தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ மூலம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பின் மூலம் செயல் வடிவமாக உயிர் கொடுத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15-ந் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், உரிமை தொகை பெறும் 1.06 கோடி பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனித்தனியே வாழ்த்து கடிதம் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இனி மாதம் தோறும் ரூபாய் 1000 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார். மேலும், பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் தாய், சகோதரி, மனைவி, மகள் என பெண்களின் பல மணி நேர உழைப்பு உள்ளது என்றும் அப்படி கணக்கில் கொல்லப்படாத உழைப்பிற்கு அங்கீகாரமே இத்தொகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com
