பட மூலாதாரம், Getty Images
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை (IMEC) உருவாக்குவதற்கான லட்சிய திட்டம், சுமார் ஒரு மாதத்திற்கு முன் G20 மாநாடு நடந்து கொண்டிருக்கும் போது அறிவிக்கப்பட்டது. தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையால் இந்த திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
உலக வர்த்தகத்துக்கான அடிப்படையாக பல நூறு ஆண்டுகளுக்கு IMEC வழித்தடம் இருக்கப் போகிறது என்றும் அதன் தொடக்கம் இந்திய மண்ணில் இருந்தது என்பதை வரலாறு சொல்லும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
அமெரிக்காவின் முயற்சிகள் காரணமாக இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளன என நம்பப்படுகிறது. உறவுகள் மேம்பட்டதாலேயே இத்திட்டத்தில் இரு நாடுகளும் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
ஆனால் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலுக்கு பிறகு, இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையிலான உறவும் ஒட்டுமொத்த அரபு உலகின் உறவுகளும் இனி நிறுத்தப்படலாம். ஏனென்றால், அரபு நாடுகளில் பெருவாரியான ஆதரவு காஸாவுக்கு உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது என்ன?
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்பது ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே கடல், ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்தும் நோக்குடன் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சரக்கு பரிவர்த்தனைக்கான புதிய வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்திட்டம் முன்மொழியும் வழித்தடம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல் மற்றும் கிரீஸ் வழியாக செல்லும். IMEC இல் இரண்டு வெவ்வேறு வழித்தடங்கள் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு வழித்தடம் இந்தியாவை அரேபிய வளைகுடாவுடன் இணைக்கும். வடக்கு வழித்தடம் அரேபிய வளைகுடாவை ஐரோப்பாவுடன் இணைக்கும்.
இந்த வழித்தடத்தில் ஒரு ரயில் பாதை அமைக்கப்படும், அதன் பிறகு தற்போதுள்ள கடல் மற்றும் சாலை போக்குவரத்து வழித்தடங்களுக்கு கூடுதலாக வழித்தடங்கள் உருவாக்கப்படும். இது போக்குவரத்து செலவைக் குறைத்து இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பயனளிக்கும்.
IMEC திட்டத்தில், ரயில் பாதையுடன் சேர்த்து, இந்த நாடுகள் மின்சாரம், டிஜிட்டல் இணைப்புக்கான கேபிள்கள் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான குழாய்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளன.
இந்த நாடுகள் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த வழித்தடம் பிராந்திய விநியோக சங்கிலிகளைப் பாதுகாக்கும், வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கும் மற்றும் வர்த்தக வசதிகளை மேம்படுத்தும்.
இந்த திட்டத்துடன் தொடர்புடைய நாடுகள், இந்த வழித்தடம் போக்குவரத்து செலவைக் குறைக்கும், பொருளாதார ஒற்றுமையை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் என்று நம்புகின்றன.
இந்தியாவின் G-20 ஷெர்பா அமிதாப் காந்த் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், இந்த திட்டம், இணைப்பு பிரச்சனைகள் காரணமாக இழந்த பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகளைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.
இந்த வழித்தடம் முக்கிய வர்த்தக மையங்களை இணைக்கும், சுத்தமான ஆற்றலின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை செயல்படுத்தும் மற்றும் மின்சார கட்டமைப்பையும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளையும் விரிவுபடுத்தும் என்று அவர் கூறினார்.
இந்த திட்டம் நிறைவடைந்ததும், ஐரோப்பாவிற்கான இந்திய ஏற்றுமதியாளர்களின் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும் என்றார்.
இஸ்ரேலின் நெருக்கடியால் இந்த திட்டத்திற்கு பின்னடைவு
பட மூலாதாரம், Getty Images
அனில் திரிகுணாயத் இந்தியாவின் ஜோர்டான் மற்றும் லிபியாவிற்கான தூதுவராக பணியாற்றியுள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசிய பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
“இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய மோதல் நிச்சயமாக IMECக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
“இந்த வழித்தடத்தின் வெற்றி பாலத்தீன பிரச்சனையின் தீர்வை பொறுத்தது என்று நான் முன்னரே கூறியிருக்கிறேன். இப்போது அது உண்மையாகி வருகிறது. பாரசீக வளைகுடா நாடுகளின் தலைமைத்துவம் பெரும்பாலும் மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கிறது. துர்திஷ்டவசமாக, ஹமாஸ்-ன் இந்த செயல் “அது எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்தாலும், அது அரபு உலகை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இதன் பொருள் இந்த அரபு அரசாங்கங்கள் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்க ஒருதலைப்பட்சமான முடிவை எடுக்க முடியாது.”
இந்த திட்டம் நிறைவடைய குறைந்தது ஒரு தசாப்தமாவது ஆகும் என்று திரிகுணாயத் கூறுகிறார்.
“தற்போதைய சூழ்நிலையால், இந்த திட்டத்தில் உடனடியாக எந்த முக்கிய பணியும் நடைபெறும் என்று நான் கருதவில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் என்ன?
பட மூலாதாரம், X/AmbTrigunayat
அனில் திரிகுணாயத்
அனில் திரிகுணாயத், இந்த தாக்குதலின் பின்னால் இருக்கும் ஹமாஸ்-ன் மிகப்பெரிய நோக்கம், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இடையே உறவுகள் இயல்பாக்கப்படுவதைத் தடுப்பதுதான் என்று கூறுகிறார்.
“சவுதி அரேபியா இஸ்ரேலுடனான உறவுகளை மேம்படுத்தினால், பாலத்தீன் பிரச்சனைக்கு என்ன நடக்கும் என்பதை ஹமாஸ் யோசித்திருக்க வேண்டும். இந்த தாக்குதலால், IMEC மட்டுமல்ல, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஒன்றாக ஈடுபட்டுள்ள அனைத்து திட்டங்களுக்கும் ஒரு பின்னடைவாக இருக்கும்.”
இந்திய-மத்திய கிழக்கு வழித்தடம் நிலைமைகளை புரட்டி போடும் என்கிறார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. இந்த வழித்தடத்தைப் போன்ற முயற்சிகளை தொடங்க இந்தியாவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துடனும் நல்ல உறவு தேவை என்று கூறுகிறார், இது அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் நிரந்தர செழிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா டுடே சேனலில் ஜெயந்த் சின்ஹா, “எனவே இது போர் காலம் அல்ல, இது ஒத்துழைப்பின் காலம். இது வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காலம் மற்றும் அனைத்து மக்களுக்கும் செழிப்பை உறுதி செய்யும் காலம். நாம் அந்த வழியில் ஒத்துழைக்க முடிந்தால், நாம் ஒன்றாக இணைந்து செயல்பட முடிந்தால், அனைவருக்கும் உதவ முடியும் – அவர்கள் இஸ்ரேலியர்களாக இருந்தாலும், பாலத்தீன மக்களாக இருந்தாலும், சவுதியர்களாக இருந்தாலும் அல்லது ஈரானியர்களாக இருந்தாலும்.” என்றார்.
திட்டம் தடைபடலாம் ஆனால் முடிவடையாது
பட மூலாதாரம், Getty Images
டாக்டர் பிரேம் ஆனந்த் மிஸ்ரா ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நெல்சன் மண்டேலா சமாதான மற்றும் மோதல் தீர்வு மையத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலின் காரணமாக IMEC போன்ற திட்டங்கள் தள்ளிப் போகலாம் ஆனால் தடைபடாது என்று அவர் கூறுகிறார்.
“இந்த திட்டம் முடிவடைய அதிக நேரம் எடுக்கலாம், ஏனெனில் மற்ற பிரச்சனைகள் உருவாகலாம், இந்த திட்டம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படலாம். ஆனால் இதுபோன்ற திட்டங்களுக்கு தேவை உள்ளது. “கூட்டு உறுதிப்பாடு இருந்தால், இது தடைபட்டாலும், இதனை நிறுத்த முடியாது.”
இந்த திட்டத்துடன் தொடர்புடைய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகள் மோசமடைந்தால், இந்த திட்டம் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம் என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார். அமெரிக்கா பாதுகாப்பை உறுதி செய்வதால் இது நடக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
சீனாவுடனான போட்டி
பட மூலாதாரம், P Mishra
டாக்டர் மிஸ்ரா, இந்த திட்டத்தின் பின்னால் உள்ள கருத்து சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படும் பெல்ட் அன்ட் ரோடு இனிஷியேட்டிவ் (BRI) திட்டத்திற்கு போட்டியானது என்கிறார்.
“எனவே இதுபோன்ற போட்டியின் கீழ் ஒரு திட்டத்தை உருவாக்கும் எண்ணம் இருந்தால், அனைத்து வகையான சிரமங்களையும் மீறி அதை நிறைவேற்றுவதற்கான முயற்சி எடுக்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.
மிஸ்ரா கூறுகையில், இந்த மோதலில் உள்ள கேள்வி இஸ்ரேல் பற்றியது மட்டுமல்ல. “ஹமாஸ் பலவீனமடைந்து வரும் அமெரிக்காவின் சக்திக்கு சவால் விட்டுள்ளது. 1945 முதல் இன்று வரை, அமெரிக்காவின் சக்தி நிலைத்துள்ளது, ஏனெனில் அவர்களிடம் நிறுவன வழிமுறைகள் இருந்தன. பைடன் நிர்வாகம் தாராளவாத நிறுவனங்களின் சித்தாந்தத்தை எல்லா இடங்களிலும் பரப்ப விரும்புகிறது. இந்திய-மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற திட்டங்களை அமெரிக்கா ஒரு கூட்டணி சக்தியாகப் பார்க்கவில்லை என்றால் அது சாத்தியமில்லை” என்கிறார் அவர்.
இந்த திட்டத்தில் அரசியல் உள்ளது, இதில் உலகளாவிய அமைப்பும் உள்ளது, அமெரிக்காவும் இதில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளது என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார்.
“இது இந்தியா மற்றும் அரபு நாடுகளின் விஷயமாக மட்டுமே இருந்திருந்தால், இந்த திட்டம் சிக்கலில் மாட்டியிருக்கும். ஆனால் அமெரிக்கா போன்ற ஒரு பெரிய சக்தி இதில் ஈடுபட்டுள்ளதால், இந்த திட்டம் தள்ளிப் போகலாம் ஆனால் நிறைவேறாமல் போகாது.” என்று அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
