
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது.
யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் ‘சியோனிசம்’ தோன்றியது.
ஹீப்ரூ விவிலியத்தில், சியோன் என்ற சொல் ஜெருசலேமை குறிக்கிறது, மேலும் ‘சியோனிசம்’ முதன்மையாக இஸ்ரேலை ஆதரிப்பதாகும்.
சையனிசம் Vs சையனிச எதிர்ப்பு
தற்போது, ஒரு யூத அரசாக இருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் ‘சியோனிஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு மதத்தைச் சேர்ந்த எந்த நபரும் இந்த கருத்தில் நம்பிக்கை கொண்டாலும், அவரும் ஒரு ‘சியோனிஸ்ட்’ ஆவார்.
மறுபுறம், இஸ்ரேலிய அரசுக்கு எதிராக இருப்பவர்கள் ‘சியோனிச எதிர்ப்பாளர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் இஸ்ரேலின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அங்குள்ள அரசின் கொள்கைகளை விமர்சிக்கிறார்கள்.
‘சியோனிச எதிர்ப்பு’ சில நேரங்களில் யூத விரோதமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேலின் தேசியவாதத்தை ஆதரிப்பவர்கள் இப்படித்தான் அதை பார்க்கிறார்கள். யூத வெறுப்பை பரப்புவது யூத விரோதம் எனப்படுகிறது.
‘யூத விரோதம்’ என்பது யூதர்களுக்கு எதிரான நேரடி எதிர்ப்பு ஆகும், ‘சியோனிச எதிர்ப்பாளி’ என்பது இஸ்ரேலிய அரசுக்கு எதிரான எதிர்ப்பாகும். ‘சியோனிச’ இயக்கம் யூத விரோதத்தின் பின்னணியில் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
யூதர்களின் ஒரு பிரிவினர் ஏன் இஸ்ரேலுக்கு எதிராக உள்ளனர்?
இஸ்ரேலிய அரசு தனக்கு எதிரான விமர்சகர்களை ‘யூத விரோதிகள்’ என்று சித்தரிக்க விரும்புவதாக பலர் நம்புகின்றனர். ஒரு தேசத்தின் யோசனைக்கு எதிர்ப்பும் யூத மதத்தின் மீதான வெறுப்பும் ஒன்றல்ல என அவர்கள் கருதுகின்றனர்.
‘சியோனிசம்’ அல்லது யூத தேசியம் என்ற கருத்தியலில் நம்பிக்கை கொண்ட யூதர்களும் இவர்களில் உள்ளனர், அவர்கள் அரசின் தலையீட்டுக் கொள்கையை விரும்புவதில்லை.
யூதர்களிடையே இஸ்ரேலை எதிர்க்கும் பலர் உள்ளனர். இடதுசாரிகள் தவிர, அடிப்படைவாத யூத சித்தாந்தவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே நடந்து வரும் போரின் பின்னணியில், அக்டோபர் 18 ஆம் தேதி, ஏராளமான யூதர்கள் அமெரிக்காவின் நாடாளுமன்றத்துக்கு முன்பு பாலத்தீனியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு, தங்கள் கைகளில் பாலத்தீனிய கொடிகளை ஏந்திய சிலர், காஸாவில் இஸ்ரேல் கூட்டு படுகொலைகளை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர். அன்று அமெரிக்க காவல் துறை அங்கு குறைந்தது 300 பேரை கைது செய்தது.
அந்த இயக்கத்தை ‘அமைதிக்கான யூத குரல்’ என்ற ‘சியோனிச எதிர்ப்பு’ அமைப்பு வழிநடத்தியது. பாலத்தீனிய மக்களுக்கு ‘சியோனிசம்’ தீங்கு விளைவித்ததற்கு எதிராக அவர்கள் உள்ளனர். ‘சியோனிசம்’ உண்மையில் யூதர்களிடையே வெறுப்பு மற்றும் எதிர்ப்பை உருவாக்குகிறது என்று அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சியோனிசத்தின்’ எதிர்ப்பாளர்கள் வன்முறை, வெறுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக உள்ளனர். மேலும் அவர்கள் பாலத்தீனிய நிலப்பகுதியை இஸ்ரேலிய அரசு ஆக்கிரமித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.
‘சியோனிசம்’ என்ற கருத்தியல் இஸ்ரேலை விமர்சிப்பவர்கள் ‘யூத விரோதிகள்’ போல் தோன்றச் செய்யும் சூழலை உருவாக்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், யூதர்களிடையே இஸ்ரேலுக்கு அதிக ஆதரவு உள்ளது.
இடதுசாரிகள் தவிர, மிகவும் அடிப்படைவாத யூதர்களும் இஸ்ரேல் அரசின் கருத்தியலுக்கு உடன்படவில்லை. குறிப்பாக யூத மதத்தின் பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் கண்டிப்பாக பின்பற்றும் ‘ஹரெடி குழுக்கள்’ இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டம்
அடிப்படைவாத யூதர்களின் ஒரு பிரிவினர் சமூக நவீனத்துவத்தை ஓரளவு ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அடிப்படைவாத யூதர்கள் இன்னும் தங்கள் பண்டைய மதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
நெட்யூரி கார்ட்டா என்பது மிகவும் தீவிரமான மற்றும் சியோனிச எதிர்ப்பு அமைப்பு. 1938 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அமெரிக்காவில் மிகவும் வலிமையானது. இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலிலும் செயல்படுகிறது.
இந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும்போது, இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராகவும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாகவும் தினமும் போராட்டம் நடத்தி வருகிறது.
அவர்கள் கைகளில் பாலத்தீனிய கொடிகள் இருக்கின்றன, மேலும் சிவப்பு மை கொண்டு கிறுக்கப்பட்ட இஸ்ரேலிய கொடியின் படம் உள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி நியூயார்க் நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அவர்களின் ரபிகளில் ஒருவர் (புரோகிதர்கள்) உரையாற்றுவதை பார்க்க முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனில் யூதர்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்ததாக இஸ்ரேலிய ரபி டேவிட் வைஸ் கூறுகிறார். இதற்கு சியோனிசம் ஒரு தடையாக உருவெடுத்துள்ளது என்கிறார் அவர்.
சியோனிஸ்டுகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக யூத மதத்தை தவறாகப் பயன்படுத்தி, வெறுப்பை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிபிசியுடன் அவர் பேசும் போது, யூத மதம் பற்றி அவர் விளக்கினார்.
“நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டோம். யூத அரசை மீண்டும் உருவாக்கவோ அல்லது இறையாண்மையைப் பெறவோ எங்களுக்கு அனுமதி இல்லை என்று எங்கள் படைப்பாளர், கிங் சாலமன் தீர்க்கதரிசனத்தின் மூலம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்,” என்றார் அவர்.
“புனித நிலத்திற்கு (ஜெருசலேம்) நாங்கள் பெருமளவில் திரும்பி வருவது தடைசெய்யப்பட்டுள்ளது, நாங்கள் வாழும் நாட்டின் உண்மையான குடிமக்களாக இருக்க வேண்டும்.” என்கிறார்.

பட மூலாதாரம், NETUREI KARTA
நாடுகடத்தப்பட்ட யூதர்கள்
ரபி வெய்ஸ், தனது வேதமான தோராவில் , யூதர்கள் நாடுகடத்தலில் இருந்து திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.
“மெசைய்யாவின் வருகையுடன், யூதர்கள் தங்கள் நாடு மற்றும் அரசாட்சிக்கு திரும்புவார்கள். அதே மெசைய்யா அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பார், கடவுள் அவர்களின் இல்லத்தை நிறுவுவார்.”
கேம்பிரிட்ஜ் அகராதிப்படி, மெசைய்யா என்பது கடவுளால் அனுப்பப்பட்ட யூத அரசனைக் குறிக்கிறது.
மறுபுறம், கிறிஸ்தவர்களுக்கு, மெசைய்யா இயேசு கிறிஸ்து, முஸ்லிம்களுக்கு, அவர் நபி இஷா என்று அழைக்கப்படுகிறார்.
தீவிர சியோனிச எதிர்ப்பு யூதர்கள், மெசைய்யா வருவதற்கு முன் அவர்களின் தேசத்தை நிறுவுவதற்கான அவசியம் இல்லை என்று வாதிடுகின்றனர். யூத மதம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதையோ ரத்தம் சிந்துவதையோ ஒருபோதும் ஆதரிப்பதில்லை.
வெய்ஸின் பேச்சுக்களில் கூட்டுவாழ்வு மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சியோனிசத்தால் ஜனநாயகம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். இது ஒரு அரசியல் நிலைப்பாடு, மதம் அல்ல என்கிறார்.
எவ்வாறாயினும், இந்த கொள்கை பெரும்பாலான யூதர்களால் சாதகமாக பார்க்கப்படுவதில்லை.
யூதர்களும் சியோனிச எதிர்ப்பாளர்களாக இருக்க முடியும் என்று சிலரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
ஸ்காட்டிஷ் யூத சமூகத்தின் பிரதிநிதியும், கார்னெட் ஹோலி சினகாக் (பிரார்த்தனைக் கூடம்) தலைவருமான சுசன் செகால் பிபிசியிடம் பேசுபோது, அவர் இன்னும் ஒரு சியோனிச எதிர்ப்பு யூதரைக் கண்டதில்லை என்றும், பொதுவாக யூதர்கள் இஸ்ரேலை நம்புகிறார்கள் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஹூப்ரூ மொழியின் நவீனமயமாக்கல்
இந்தத் தீவிரமான யூதர்கள் பொது நீரோட்டத்திலிருந்து தனித்து நிற்கிறார்கள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மதத்தைப் பின்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
இஸ்ரேலில் உள்ள இத்தகைய சமூகங்களின் மக்கள் அங்குள்ள சமூக அமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் மதத்தின் அடிப்படையிலான கல்வி முறையைப் பின்பற்றுகிறார்கள், நவீன வாழ்க்கை முறையின் சடங்குகளைத் தவிர்க்கிறார்கள்.
ரபி வெய்ஸ், “இந்த மக்களால் யூத மதத்தில் தற்போதுள்ள மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.
“யூதர்களின் கல்வி முறை மற்றும் உடையில் மதத்தின் எந்த அடையாளமும் இல்லை. அவர்களின் ஹூப்ரூ மொழியும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில்1400 பேரின் மரணமும் இதன் விளைவே” என்றார்.
“தாக்குதலை நிறுத்துவதுதான் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி.”
அவரது நிலைப்பாட்டை யூத விரோதம் என்று மற்றவர்கள் அழைக்கின்றனர்.
அதற்கு மாறாக, வெயிஸ், “உண்மையில் சையனிசமே யூத விரோதம்” என்று நம்புகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்