இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல் – பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்?

இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல் - பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், REUTERS/AMIR COHEN

இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது.

அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது.

டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்” என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது.

கெடு தாண்டியதும் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ்

அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Atef Safadi/EPA-EFE/REX/Shutterstock

காசாவில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்

அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

இருதரப்பிலும் பலி 2,000ஐ நெருங்குகிறது

அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட இத்தூதரகம், 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

பாலத்தீனர்களுக்கு பாதையை மூடிய எகிப்து

இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

இஸ்ரேலிய பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்-?

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று நேற்று இரவு ஹமாஸ் அமைப்பு மிரட்டியது. சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

“எதிரி நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எங்களைத் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த கோப்பு போர் முடிவதற்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

மேலும், “மற்றும் அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் மட்டுமே இருக்கும்.” என்றார். இஸ்ரேல் சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 100 முதல் 150 பேர் வரை ஹமாஸ் வசம் உள்ளதாக மதிப்பிடுகிறது.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், twitter

பணயக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேச்சுவார்த்தையா?

இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு குடிமக்கள் 30 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய ஜிஹாத் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

இஸ்ரேலுக்கு மேலும் ஒரு முனையில் போர் அபாயம்

ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது.

ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும்.

இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து “ஆழமாகக் கவனித்து வருவதாகவும்” அந்த அமைப்பு கூறியுள்ளது.

தற்போதைய தாக்குதல்கள் “பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது” என்று அதன் அறிக்கை கூறுகிறது.

ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை.

ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர். மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர்.

இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது – தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது.

காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள்

  • ஆகஸ்ட் 2005 – மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.
  • ஜன. 25, 2006 – பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.
  • ஜூன் 14, 2007 – மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.
  • டிசம்பர் 27, 2008 – தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
  • நவம்பர் 14, 2012 – ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.
  • ஜூலை-ஆகஸ்ட் 2014 – மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
  • மார்ச் 2018 – பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
  • மே 2021 – ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
  • ஆகஸ்ட் 2022 – மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.
  • ஜனவரி 2023 – இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
  • அக்டோபர் 2023 – தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.
Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *