SA vs NZ – பேஸ்பால் உத்தியால் நியூசிலாந்தை சாய்த்து இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

SA vs NZ - பேஸ்பால் உத்தியால் நியூசிலாந்தை சாய்த்து இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான லீக் ஆட்டம் புனேயில் நடந்து வருகிறது.

தெ.ஆ. கேப்டன் பவுமா ஏமாற்றம்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் குயின்டன் டீ காக், பவுமா ஆட்டத்தைத் தொடங்கினர். கேப்டன் பவுமா காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். பவுமா 24 ரன்கள் சேர்த்த நிலையில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.ப வர்ப்ளே முடிவில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.

டூசென், டி காக் நிதான ஆட்டம்

2வது விக்கெட்டுக்கு வேன்டர் டூ சென், டி காக்குடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாவே பேட் செய்தனர், 11 ஓவர்கள் முதல் 15-வது ஓவர்கள் வரை தென் ஆப்ரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரிகூட வரவில்லை.

டிம் சவுதி வீசிய 16-வது ஓவரில் டி காக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு தென் ஆப்ரிக்கா 94 ரன்கள் சேர்த்தது.

முதல் பேட்டர் டி காக்

குயின்டன் டி காக் களத்தில் நங்கூரமிடுவது எப்போதும் எதிரணிக்கு ஆபத்தாக முடியும் என்பதை நியூசிலாந்து உணரவில்லை. ஏனென்றால், தொடக்கத்தில் 39 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த டி காக், தனது ரன் சேர்க்கும் கியரை மாற்றி, அடுத்த 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணியும் 21-வது ஓவர்களில் 100ரன்களை எட்டியது. டூ சென்னும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

குயின்டன் டி காக் அரைசதம் அடித்தபோது, உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் தென் ஆப்பிரிக்க பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் எந்த தென் ஆப்பிரி்க்க பேட்டரும் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களை எட்டியதும், கடந்ததும் இல்லை. தென் ஆப்ரிக்க அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

கேட்சுகளை தவறவிட்ட நியூசிலாந்து

டி காக், டூசென் இருவரும் அரைசதம் அடித்து களத்தில் நங்கூரமிட்டனர். 30 ஓவர்களுக்குப்பின் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தி, ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் வீதம் குறிப்பாக ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசினர்.

டூசென் 68 ரன்கள் சேர்த்திருந்தபோது, நீசம் பந்துவீச்சில் டூசென் தூக்கி அடித்தார். ஆனால், அந்தப் பந்தை கேட்ச் பிடிக்காமல் நீசம் தவறவிட்டார். இது மட்டுமல்லாமல், டிரன்ட் போல்டும் டூசெனுக்கு ஒரு கேட்சை தவறவிட்டார். நீசம் வீசிய 36-வது ஓவரில் மட்டும் டூசெனுக்கு இரு கேட்ச் வாய்ப்புகளை நியூசிலாந்து வீர்ரகள் தவறவிட்டனர். இதற்கு தண்டனையும் கடைசியில் கிடைத்தது.

புதிய சாதனை படைத்த டி காக்

சதத்தை நெருங்கிய டி காக், லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி உலகக் கோப்பைத் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார். இதுவரை உலகக் கோப்பையில் 4 சதங்களை ரோஹித் சர்மா, குமாரா சங்கக்கரா இருவர் மட்டுமே அடித்துள்ளனர், அவர்களுடன் தற்போது டீ காக்கும் இணைந்தார். ஒரு உலகக் கோப்பையில் 4வது சதம் அடித்த முதல் தென் ஆப்ரிக்க பேட்டரும் டி காக் மட்டுமே.

37-வது ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 200ரன்களைக் கடந்தது. சவுதி வீசிய 40-வது ஓவரில் டி காக் 114 ரன்களில்(116 பந்து, 10பவுண்டரி, 3சிக்ஸர்) பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டூசென், டி காக் இருவரும் சேர்ந்து, 200 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இலங்கையுடன் இணைந்த தெ.ஆப்ரிக்கா

40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. 3வது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார். சதத்தை நெருங்கிய டூசென் நீசம் ஓவரில் பவுண்டரி அடித்து, 101 பந்துகளில் உலகக் கோப்பைத் தொடரில் 2வது சதத்தை பதிவு செய்தார்.

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிகமான சதங்களை அடித்த அணி என்ற வகையில் இலங்கை அணி 8 (2015)சதங்களுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது, தென் ஆப்ரிக்காவும் இணைந்துவிட்டது. அதன்பின் மில்லர், டூசென் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

நீஷம் வீசிய 44வது ஓவரில் டூசென் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பிலிப்ஸ் வீசிய 46-வது ஓவரில் மில்லர் 2 சிக்ஸர் உள்ளிட்ட 18 ரன்கள் சேர்ததார். அதிரடியாக ஆடிய டூசென் 117 பந்துகளில் 134 ரன்கள் சேர்த்த நிலையில்(5 சிக்ஸர், 9பவுண்டரி) சவுதி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். மில்லர், டூசென் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

மில்லர் “தி கில்லர்”

ஆனால், மில்லர் தனது அதிரடி ஆட்டத்தை குறைக்கவில்லை. போல்ட் வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். நீசம் வீசிய கடைசி ஓவரில் மில்லர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி 29 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில்(4சிஸ்கர், 2பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஒரு பந்தைச் சந்தித்த மார்க்ரம் கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசினார்.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் சேர்த்தது. கிளாசன் 15 ரன்களிலும், மார்க்ரம் 6 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

டி காக், டூசென் ஆதிக்கம்

தென் ஆப்பிரிக்க ஆட்டத்தின் பெரும்பங்கை டூசென், டிகாக் எடுத்துக்கொண்டு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டு ஆதிக்கம் செலுத்தினர். கடைசி நேரத்தில் மில்லர் அடித்த அதிரடி அரைசதம் 300ரன்களுக்கு மேல் செல்ல உதவியது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 67 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் நீசம் 18 ரன்களை வழங்கி தென் ஆப்ரிக்கா 350 ரன்களைக் கடக்க உதவினார்.

இப்படியா பீல்டிங் செய்வது?

நியூசிலாந்து அணியின் பீல்டிங் இன்று கொடூரமாக இருந்தது. முக்கியமான கேட்சுகளை தவறவிட்டனர். போல்ட், நீசம் இருவரும் தலா ஒரு கேட்சை டூசெனுக்கு தவறவிட்டதற்கான பலனை அனுபவித்தனர். இந்த உலகக் கோப்பையில் மட்டும் 37 கேட்சுகளை நியூசிலாந்து பிடிக்க முற்பட்டு அதில் 17 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர்.

புள்ளிப்பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நியூசிலாந்து பீல்டிங், தெருவில் விளையாடும் சிறுவர்கள் போன்று பீல்டிங் செய்து, கோட்டைவிடுவது அரையிறுதிக்கு செல்வதிலேயே ஆபத்தே ஏற்படுத்தும். பீல்டிங்கில் உயர்ந்த தரம், கட்டுக்கோப்பு, கேட்ச் பிடிப்பதில் கவனம் ஆகியவை நியூசிலாந்திடம் குறைவாக இருக்கிறது.

200 ரன்களை வழங்கிய 3 வள்ளல்கள்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் இன்று பெரிய அளவுக்கு தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுக்கம் வகையில் இல்லை. சராசரிக்கும் குறைவான தரத்துடனே பந்துவீச்சு இருந்தது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். டிம் சவுதி, நீஷம், சான்ட்னர், பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு பல்இல்லாததாக இருந்தது.

ஹென்றி காயத்தால் பாதியிலேயே வெளியேறியது நியூசிலாந்துக்கு பின்னடைவாக இருந்தது. சவுதி, நீஷம், பிலிப்ஸ், ரன்களை வாரி வழங்கினர், இந்த 3 பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 200 ரன்களை வழங்கியுள்ளனர் என்றால் பந்துவீச்சு எப்படி என்பது தெரிந்துவிட்டது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

358 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி சேஸிங்கில் களமிறங்கியது. கான்வே, யங் ஆட்டத்தைத் தொடங்கினர்.

மிகப்பெரிய ஸ்கோர் அடித்த துணிச்சல், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் தெரிந்தது. துல்லியமாக, லைன் லென்த்தில் யான்செனும், இங்கிடியும் வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டனர்.

யான்சென் வீசிய 3வது ஓவரில் 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த மார்க்கிரத்திடம் கேட்ச் கொடுத்து, கான்வே 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கி ரச்சின் ரவீந்திராவும், யான்சென் வேகப்பந்துவீச்சுக்கு திணறினார், பல பந்துகல் பீட்டன் ஆகின. இங்கிடியும் தனது பங்கிற்கு லைன் லென்த்தில் நெருக்கடியாக வீசவே நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்கமுடியாமல் தடுமாறினர்.

இங்கிடி வீசிய 8-வது ஓவரில் யங் 2 பவுண்டரிகள் விளாசி 10 ரன்களைச் சேர்த்து நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், யான்சென் வீசி 9-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த கோட்ஸியிடம் கேட்ச் கொடுத்து, ரவீந்திரா 9 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.

பவர்ப்ளேயின் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 51 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

100 ரன்களில் 6 விக்கெட் இழந்து தத்தளிப்பு

கோட்ஸி தனது முதல் ஓவராக 11வது ஓவரை வீச வந்தார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த யங், 3வது பந்தில், விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரபாடா தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி நியூசிலாந்துக்கு மேலும் தொந்தரவு கொடுத்தார். டேரல் மிட்ஷெல், டாம் லாதம் இருவரும் பொறுமையாக பேட் செய்தனர். ரபாடா தான் வீசிய 2வது ஓவரிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்து நியூசிலாந்து பேட்டர்களை தண்ணி குடிக்க வைத்தார், கோட்ஸியும் தன்னுடைய ஓவர்களில் லைன் லென்த்தில் வீசியதால் நியூசிலாந்து பேட்டர்கள் நினைத்தவாறு ரன்கள் கிடைக்கவில்லை.

ரன் நெருக்கடி அதிகரித்ததால், நியூசிலாந்து பேட்டர்கள் பொறுமையிழந்தனர். ரபாடா வீசிய 16-வது ஓவரில் மகாராஜிடம் கேட்ச் கொடுத்து லாதம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 15 பந்துகளைச் சந்தித்த லாதம் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கோட்ஸீ வீசிய 18-வது ஓவரில் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசினாலும், அதன்பின் நீண்டநேரம் நிலைக்கவில்லை. கேசவ் மகராஜ் முதல் ஓவரை வீச வந்தார். அவர் வீசிய 3வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இ ழப்புக்கு 91 ரனஅகள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது. 10ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து அடுத்த 10 ஓவர்களில் மேலும் 3 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் இழந்து மோசமாகியது.

பிலிப்ஸ், சான்ட்னர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கேசவ் மகாராஜ் வீசிய 22-வது ஓவரில் க்ளீன் போல்டாகி சான்ட்னர் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த சவுதி, பிலிப்ஸுடன் இணைந்தார்.

சவுதியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. யான்சென் வீசிய 26-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி, சவுதி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். யான்சென் மெய்டன் விக்கெட்டை வீழ்த்தினார். 109 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தோல்வியின் பிடியில் இருந்தது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்து வீரர்கள் போராட்டம்

8-வது விக்கெட்டுக்கு வந்த ஜிம்மி நீஷம் 8 பந்துகளைச் சந்தித்தும் ரன் ஏதும் சேர்க்காமல் மகாராஜ் ஓவரில் கிளீன் போல்டாகினார். 56 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த நியூசிலாந்து, அடுத்த 66 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிலும் 90 ரன்களில் இருந்து 112 ரன்களுக்குள் மட்டும் 22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியிலிருந்து தப்பிக்க போராடி வந்தது. ஒருவேளை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும்பட்சத்தில், நிகர ரன்ரேட் கடுமையாகப் பாதிக்கும். அடுத்துவரும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சவாலானதாக மாறிவிடும். இதனால் நியூசிலாந்து குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதைத் தடுக்க போராடியது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

முடிவில் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் தென் ஆப்ரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏன் முதலில் பந்துவீச்சு?

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். புனே ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, பெரிய ஸ்கோரை அடித்து தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி அளிக்கும் முடிவை தவிர்த்துவிட்டு, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது வியப்பாக இருந்தது.

உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்ரிக்க அணி “பேஸ் பால்” உத்தியைக் கையில் எடுத்து, முதலில் பேட் செய்தாலே எதிரணியை நிலைகுலையச் செய்யும் ஸ்கோரை எடுத்து வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்யும் பாணியை பின்பற்றுகிறது. இதைத் தெரிந்தும், நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது, தெரிந்தே புதைக்குழிக்குள் விழுவது போன்றுதான்.

ஏனென்றால், இரவு 8 மணிக்கு மேல், பனிப்பொழிவு இருக்கும், 16 டிகிரியாக குளிர் இருக்கும் என்று கூறப்படுகிறது. பனிப்பொழிவு இருக்கும்போது, ஆடுகளத்தின் தன்மை நிச்சயம் மாறக்கூடும், பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி, ஸ்விங் ஆகும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *