பட மூலாதாரம், Getty Images
நடந்துவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நேற்று (அக்டோபர் 16) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதன்படி, ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இலங்கையை வீழ்த்தியிருக்கிறது.
நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணியின் தோல்விக்கு காரணமானது.
ஒரு கட்டத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று கருதப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் இலங்கை விக்கெட்டுகளை சொற்ப இடைவெளியில் வீழ்த்தினார்கள்.
இதுவரை ஒரு வெற்றிகூட பெறாத இலங்கை அணி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் நெதர்லாந்துக்கு மேலே கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.
இலங்கை அணியில் மாற்றம்
லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் குசல் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
காயம் அடைந்த தசுன் ஷனகா மற்றும் மதீஷா பதிரணா ஆகியோருக்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன மற்றும் லஹிரு குமார அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
நல்ல முறையில் தொடங்கிய இலங்கையின் பேட்டிங்
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவர் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர்.
இலங்கை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே, மிட்செல் ஸ்டார்க்கிடம் ஒரு விக்கெட்டுக்கு கேட்ச் கொடுத்த பதும் நிசாங்கவுக்கு எதிரான மூன்றாவது நடுவரின் முடிவு ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்னர் குஷல் ஜனித் பெரேராவும், பதும் நிசாங்கவும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் நிதானமாக ஆடினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 135 பந்துகளில் 125 ரன்கள் சேர்த்தனர்.
பதும் நிசாங்க 67 பந்துகளில் 61 ரன்களைப் பெற்றிருந்தபோது, அவரை பாட் கம்மின்ஸால் ரன் அவுட் ஆக்கினார்.
அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 21 ஓவர்கள் 4 பந்துகளுக்கு 125 ரன்கள்.
இலங்கை இன்னிங்ஸின் 27வது ஓவரில் குஷல் ஜனித் பெரேரா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸால் இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 157 ரன்களாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
கடைசி 8 விக்கெட்டுகளை இலங்கை அணி 52 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானை போல சரிந்த இலங்கை
பெரேரா ஆட்டமிழந்த பின்னர், இலங்கை பேட்டர்கள் ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தானுடனான கடந்த போட்டியில் சதம் அடித்த குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரை முறையே 9 ரன்களுக்கும் 8 ரன்களுக்கும் ஆடம் சம்பா ஆட்டமிழக்கச் செய்தார்.
அதன்பின் களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா, 7 ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை இன்னிங்ஸ் 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்திருந்தது.
தனஞ்சய ஆட்டமிழந்த பிறகு, இரண்டு ரன்கள் எடுத்து துனித் வெல்லலா ரன் அவுட் ஆனார்.
அதன்பின் சமிக கருணாரத்ன இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து, இலங்கை அணியை மற்றொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.
அதைத்தொடர்ந்து சரித் சசங்க தனது ஆட்டத்தால் இலங்கை அணியை 200 ரன்கள் வரை கொண்டு வந்தார்.
எனினும் 43 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் இலங்கை அணியினர் அனைவரும் 209 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
கடைசி 8 விக்கெட்டுகளை இலங்கை அணி 52 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
மார்னஸ் லபுஷாங்குடன் இணைந்து மிட்செல் மார்ஷ் இலங்கை பந்துவீச்சை எதிர்த்து வேகமாக ரன்களைச் சேர்த்தார்
ஆஸியின் வேகமானஆரம்பம்
210 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் லஹிரு குமார வீசிய முதல் ஓவரில் 15 ரன்களை எடுத்தனர்.
மார்ஷ் மற்றும் வார்னரின் வேகமான தொடக்கத்திற்கு தில்ஷான் மற்று மதுஷங்க முற்றுப்புள்ளி வைத்தார். 11 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
வார்னர் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித், தில்ஷான் மதுஷங்கவின் பிடியில் சிக்கி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அப்போது, ஆஸ்திரேலியா 4 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷாங்குடன் இணைந்து இலங்கை பந்துவீச்சை எதிர்த்து வேகமாக ரன்களைச் சேர்த்தார்.
மார்ஷை வீழ்த்திய சாமிகா
மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார், அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டத்தின் 15வது ஓவரில் 2 ரன்களுக்கு ஓட முயன்ற மிட்செல் மார்ஷை சாமிகா கருணாரத்ன ரன் அவுட் செய்தார்.
அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
மார்ஷ் 52 ரன்களில் ஆட்டமிழந்தபோது, அவரும் மார்னஸ் லபுஷாங்கும் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்திருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
இலங்கை பந்துவீச்சாளர்களில் தில்ஷான் மதுஷங்க மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்
ரன்களைக் குவித்த ஆஸ்திரேலியா
மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு களம் இறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் மற்றும் மார்னஸ் லபுஷாங் ஆகியோர் சிரமம் இல்லாமல் ரன்களைக் குவித்தனர்.
இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 158-ஆக இருக்கும் போது 40 ரன்கள் குவித்திருந்த மார்னஸ் லபுஷாங்கின் விக்கெட்டை தில்ஷன் மதுஷங்க வீழ்த்தினார்.
லபுஷாங் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலீஷ் இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர்.
இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 34 ரன்களைச் சேர்த்தனர். மேலும் 58 ரன்கள் எடுத்திருந்த போது, ஜோஷ் இங்கிலீஷின் விக்கெட்டை துனித் வெல்லாலகே கைப்பற்றினார்.
இந்நிலையில் 35 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் தில்ஷான் மதுஷங்க மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லஹிரு குமார 4 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்தது இலங்கைக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
டி20 போட்டிகளைப் போல வீழும் மிடில் ஆர்டர்
உலகக் கோப்பை போட்டிகளில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ச்சியடைவது பற்றி சமூக வலைத்தளங்களில் பெருமளவு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. 50 ஓவர் போட்டிகளுக்கு பல வீரர்கள் தயாராக இல்லாததும், அதற்கான உத்திகள் வகுக்கப்படாததும் முக்கிய அம்சமாக இருக்கலாம் என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
“50 ஓவர்கள் பேட்டிங்கில் இன்னிங்ஸ் கட்டமைப்பது ஓர் முக்கியமான அம்சம். டி20 கிரிக்கெட்டுக்கு பழக்கப்பட்ட மிடில் ஆர்டர் வீரர்களுக்கு நிறைய நேரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
