குகேஷ்: ஆசிய போட்டியில் தங்கம் வெல்ல துடிக்கும் இந்திய சதுரங்க மன்னனின் கதை

குகேஷ்: ஆசிய போட்டியில் தங்கம் வெல்ல துடிக்கும் இந்திய சதுரங்க மன்னனின் கதை

சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ்.

இந்திய சதுரங்க அரங்கில் ஒலிக்கும் முக்கியப் பெயர்களில் ஒன்று குகேஷ். சென்னையைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார்.

குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார்.

பள்ளி மாணவரான குகேஷ் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் என கூறிக் கொள்வதில் அவரது பெற்றோர்கள் மிகவும் பெருமை கொள்கின்றனர்.

சீனாவில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஆசிய சதுரங்க போட்டிகள் 2023இல் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் குகேஷ் இடம் பெற்றுள்ளார்.

பொழுதுபோக்காக ஆரம்பித்த விளையாட்டு

சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,

கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் முதல்முறையாகக் கிடைத்தது.

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.

தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். அவரை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தினார்.

அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.

“வார இறுதி நாட்களில் சதுரங்கப் போட்டி எங்கு நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்றுவிடுவார். அந்தப் போட்டிகளுக்காகவே காத்திருப்பார். அவர் பெறும் ஒவ்வொரு பரிசுக்கும் அவரை மேடையில் ஏற்றி, பள்ளி அவரை ஊக்கப்படுத்தியது,” என்கிறார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த்.

மகனுக்காக பணியை கைவிட்ட தந்தை

சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது என்கிறார் அவரது தந்தை.

குகேஷ் உடன் போட்டிகளில் விளையாடுபவர்கள் அவரைவிட வயதில் மூத்தவர்களாகவும், அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் “குகேஷ் தனது ஆர்வம் மற்றும் திறமையின் காரணமாக போட்டிகளை எளிதாக வெல்ல முடிந்தது,” என்கிறார் ரஜினிகாந்த்.

குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார்.

“எல்லா நாடுகளுக்கும் குகேஷை பத்திரமாக அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது குகேஷின் தந்தைதான். இதற்காகத் தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.

“நான் குகேஷுக்கு தேவையான உளரீதியான ஆதரவைத் தருகிறேன்,” என்கிறார் குகேஷின் தாய் பத்மகுமாரி. மருத்துவரான அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஹாட்ரிக் வெற்றி

சென்னை செஸ் வீரர் குகேஷ்

கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார்.

குகேஷ் தற்போது இந்தியாவில் முதல் இடத்திலும் உலகத்தில் எட்டாவது இடத்திலும் உள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலோ தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷ்-இன் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.

“எனக்கு சதுரங்கம் தெரியாது. மிக அடிப்படையாக அதைப் பற்றி சில விஷயங்கள் தெரியும். இப்போதும்கூட எனக்கு அதைப் பற்றி தெரியாது. அவை எல்லாம் குகேஷும் அவரது பயிற்சியாளரும்தான் பேசிக் கொள்வார்கள். நான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பேன்,” என்கிறார் குகேஷின் தந்தை.

நிறைவேறிய கனவு

சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,

சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ்.

சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது. குகேஷுக்கு இந்த கனவு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது.

அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

சதுரங்கத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதலிடத்தில் இருந்தவர் குகேஷ். ஆனால் சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தினசரி பாடங்களைக் கற்பதில் இருந்து சற்று விலக்கு பெற்றுள்ளார்.

குகேஷின் இன்னொரு முகம்

போட்டிகளின்போது, பொதுவெளியில் காணப்படும் குகேஷுக்கு மற்றொரு முகம் இருக்கிறது என குகேஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது தந்தை.

“வெளியில் காணப்படுவது மிகவும் சாதுவான, அமைதியான குகேஷ். ஆனால், உண்மையில் அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புத் தனம் செய்து கொண்டு, விளையாட்டாக வீட்டில் இருப்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் சிறுவன்,” என்று கூறும் அவரது தந்தை, சதுரங்கப் போட்டிகளுக்குத் தயாராகும் நேரத்தில், குகேஷ் யாரிடமும் பேசமாட்டார்,” என்றும் தெரிவித்தார்.

போட்டிகளுக்குத் தயாராகும்போது தனது பயிற்சியாளரிடம் மட்டுமே குகேஷ் பேசுவார். “அவர் அருகில் அமர்ந்து நான் செல்ஃபோனில்கூட யாரிடமும் பேசமாட்டேன். அதுகூட அவரது கவனத்தை சிதறடிக்கும். அவரும் அதை விரும்ப மாட்டார்.

போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும்போது, போட்டிக்கு முன், சில வார்த்தைகள் தொலைபேசியில் தன் தாயிடம் பேசுவார். நான் கூடவே இருப்பதால் எனக்கு அதுகூட கிடைக்காது,” என பெருமையும் சிரிப்பும் கலந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் குகேஷுன் தந்தை.

முதலில் உள்ளூர், வெளிமாநிலங்களில், தேசிய அளவில் என போட்டிகளில் பங்கேற்று வந்த குகேஷ், வெகு சீக்கிரமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஆரம்பித்தார்.

குகேஷ் குவித்துள்ள பதக்கங்கள்

சென்னை செஸ் வீரர் குகேஷ்
படக்குறிப்பு,

2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.

குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் கால் இறுதிவரை தகுதி பெற்றிருந்தார்.

இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது சக போட்டியாளர்கள் இடையே மிகவும் ஆரோக்கியமான போட்டி நிலவும் எனக் குறிப்பிடுகிறார் அவரது தந்தை ரஜினிகாந்த்.

“போட்டிகளில் பங்கேற்கும் முன் அவ்வளவாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு, அனைத்து பிள்ளைகளும் ஒரே அறையில் குழுமி இரவெல்லாம் ஆட்டம் போடுவார்கள். எனினும் போட்டியின்போது நண்பரின் மீது கருணையே காட்டமாட்டார்கள்,” என்று புன்னகைக்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *