
பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி இன்று (டிசம்பர் 8ஆம் தேதி) தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தது.
ஐநூறு பக்க அறிக்கையில் மூன்று பரிந்துரைகளை இந்தக் குழு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியுள்ளது. அதில், மஹூவா மொய்த்ரா ஒரு தனிநபரிடம் பணம் மற்றும் பரிசுகளை வாங்கிக்கொண்டு மக்களவை இணையதளத்திற்கான தனது பாஸ்வேர்ட் ஆகியவற்றை வழங்கியிருக்கிறார். அது மக்களவையை அவமதிக்கும் செயல். மேலும், இது தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹூவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாக இருப்பதால் அவர் கடுமையான தண்டனையைக் கோருவதாகவும் அதனால், 17வது மக்களவையின் உறுப்பினர் பதவியில் இருந்து மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசாங்கம் சட்டரீதியாக மஹூவா மொய்த்ராவின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது பரிந்துரையில் நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், ANI
இதுகுறித்துப் பேசியுள்ள மஹூவா மொய்த்ரா முழு விசாரணை நடத்தப்படாமல் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த மத்திய அரசும் இயங்கி வருகிறது. பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரின் உரிமைகளையும் மத்திய அரசு பறிக்கிறது. இந்த நெறிமுறைக் குழு அனைத்து விதிகளையும் மீறியுள்ளது. நாளை, எனது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து என்னைத் துன்புறுத்துவார்கள்,” என மஹூவா மொய்த்ரா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேலும் தனக்கு தற்போது 49 வயதாவதாகவும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் உங்களை எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.
இந்த அறிக்கை மக்களவையில் சமர்பிக்கப்பட்டவுடன், பாஜக எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த அறிக்கையைப் படிப்பதற்குக் கூடுதல் அவகாசம் வேண்டும் என எதிர்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்த அறிக்கை குறித்துப் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நெறிமுறைக் குழுவின் அறிக்கையை மக்களவை ஏற்றுக் கொள்கிறது. மஹூவா மொய்த்ராவின் செயல்பாடுகள் ஒழுக்கக் கேடாகவும் அநாகரீகமாகவும் இருந்துள்ளது. எனவே அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர்வது சரியாக இருக்காது,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
இந்த விவகாரத்தின் முழு பின்னணி என்ன?
ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதியின் பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மௌத்ரா பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதாகக் குற்றம் சாட்டினார்.
துபே, மஹூவா மொய்த்ராவை நாராளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து ‘பணம்’ மற்றும் ‘பரிசுகளைப்’ பெற்றுக்கொண்டே மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டுள்ளதாக கடிதத்தில் எழுதியுள்ளார்.
எனவே இந்த விவகாரம் குறித்து கடந்த நவம்பர் 2ம் தேதி மஹுவா மொய்த்ராவிடம் விசாரனை செய்யப்பட்டது. அந்த விசாரனையின் போது நெறிமுறைக்குழுவின் தலைவர் தன்னிடம் தனிப்பட்ட ரீதியிலான மோசமான கேள்விகளை கேட்டதாகக் கூறி அந்த கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 9ம் தேதி நெறிமுறைக் குழு மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யலாம் என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், Sansad TV
மஹூவா மொய்த்ராவின் பதிலடி
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளுக்கு மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்திருந்தார்.
துபேவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மஹூவா மொய்த்ரா, முதலில் தவறான அறிக்கை தாக்கல் செய்தவர் மீதான விசாரணையை மக்களவை சபாநாயகர் முடித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதினார்.
நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகள்
மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், துபே, மஹூவா மொய்த்ரா மீது சபையை அவமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-A கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரை சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
துபே, தனது கடிதத்தில் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேத்ராயின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, மூத்த தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடமிருந்து ‘பணம்’ மற்றும் ‘பரிசுகளைப்’ பெற்றுக்கொண்டே மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டுள்ளதாக எழுதினார்.
மஹூவா மொய்த்ரா சமீபத்தில் 61 கேள்விகளைக் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மட்டுமே தொடர்புடையவை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் கேள்விகள் அதானி குழுவைப் பற்றி கேட்கப்பட்டவை.
ஹிரானந்தனி குழுமம் அதானி குழுமத்தின் போட்டியாளராகும். பல வணிக ஒப்பந்தங்களில் அதானி குழுமத்துடன் போட்டி போட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI
தர்ஷன் ஹிரானந்தனி யார்?
ஹிரானந்தனி குழுமம் நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், தனது கவனம் வணிகத்தில் மட்டுமே உள்ளது என்றும், அரசியலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஹிரானந்தனி குழுமம், தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் எப்போதும் நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதாகவும், இனியும் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனி, பிரபல ரியல் எஸ்டேட் துறை குழுமமான ஹிரானந்தனி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. இந்தக் குழுமம், அவரது தந்தை நிரஞ்சன் ஹிரானந்தனி மற்றும் அவரது மாமா சுரேந்திர ஹிரானந்தனி ஆகியோரால் நிறுவப்பட்டது.
இந்தக் குழுமம், நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக மற்றும் குடியிருப்புத் திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மஹூவா – நிஷிகாந்த் இடையே இருக்கும் பழைய பகை
மஹூவா மொய்த்ரா தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்த ‘நாகர்வாது’, நிஷிகாந்த் 2023 மார்ச் மாதத்தில் X தளத்தில் பயன்படுத்தியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
உண்மையில், இருவருக்கும் இடையிலான பகைமை பழையது. 2021 ஜூலை 28ஆம் தேதி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், நிஷிகாந்த் துபே, மஹூவா மொய்த்ரா தன்னை ‘பிகாரி குண்டர்’ என்று அழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 2019அஆம் ஆண்டு, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி நிஷிகாந்த் துபே பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் திருடர்களாகவோ, கொள்ளையர்களாகவோ இருந்தாலும்கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஜார்க்கண்டில் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக எவரை நிறுத்தினாலும், அவர் ஊனமுற்றவராக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொள்ளையனாக இருந்தாலும், அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். கட்சியின் மத்திய தலைமையான அமித் ஷா, பிரதமர் மோதி, ரகுபர் தாஸ் ஆகியோரை நாம் நம்பவேண்டும். அவர்கள் எந்த நபரைத் தேர்வு செய்தாலும், அது சரியாகத்தான் இருக்கும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி கேட்க பணம் பெறும் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக ஓர் உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. 2005ஆம் ஆண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போது எந்த உறுப்பினரும் மற்றொரு உறுப்பினரை எதிர்த்து நேரடியாக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.
கடந்த 2005ஆம் ஆண்டு, செய்தி இணையதளமான கோப்ரா போஸ்ட் மற்றும் ஒரு தனியார் செய்தி சேனல் ஒரு ரகசிய ஆய்வு நடத்தி, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம்ப் பெறப்படுவதை வெளிப்படுத்தினர்.
இந்த ரகசிய ஆய்வு 2005 டிசம்பர் 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய 11 உறுப்பினர்களை இது காட்டியது. இந்த 11 உறுப்பினர்களில் 6 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். மூவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் ஒருவர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.
கேள்வி கேட்க பணம் பெற்ற 10 உறுப்பினர்களை நாடாளுமன்றம் நீக்கியது. இவர்களில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவையைச் சேர்ந்தவர். அவரும் நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் வெளிவந்தபோது, அனைத்து கட்சிகளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரின. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, இது ‘கங்காரு நீதிமன்றத்தின்’ முடிவு என்று கூறி பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்