ராயல் சேலஞ்சர்ஸ்: கோலியால் முடியாததை ஸ்மிரிதி மந்தனா சாதிக்க உதவிய அந்த 8-ஆவது ஓவரில் என்ன நடந்தது?

ராயல் சேலஞ்சர்ஸ்: கோலியால் முடியாததை ஸ்மிரிதி மந்தனா சாதிக்க உதவிய அந்த 8-ஆவது ஓவரில் என்ன நடந்தது?

ஸ்மிருதி மந்தனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது

ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக ஆர்.சி.பி. ஆடவர் அணி கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் நிலையில், மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே அந்த அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதுவும், நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணிகளாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி ஆர்.சி.பி. மகளிர் அணி மகுடம் சூடியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அச்சுறுத்தும் தொடக்க ஜோடியாக வலம் வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மெக் லேன்னிங் – ஷாஃபாலி வர்மா இணையின் அதிரடி சரவெடியுடன் ஆட்டத்தை தொடங்கினாலும் எட்டாவது ஓவரில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிப் போனது. அந்த ஓவரில் என்ன நிகழ்ந்தது?

அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆர்.சி.பி. – டெல்லி கேப்பிட்டல்ஸ் இறுதிப் போட்டி

மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்து வலுவான அணியாக கம்பீரமாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆர்.சி.பி. அணி எதிர்கொண்டது.

இறுதிப்போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பின என்பது அந்த அணி கேப்டன்களின் பேட்டியில் வெளிப்பட்டது. நடப்புத் தொடரில் 7 முறை முதலில் பேட் செய்தே வெற்றி பெற்ற டெல்லி அணி டாஸில் வென்றதும் தயக்கமே இல்லாமல் அந்த பாணியை தொடர தீர்மானித்தது. டெல்லி கேப்டன் மெக் லேன்னிங் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும் தனது அணி முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பியதாக கூறினார். எனினும், சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று அவர் கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

மெக் லேன்னிங் – ஷாஃபாலி வர்மா அதிரடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வழக்கம் போல் மென் லேன்னிங் – ஷாஃபாலி வர்மா ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. குறிப்பாக, ஷாஃபாலி வர்மாவின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது.

இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்.சி.பி. பவுலர்கள் திணறித்தான் போனார்கள். ஏழே ஓவர்களில் டெல்லி அணி 64 ரன்களைக் குவித்து ஆர்.சி.பி. மகளிர் அணியை திகைக்க வைத்தது.

திருப்புமுனையாக அமைந்த எட்டாவது ஓவர்

மெக் லேன்னிங் – ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீராங்கனை ஷாஃபாலி வர்மாவை வீழ்த்தி ஆர்.சி.பி. அணிக்கு நிம்மதி தந்தார் சோஃபி.

ஷாஃபாலி 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 44 ரன்களை குவித்திருந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி தந்தார். இருவரையும் கிளீன் போல்டாக்கி அசத்தினார் சோஃபி.

இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து அதிரடி வீராங்கனை ஷாபாஃலி உள்ளிட்ட 3 பேரை அவுட்டாக்கி ஆர்.சி.பி. அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் சோஃபி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மெக் லேன்னிங் – ஷாஃபாலி இணையின் அதிரடியால் விழி பிதுங்கிப் போயிருந்த ஆர்.சி.பி. அணிக்கு சோஃபி மெலினெக்ஸ் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சில் அடங்கிப் போன டெல்லி

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மெக் லேன்னிங் கடுமையாக போராடினார். ஆனால், அவரை 23 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஸ்ரேயங்கா பாட்டில் அவுட்டாக்கினார்.

அதன் பின்னர் டெல்லி அணியை தலைநிமிர ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்கள் விடவே இல்லை. டெல்லி அணி வீராங்கனைகள் களமிறங்குவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாக இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 113 ரன்களுக்கு அடங்கிப் போனது.

ஆர்.சி.பி. அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபி மெலினெக்ஸ் மொத்தம் 20 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். சுழற்பந்துவீச்சாளர் ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

ஆர்.சி.பி. சிறப்பான தொடக்கம்

நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த வலுவான மும்பை இந்தியன்சை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்திய ஆர்.சி.பி. அணி, டெல்லி கேப்பிட்டல்சை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டதால் நம்பிக்கையுடன் இலக்கைத் துரத்த களமிறங்கியது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவும், சோஃபி டிவைனும் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவருமே அவசரப்படாமல், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை அடித்தாடி வெற்றிக்குத் தேவையான ரன்களை சேகரித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவருமே இறுதிப்போட்டி தந்த அழுத்தத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சையும் திறம்பட சமாளித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சோஃபி டிவைன் 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட எலிஸி பெர்ரியும் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

மந்தனா அவுட்டானதும் சற்று நெருக்கடி

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை. ஆர்.சி.பி. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்த போது மந்தனா 31 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அப்போது, ஆர்.சி.பி. அணி வெற்றி பெற 36 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டன.

மந்தனா அவுட்டானதும் சற்றே நம்பிக்கை பெற்ற டெல்லி மகளிர் அணியினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். அவர்களது துல்லியமான பந்துவீச்சால் ஆர்.சி.பி. அணியின் ரன் வேகம் மந்தமானது.

ஆர்.சி.பி. எளிதான வெற்றி

டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டி, கடைசி ஓவர் வரை நீடித்தது. எனினும், 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் ஆர்.சி.பி. அணியினர் முகத்தில் பெரிய அளவில் நெருக்கடி தென்படவில்லை.

கடைசி ஓவரின் முதலிரு பந்துகளிலும் தலா ஒரு ரன் வர, மூன்றாவது பந்தில் ரிச்சா கோஷ் பவுண்டரி அடித்து ஆர்.சி.பி. அணியை எளிதாக வெற்றிபெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஆர்.சி.பி. வீராங்கனை சோஃபி மெலினெக்ஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்திட போராடினார். ஆனால், அது நடக்கவில்லை.

ஆர்.சி.பி. அணிக்கு வெற்றி தேடித்தந்த வியூகம்

இறுதிப்போட்டியில் டெல்லி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசிப் போட்டியில் ஆடிய அதே வீராங்கனைகளே இறுதிப்போட்டியிலும் இடம் பெற்றனர்.

டெல்லியின் சொந்த மைதானமான இந்த மைதானத்தில் ஆடிய இரு போட்டிகளிலுமே அந்த அணி வெற்றி பெற்றிருந்தது. அத்துடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக அதுவரை ஆடியிருந்த 4 போட்டிகளிலுமே டெல்லி அணியே வெற்றி பெற்றிருந்தது.

இறுதிப்போட்டியில் டாசும் சாதகமாக அமைய, நடப்புத் தொடரில் மிகவும் வலுவான அணியாக வலம் வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியே கோப்பையை வெல்லும் என்று நிபுணர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆட்டத்தில் தொடக்கத்தில் டெல்லி அணியின் கேப்டன் மெக் லேன்னிங்கும் ஷாஃபாலி வர்மாவும் ஆடிய அதிரடி ஆட்டம் அதனை நிரூபிப்பது போன்றே அமைந்தது.

ஆனால், சோஃபி மெக்னேக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்த, அதன் பிறகு ஆட்டத்தை ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதனால், 64/0 என்றிருந்த டெல்லி அணியின் ஸ்கோர் 113 ரன்களுக்கு ஆல்அவுட் என்றாகிப் போனது.

சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டில் வைத்த பொறியில் சிக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் மெக் லேன்னிங் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெல்லி அணியின் பின்வரிசை விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் ஷோபனா சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெல்லி அணி குறைந்த ரன்களில் சுருண்டதில் ஆர்.சி.பி. சுழற்பந்துவீச்சாளர்களே பெரும் பங்கு வகித்தனர்.

3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆர்.சி.பி. அதற்கான பலனையும் பெற்றது. அதேநேரத்தில், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் கண்ட டெல்லி அணிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. வெற்றி இலக்கும் எளிதானது என்பதால் ஆர்.சி.பி. அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர்களால் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆர்.சி.பி.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுமே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம், ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகளாக கோலி, டிவில்லியர்ஸ், கெயில் போன்ற முன்னணி வீரர்களுடன் வலுவான அணியாக ஆர்.சி.பி. திகழ்ந்தாலும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆர்.சி.பி. அணியின் கோப்பை தாகம் மகளிர் போட்டிகள் தொடங்கிய இரண்டாவது சீசனிலேயே தணிந்துள்ளது. அந்த அணியின் வீராங்கனைகள் கோப்பையை வென்று அதன் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்.

ஆர்.சி.பி. மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றிருப்பதை குறிப்பிட்டு, கோலி புகைப்படத்துடன் அந்த அணி ரசிகர்கள் பலரும் எதிர்வரும் ஐ.பி.எல்.லில் கோப்பை வெல்ல வேண்டி தங்களது எதிர்பார்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *