2023 வைரல் சம்பவங்கள்: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை

2023 வைரல் சம்பவங்கள்: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை

தமிழ்நாடு: சோஃபா சிறுவன் முதல் டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் வரை - 2023 வைரல் சம்பவங்கள்

பட மூலாதாரம், nifyafurniture/Instagram

ஒவ்வோர் ஆண்டும் பல விஷயங்கள் வைரலாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும். இந்த வைரல் சம்பவங்களில் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாமானியர்களும் இடம் பெறுவார்கள்.

அப்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம்.

600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin/X

கடந்த மே மாதம், 2022-2023 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இதற்கு முன்பு நடக்காத முன்மாதிரியாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்றார். அவருக்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துகள் குவிந்தன.

அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அந்த மாணவி, ‘படிப்புதான் சொத்து’ என்பதை உணர்ந்து கவனத்துடன் படித்ததாக ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

தச்சு தொழிலாளியின் மகளான நந்தினி, ’பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றைப் புரிந்து படித்ததே’ தன்னுடைய சாதனைக்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். முழு மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் சமூக ஊடகங்களில் மிகுந்த கவனத்தைக் குறுகிய காலத்திலேயே பெற்றார் நந்தினி.

பேரிடரில் வெளிப்பட்ட அன்பு

மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், @chennaipolice_/X

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை-வெள்ளம் சென்னை மாநகரையே புரட்டிப்போட்டது. இதனால், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் அமைந்த குடியிருப்புகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, வெள்ளநீரை அகற்றுவது உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கு மத்தியிலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. அதில், துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் தயாளன் என்பவர், வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும்போது, குழந்தை ஒருவரை அவரே தூக்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் நடந்து வந்த காட்சிகளும் புகைப்படங்களும் உடனே வைரலாகின.

குழந்தையைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்பதால் தாமே தூக்கிக்கொண்டு வந்ததாக தயாளன் ஊடக பேட்டிகளில் தெரிவித்தார். ‘குழந்தையைப் பார்த்தவுடன் களைப்பு பறந்து போய்விட்டது’ எனவும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதுதவிர, பெருங்களத்தூரில் சாலையொன்றில் ‘சாதாரணமாக’ கடந்து சென்ற முதலையும் கவனம் பெற்றது. மேலும், வெள்ளம் காரணமாக புளியந்தோப்பில் வீட்டிலேயே பிரசவித்த பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அப்பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் தந்தையிடம் மருத்துவமனை நிர்வாகம் தந்ததாக எழுந்த சர்ச்சையும் கவனம் பெற்றது.

‘பிறந்து 9 நாளில் நடந்தேன்’

ஜோயல் இமானுவேல்

பட மூலாதாரம், Instagram

படக்குறிப்பு,

ஜோயல் இமானுவேல்

சென்னையைச் சேர்ந்த ஜோயல் இமானுவேல் என்ற 14 வயது சிறுவன், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்பும் ஊழியம் செய்து வருகிறார்.

அதுகுறித்த காணொளியில், “நான் 5 கிலோ எடையில் பிறந்தேன், பிறந்து 9 நாட்களிலேயே நடந்தேன், நானாகவே எல்லா வேலைகளையும் செய்வேன்’ எனப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்தச் சிறுவனின் காணொளியைப் பகிர்ந்த பலரும் அவரை கேலி செய்து பதிவிட்டனர். மேலும் அச்சிறுவன் பேசியது கடும் விவாதங்களையும் எழுப்பியது.

இதையடுத்து, ‘நான் தவறாகப் பேசிவிட்டேன், நான் 9 நாட்களில் நடக்கவில்லை. 9 மாதங்களில் நடந்தேன் என்பதை 9 நாட்கள் எனக் கூறிவிட்டேன்’ என விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

ரஞ்சனா நாச்சியார்

ரஞ்சனா நாச்சியார்

பட மூலாதாரம், ranjana_nachiyaar

படக்குறிப்பு,

ரஞ்சனா நாச்சியார்

பேருந்தில் படிக்கட்டுகளில் பயணித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து, அவதூறாகப் பேசியதாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது புகார் எழுந்த சம்பவம் வைரலானது. இவருடைய நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கின.

அந்த மாணவர்களைத் தன் குழந்தைகளாகப் பாவித்து, அவர்களின் நலனுக்காகவே தாம் அப்படிச் செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

வைரலான சோஃபா சிறுவன்

வைரல் சோஃபா சிறுவன்

பட மூலாதாரம், nifyafurniture/Instagram

சென்னையில் சோஃபா கடை ஒன்றில் முகமது என்ற 13 வயது சிறுவன் ஒருவன் ‘படபட’வென மூச்சுவிடாமல் பேசி வியாபாரம் செய்யும் காணொளிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகின.

அதுதொடர்பான வீடியோக்களை அவரே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். தன் தந்தையின் கடையைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் இந்தக் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார்.

இந்த வயதிலேயே சோஃபாக்களை விற்பதில் உள்ள வியாபார உத்தி, அதுகுறித்த அறிவு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு பலரும் பாராட்டினாலும் அந்தச் சிறுவனை விமர்சிப்பவர்களும் உண்டு.

அதற்குப் பதிலளித்த அந்தச் சிறுவன் 8ஆம் வகுப்பு படிக்கும் தான் நள்ளிரவில் படித்துவிட்டு அதிகாலையில் தன் தந்தையின் கடைக்கு வந்து வேலைகளைச் செய்வதாகத் தெரிவித்தார். இதன்மூலம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

டி.டி.எஃப் வாசனின் ‘மஞ்சள் வீரன்’

டி.டி.எஃப் வாசன்

நெடுஞ்சாலைகளில்கூட அதிவேகமாக பைக் ஓட்டுவது, சாகசங்களை செய்வது எனத் தன்னுடைய காணொளிகள் மூலம் யூடியூபராக பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன்.

இவர் செந்தில் செல்.அம் என்பவரின் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாகவும் 2024ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகி மேலும் பிரபலம் அடைந்தார் வாசன்.

ஆனால், செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது வாசன் விபத்துக்குள்ளானார். இதுதொடர்பான வழக்கில் அவர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார். மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பைக் சாகசங்கள் தொடர்பான படம் என்றே ‘மஞ்சள் வீரன்’ போஸ்டர் உணர்த்திய நிலையில், உரிமம் இல்லாத நிலையில் அப்பட வேலைகள் தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது.

அரசியல் வைரல்

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், ANI

தமிழக அரசியலில் பல வைரல் நிகழ்வுகள் நடந்திருந்தாலும் குறிப்பாக, மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டது தமிழக அரசியலில் பேசுபொருளானது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காரில் ஏறி அமர்ந்த செந்தில் பாலாஜி, திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி இருக்கையில் படுத்தபடியே துடித்தார். இந்த காணொளி காட்சிகள் அன்றைய நாளில் தேசிய அளவில் கவனம் பெற்றது. சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது.

இதுதவிர, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ குறித்த சர்ச்சைப் பேச்சு, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவின் முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை எழுப்ப தமிழக அரசு முயல்வதாக அதன் உரிமையாளர் எழுப்பிய குற்றச்சாட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு போன்ற பல சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

’பருத்தி வீரன்’ சர்ச்சை

இயக்குனர் அமீர்

பட மூலாதாரம், HUW EVANS PICTURE AGENCY

படக்குறிப்பு,

இயக்குனர் அமீர்

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எழுப்பிய குற்றச்சாட்டு சினிமா உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பி, விவாதங்களை எழுப்பியது.

“படத்திற்கு சொன்ன கணக்கைவிட அதிகமாகச் செலவு செய்து பணத்தைத் திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடிச் சம்பாதிக்கிறார்” என, ஞானவேல் ராஜா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டிதான் சர்ச்சைகளுக்கு ஆரம்பப்புள்ளி.

“என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவர் என்னைப் பற்றிப் பேசி இருக்கிறார்” என அமீர் தன் தரப்பை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சேரன் எனப் பல இயக்குநர்களும் அத்திரைப்படத்தில் நடித்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

ஆனால், படத்தில் நடித்த கார்த்திக், தயாரிப்பு விஷயத்தில் தலையிட்டதாகக் கூறப்படும் சூர்யா, சிவகுமார் போன்றோர் இதுகுறித்து எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காமலேயே இந்த சர்ச்சை அடங்கிப் போனது.

இதுதவிர, மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து ‘இழிவாக’ பேசியதும் அதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களும் வைரலாகின.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கூறப்பட்ட ‘பிளாஷ்பேக்’ போலியானது என லோகேஷ் கூறியதும், அதற்கு ரசிகர்கள் தங்கள் கற்பனையில் ‘உண்மையான’ பிளாஷ்பேக் எனப் பல கதைகளை சமூக ஊடகங்களில் எழுதியதும் கவனம் பெற்றது.

’இந்தாம்மா ஏய்’

நடிகர் மாரிமுத்து

பட மூலாதாரம், MARIMUTHU

படக்குறிப்பு,

நடிகர் மாரிமுத்து

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரில், ’ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து பேசிய எதார்த்தமான வசனங்கள் ரசிகர்களிடையே இந்த ஆண்டு மிகுந்த கவனம் பெற்றன.

அதில், தன் வீட்டுப் பெண்களை ‘இந்தாம்மா ஏய்’ என அழைப்பது எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பினாலும் அவருடைய உடல் மொழியும் வசனங்களை வெளிப்படுத்தும் தனி பானியும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற மாரிமுத்து, இந்தத் தொடர் மூலம் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தை சமூக ஊடகங்கள் மூலம் பெற்றிருந்தார். அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து காலமானார்.

’மறக்குமா நெஞ்சம்’

ஏ.ஆர். ரகுமான்

பட மூலாதாரம், GETTY IMAGES

செப்டம்பர் மாதம் நிகழ்ந்த ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் தவறான நிர்வாகம் காரணமாகக் கூட்ட நெரிசல், டிக்கெட் வாங்கியவர்களுக்கு அனுமதி இல்லாதது, இடம் கிடைக்காதது, கூட்ட நெரிசலில் பெண்களுக்குப் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட நிகழ்வுகள் நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது. இதற்கு தாம் பொறுப்பு ஏற்பதாக ஏ.ஆர். ரகுமான் விளக்கம் அளித்தார்.

அதுகுறித்து மின்னஞ்சலுக்கு புகார் அளித்தால் டிக்கெட்டுக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். ஆனாலும், தங்களுக்கு அந்தப் பணம் திரும்பி வரவில்லை எனப் பலரும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்திருந்தனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *