
பட மூலாதாரம், Getty Images
2008-ஆம் ஆண்டு தேவிகா ரோதாவானுக்கு ஒன்பது வயது. அவ்வாண்டு நவம்பர் மாதம் அவர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பினார்.
காலில் சுடப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தில் உயிருடன் இருந்த ஒரேயொரு துப்பாக்கி ஏந்திய நபரை ‘அடையாளம் காட்டினார். அது நடந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ், ரோதாவானுடன் பேசினார். ஒரு படுகொலையிலிருந்து உயிர் பிழைத்த ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அவர் பேசினார்.
இப்போது அவர் என்ன செய்கிறார்? அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், SANKHADEEP BANERJEE
மும்பை தாக்குதல்
2010-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு சேரியில் தேவிகா ரோதாவானை நான் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது, மும்பையை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து பலவீனமான அந்தச் சிறுமி தப்பிப் பிழைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன.
60 மணி நேரம் நடந்த அந்தத் தாக்குதல், 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி துவங்கியது. ஒரு முக்கிய ரயில் நிலையம், சொகுசு ஹோட்டல்கள் மற்றும் ஒரு யூத கலாசார மையம் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஒன்பது துப்பாக்கி ஏந்திய நபர்கள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலுக்குப்பின் அவ்விடத்தை ஒரு பணியாளர் சுத்தம் செய்கிறார்
அத்த இரவின் கொடுங்கனவு
தேவிகா, தனது 10-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் காலில் சுடப்பட்டார். அவரைச் சுட்டது, அஜ்மல் கசாப். மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரே துப்பாக்கிதாரி கசாப் தான். ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 50 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தின் விசாரணையில் சாட்சியம் அளித்தவர்களிலேயே மிக இளையவர் தேவிகா தான். கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு நீதிமன்ற அறையில் கசாபை அவர் அடையாளம் காட்டினார்.
அன்று, தேவிகா உறுதிமொழி எடுத்துக்கொண்டு கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார். ஊடகங்கள் அவரை ‘அஜ்மல் கசாபை அடையாளம் காட்டிய சிறுமி’ என்று வர்ணித்தன.
2010-ஆம் ஆண்டு மே மாதம், கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின், புனே நகரில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
தேவிகாவின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் 26/11 தாக்குதல் சம்பவம்தான் நிர்ணயிக்கிறது
‘நான் வளர்ந்து போலீஸ் ஆவேன்’
2010-இல் நான் தேவிகாவைச் சந்தித்தபோது, அவர் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண்ணாக இருந்தார். ஒரு காலை ஊன்றியபடி நடந்தார். அதிகமாகப் புன்னகைத்தார். குறைவாகப் பேசினார்.
அவரது அண்ணன் ஜெயேஷ் எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் தங்கியிருந்த பாழடைந்த ஒற்றை-அறை வீட்டில், ஒரு மூலையில் இருந்தார்.
உலர்பழ வியாபாரியாக இருந்த அவரது தந்தை நட்வர்லால், வேலை இல்லாமல், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்களிடமிருந்த உடைமைகள் சில பிளாஸ்டிக் நாற்காலிகள், ஒரு டிரங்குப் பெட்டி, சில பாத்திரங்கள் மட்டுமே.
“நான் பெரியவளான பிறகு போலீஸ் அதிகாரியாக ஆவேன்,” என்று தேவிகா என்னிடம் அப்போது கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Reuters
2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் கசாப்பை தேவிகா அடையாளம் காட்டினார்
‘கசாபை நோக்கி விரலை நீட்டினேன்’
இந்த வாரத் தொடக்கத்தில், நான் தேவிகாவை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். முதல் சந்திப்பு நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் தேவிகாவுக்கு 25 வயது ஆகப்போகிறது. இப்போது அவர் தைரியமான நம்பிக்கை மிகுந்த பெண்ணாகியிருக்கிறார். அவரது குடும்பம் ஒரு சிறிய அபார்ட்மென்ட் வீட்டில் வசிக்கிறார்கள். இப்போது தேவிகா அதிகம் பேசுகிறார், அவரது தந்தை அதைக் கேட்கிறார்.
இத்தனை ஆண்டுகளாக, அவர் தனது கதையை பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் பொதுக்கூட்டங்களில் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் ஒருமுறை அதைச் சொன்னார்.
அன்று புனேவுக்குச் செல்லும் இரவு ரயிலைப் பிடிக்கக் காத்திருந்தார். அப்போது துப்பாக்கிச் சுடப்பட்டும் சத்தம் கேட்டது. அவரைச் சுற்றி மக்கள் செத்து விழுவதைப் பார்த்தார். ‘பயமற்ற தோற்றம் கொண்ட’ ஒரு இளைஞன் ஒரு பெரிய துப்பாக்கியை ஏந்தி, எல்லா திசைகளிலும் சுட்டுக்கொண்டிருந்தான். அதைக்கண்டு ஓட ஆரம்பித்த அவரது வலது காலில் ஒரு குண்டு துளைத்தது. அவர் மயங்கி விழுந்தார். ஆறு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 65 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார்.
தனது 11 வயதில் அவர் முதல் முறையாக பள்ளிக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார். ஆரம்பத்தில் பள்ளி நிர்வாகம் அவரைச் சேர்த்துக் கொள்ளத் தயங்கியது. அவரது இருப்பு சக மாணவர்களுக்கு ‘ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்’ என்று பயந்தது.
2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் கசாபை தேவிகா அடையாளம் காட்டினார். “நான் அவரை நோக்கி என் விரலை நீட்டினேன். அவர் என்னைப் பார்த்தார். பிறகு கீழே குனிந்து கொண்டார்,” என்கிறார் தேவிகா.
இன்று, அவருடைய கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் 26/11 தாக்குதல் சம்பவம்தான் நிர்ணயிக்கிறது.

பட மூலாதாரம், AFP
ஆறு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 65 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார்
துயரத்தால் கிடைத்த பிரபலம்
26/11 தாக்குதலில் இருந்து மும்பை நகர்ந்துவிட்டது. ஆனால் அந்தத் தாக்குதலின் கொடிய நினைவுகள் தேவிகாவின் வாழ்க்கையில் இன்னும் நிழலாடுகின்றன.
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளங்களில், அவர் தனது பெயரை ‘தேவிகா ரோட்டவன்26/11’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில், அவர் தன்னை ‘மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட மிக இளைய நபர்’ என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார்.
அவரது சமூக வலைதளப் பக்கங்களில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கடற்கரையில் அவர் ஆடிய நடனங்களின் கலகலப்பான ரீல்கள் ஆகியவை உள்ளன. அவற்றுக்கு மத்தியில், சில சோகமான காட்சிகளும் உள்ளன. தேவிகா கூட்டங்களில் பேசுகிறார், தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார், அவரது தைரியத்திறகாகப் பாராட்டுகள் மட்டுமின்றி, நிதியுதவியும் பெறுகிறார்.
அவரது வீட்டின் சுவர்கள் 26/11 நினைவுகளின் பதிவு. அதில் அவருடைய தைரியத்தைப் பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கடந்த ஆண்டு மும்பைக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்த படங்கள் உள்ளன. வீட்டின் முன்னறையில் கோப்பைகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பெரிய டெடி பியர் பொம்மை, பிளாஸ்டிக்கில் சுற்றபட்டு படுக்கையறையில் ஒரு அலமாரியின்மீது வைக்கப்பட்டுள்ளது. அது அவரது ரசிகர் மன்றத்தால் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கவுன் பனேகா கரோர்பதி’ மற்றும் ‘இந்தியன் ஐடல்’ ஆகிய நிகழ்ச்சிகளில் தேவிகா விருந்தினராகத் தோன்றியுள்ளார்.
அதற்கும் மேலாக, ஊடகங்கள். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகும் போதெல்லாம், ஊடகங்கள் தேவிகாவின் கருத்தைக் கேட்க வருவதாக அவர் கூறுகிறார்.
“சில சமயம், அவர்கள் என் கருத்தைக் கேட்டு வீட்டினுள்ளே நுழைந்துவிடுகிறார்கள். இது மிகவும் விசித்திரமாக இருக்கும்,” என்கிறார் தேவிகா.
ஆனால் இதையெல்லாம் தேவிகா மிகப் பொறுமையாகக் கையாள்கிறார். இதை அவர் ரசிப்பது போலவும் தோன்றுகிறது. “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும், இறுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்,” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், SANKHADEEP BANERJEE
ஆறு மாதங்களுக்கு முன்பு தேவிகாவின் குடும்பம் ஒரு சிறிய அபார்ட்மென்ட் வீட்டை வாடகைக்கு எடுத்தது
மாறி வரும் மும்பையில் வாழ்வுக்கான போராட்டம்
ஆனாலும், அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சி எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
பல லட்சம் மும்பைவாசிகளைப்போல, அவர்களும் வேகமாக மாறிவரும் ஒரு பெருநகரத்தில் வாழ்வதற்கான சவால்களை தினமும் எதிர்கொள்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் ‘சால்களில்’ வசித்தனர். இவை ஒரு அறை மற்றும் பொதுக் கழிப்பறைகள் கொண்ட மலிவான குடியிருப்புகள். அந்தப் பகுதி மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்காக பெரும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்ட இந்தச் சால்கள் இடிக்கப்பட்டன.
2 கோடி பேர் வசிக்கும், இடப்பற்றாக்குறையால் திணறும் மும்பை நகரத்தில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அத்தியாவசியமாகின்றன.
ஆறு மாதங்களுக்கு முன்பு தேவிகாவின் குடும்பம் ஒரு சிறிய அபார்ட்மென்ட் வீட்டை வாடகைக்கு எடுத்தது. குடிசைமாற்று வாரியக் கட்டிடமொன்றின் ஏழாவது மாடியில் 270 சதுர அடியில், ஒரு படுக்கையறை உள்ள ஒரு வீடு. மாத வாடகையான 19,000 ரூபாய் அவர்கள் குடும்பத்தின் நிதிச்சுமையை மேலும் கூட்டுகிறது, என்கிறார் தேவிகா.
அவர் பிரபலமாக இருந்தபோதும், அவரது குடும்பத்தின் நிலைமை முற்றிலும் மாறிவிடவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவே, தேவிகாவின் பிரபல்யம்தான் அவரது குடும்பத்திற்கு உதவுகிறது.
60 வயதாகும் தேவிகாவின் தந்தை நட்வர்லாலின் உலர் பழ வியாபாரம் 26/11-க்குப் பிறகு சரிவர நடக்காததால் மூடப்பட்டது. இப்போது அவர் வருமானமின்றியிருக்கிறார். தேவிகாவின் அண்ணன் ஜெயேஷுக்கு 28 வயதாகிறது, இப்போது அவரது உடநிலை தேறி, வேலை செய்ய ஏதுவாக உள்ளது. அவருக்குச் சமீபத்தில் ஒரு அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்புதான் வேலைசெய்யத் தொடங்கினார்.
தேவிகா, எட்டு ஆண்டுகளில், இரண்டு தவணைகளில் வெறும் 13 லட்ச ரூபாய் அரசாங்க இழப்பீடு பெற்றார். அவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் காசநோயால் பாதிக்கப்பட்டார், அது அவரது மேற்படிப்பை பாதித்தது.
அரசாங்கம் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த வீட்டைப் பெறுவதற்காக ஒரு சட்டப் போராட்டத்தை நடத்திவருகிறார். மும்பை தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவிவரும் ஒரு தனியார் அறக்கட்டளை, அவரது கல்லூரிச் செலவை ஏற்றுக்கொள்கிறது.

பட மூலாதாரம், ANI
ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ தேவிகா பங்கேற்றார்
கனவுகள் அழிவதில்லை
இந்த ஆண்டு ஜனவரி மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் ஐந்து மாத காலம் 4,000 கி.மீ நடந்து மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்குமாறு தேவிகாவை அழைத்திருந்தார். அவர் தனது தந்தையின் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் செய்தார் என்று கூறுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு அவருக்கு அங்கு ஒரு வீட்டுமனையைப் பரிசாக அளித்துள்ளது.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில், தேவிகா அரசியல் அறிவியல் மற்றும் கலை பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெறவிருக்கிறார். அதன்பின் காவல்துறைத் தேர்வு எழுத விரும்புகிறார்.
“கடந்த சில மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை. மும்பையில் வாழ்வதற்கான செலவு கூடிக்கொண்டே போகிறது,” என்று அவர் கூறுகிறார்.
மும்பை தாக்குதல் நடந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவிகாவின் குடும்பம் அவர்களது நண்பர்கள், நலம்விரும்பிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் சிறிய உதவிகளால் குடும்பச் செலவுகளைச் சமாளித்துவருகிறார்கள். “தேவிகாவைப் பேச அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ரயிலிலும் விமானத்திலும் பயணம் செய்கிறோம். அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பணம் கொடுப்பார்கள்,” என்கிறார் நட்வர்லால்.
“இதுபோன்ற நூற்றுக்கணக்கான நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறோம். அப்படித்தான் செலவுகளைச் சமாளிக்கிறோம்,” என்கிறார் அவர்.
ஆனால், இந்த ‘நிகழ்ச்சிகளை’ நம்பி எவ்வளவு காலம் பயணிக்க முடியும்? ‘கசாபை அடையாளம் காட்டிய பெண்’ என்ற அடையாளம் தேவிகாவுக்கு அசௌகரியமாக இல்லையா?
“இந்த அடையாளம் என் மீது திணிக்கப்பட்டது. நான் அதை விட்டு ஓடவில்லை. அதைத் தழுவிக்கொண்டேன்,” என்கிறார் தேவிகா.
“நான் விரும்பும் ஒரே அடையாளம் ஒரு போலீஸ் அதிகாரி ஆவதுதான். அவ்வாறு ஆன பிறகு இந்தியாவை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பது,” என்கிறார் அவர்.
சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார்.
கனவுகள் அவ்வளவு எளிதில் மடிவதில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்