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமே தவிர இதுபோன்ற தகவல்களை சேகரிக்கக் கூடாது” என்றார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியும் இதே கருத்தை பிரதிபலித்தார்.
அவர் கூறுகையில், ”பயனாளிகளின் சாதியை கேட்பது மிகமிக தவறானது. சாதியை ஒழித்துவிட்டோம், சமூக நீதிக்காகவே இருக்கிறோம் என கூறும் திமுக அரசு இப்படி சாதி ரீதியான தகவல்களை கேட்பது வாக்கு வங்கிக்கான அரசியல். திமுக அரசின் மோசமான நிர்வாகத்திற்கான உதாரணமாகத்தான் இது இருக்கிறது” என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் நோக்கம் என்ன?
இந்த சர்ச்சை தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், ”சாதிகளின் பெயரை சொல்லி மக்களை அடுக்கு முறையில் அமுக்கி வைக்கப்பட்டவர்களை அந்த சாதியின் பெயராலேயே கைதூக்கி விடுவதுதான் சமூக நீதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே இத்தகைய கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்காகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றும் எந்த சாதியை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர் என்பதும் இதுபோன்ற ஆய்வுகளால் தெரியவரும் என்றும் தமிழ்நாடு அரசின் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிபிசி தமிழுக்கு தகவல் அளித்த போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, “பெண் பயணிகளிடம் சாதி குறித்த விவரங்களை கேட்பதற்கு எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லை. சாதி குறித்த விவரங்கள் கேட்கப்படுவது இனி நீக்கப்படும்” என தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்