பட மூலாதாரம், ANI
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் தொடர்ந்து ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதியின் பா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மௌத்ரா பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
துபே, மஹூவா மொய்த்ராவை நாராளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து ‘பணம்’ மற்றும் ‘பரிசுகளைப்’ பெற்றுக்கொண்டே மஹூவா மௌத்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டுள்ளதாக கடிதத்தில் எழுதியுள்ளார்.
மஹூவா மொய்த்ராவின் பதிலடி
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளுக்கு மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
துபேவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மஹூவா மொய்த்ரா, முதலில் தவறான அறிக்கை தாக்கல் செய்தவர் மீதான விசாரணையை மக்களவை சபாநாயகர் முடித்துவிட்டு, பின்னர் தனக்கு எதிராக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ளார்.

நிஷிகாந்த் துபேயின் குற்றச்சாட்டுகள்
மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், துபே, மஹூவா மொய்த்ரா மீது சபையை அவமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-A கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவரை சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
துபே, தனது கடிதத்தில் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேத்ராயின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, மூத்த தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடமிருந்து ‘பணம்’ மற்றும் ‘பரிசுகளைப்’ பெற்றுக்கொண்டே மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டுள்ளதாக எழுதியுள்ளார்.
மஹூவா மொய்த்ரா சமீபத்தில் 61 கேள்விகளைக் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மட்டுமே தொடர்புடையவை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் கேள்விகள் அதானி குழுவைப் பற்றி கேட்கப்பட்டவை.
ஹிரானந்தனி குழுமம் அதானி குழுமத்தின் போட்டியாளராகும். பல வணிக ஒப்பந்தங்களில் அதானி குழுமத்துடன் போட்டி போட்டுள்ளது.
தர்ஷன் ஹிரானந்தனி யார்?
பட மூலாதாரம், Getty Images
ஹிரானந்தனி குழுமம் நிஷிகாந்த் துபேவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், தனது கவனம் வணிகத்தில் மட்டுமே உள்ளது என்றும், அரசியலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஹிரானந்தனி குழுமம், தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் எப்போதும் நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளதாகவும், இனியும் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனி, பிரபல ரியல் எஸ்டேட் துறை குழுமமான ஹிரானந்தனி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. இந்தக் குழுமம், அவரது தந்தை நிரஞ்சன் ஹிரானந்தனி மற்றும் அவரது மாமா சுரேந்திர ஹிரானந்தனி ஆகியோரால் நிறுவப்பட்டது.
இந்தக் குழுமம், நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக மற்றும் குடியிருப்புத் திட்டங்களையும் உருவாக்கி வருகிறது.
துபேவுக்கும் மொய்த்ராவுக்கும் இடையில் தொடர் மோதல்கள்
பட மூலாதாரம், NISHIKANT DUBEY
இந்த ஆண்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிஷிகாந்த் துபே மற்றும் மஹூவா மொய்த்ரா இடையே மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை முடிவுக்குக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் வலுவான கோரிக்கையை நிஷிகாந்த் துபே முன்வைத்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியும் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி இதைக் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து, மஹூவா மொய்த்ராவும் மக்களவை செயலகத்திடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
மஹூவா மொய்த்ரா, இந்த விவகாரத்தில் நிஷிகாந்த் துபேவை குறிவைத்து X தளத்தில் பதிவு செய்துள்ளார், “மனுவில் பொய் கூறி, போலியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஒரு குற்றம். இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதிகளா என்பதையும் பார்க்க காத்திருப்போம்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், நிஷிகாந்த் துபே தனது வயது மற்றும் பட்டம் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளதாக மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
நிஷிகாந்த் துபேவின் மனுவைக் குறிப்பிட்டு, “ஆவணங்களின்படி, நிஷிகாந்த் துபே 10 வயதில் SSLC தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் ஒரு மேதாவி. நாம் அனைவரும் பாவம், நகரவாசிகள். அவரது அதிசயங்களைப் பார்க்க மட்டுமே முடியும்,” என்று அவர் ஒரு ட்வீட்டில் எழுதியுள்ளார்.
நிஷிகாந்த் துபே எப்படி எம்.பி.யாக இருந்தபோது பிரதாப் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மஹூவா மௌத்ரா வலியுறுத்தியுள்ளார். இதற்காக, அவரது வருகை பல்கலைக்கழக பதிவேட்டிலும் நாடாளுமன்ற பதிவேட்டிலும் சரிபார்க்கப்பட வேண்டும் என்றார்.
அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வந்துள்ளதாக நிஷிகாந்த் துபே கூறினார்.
வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள வயதையே தேர்தல் மனுவில் குறிப்பிட வேண்டும் என்று நிஷிகாந்த் துபே கூறினார்.
பழைய பகை
மஹூவா மொய்த்ரா தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்த ‘நாகர்வாது’, நிஷிகாந்த் 2023 மார்ச் மாதத்தில் X தளத்தில் பயன்படுத்தியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
உண்மையில், இருவருக்கும் இடையிலான பகைமை பழையது. 2021 ஜூலை 28ஆம் தேதி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், நிஷிகாந்த் துபே, மஹூவா மொய்த்ரா தன்னை ‘பிகாரி குண்டர்’ என்று அழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த 2019அஆம் ஆண்டு, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி நிஷிகாந்த் துபே பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் திருடர்களாகவோ, கொள்ளையர்களாகவோ இருந்தாலும்கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஜார்க்கண்டில் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக எவரை நிறுத்தினாலும், அவர் ஊனமுற்றவராக இருந்தாலும், திருடனாக இருந்தாலும், கொள்ளையனாக இருந்தாலும், அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். கட்சியின் மத்திய தலைமையான அமித் ஷா, பிரதமர் மோதி, ரகுபர் தாஸ் ஆகியோரை நாம் நம்பவேண்டும். அவர்கள் எந்த நபரைத் தேர்வு செய்தாலும், அது சரியாகத்தான் இருக்கும்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
சோனியா, ராகுலை கிண்டல் செய்த துபே
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றத்தில் மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தின்போது, நிஷிகாந்த் துபே ராகுல் காந்தியை கிண்டல் செய்து, “நீங்கள் வாழ்நாளில் ஒருபோதும் சாவர்க்கராக இருக்க முடியாது. அந்த மனிதர் 28 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். ஒருபோதும் சாவர்க்கராக இருக்க முடியாது,” என்றார்.
அப்போது அங்கிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் துபே கிண்டல் செய்திருந்தார்.
“நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் வந்தது?” என்று அவர் கேட்டிருந்தார். “சோனியா ஜி இங்கே அமர்ந்திருக்கிறார். நான் சோனியா ஜியை மிகவும் மதிக்கிறேன். ஐயா, அவரது கட்சிக்கும் அவருக்கும் இரண்டு மனநிலைகள் உள்ளன. இந்தியப் பெண் செய்ய வேண்டியதை அவர் முழுமையாகப் பின்பற்றி வருகிறார். மகனை தயார் செய்து மருமகனுக்குப் பரிசளிக்க வேண்டும்,” என்றார்.
காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் விட்டு வைக்கவில்லை
நாடாளுமன்றத்தின் 2022ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத்தின்போது, நிஷிகாந்த் துபே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை குறிவைத்துப் பேசியிருந்தார். தனது தாய்வழி தாத்தா ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் என்றும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் துபே கூறியிருந்தார்.
“கார்கே அவர்களுடைய கட்சி அனைவரையும் நாயாகக் கருதுகிறது. என் தாய்வழி தாத்தா கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எதுவும் தெரியாதவர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். இன்று வரை காங்கிரஸ் அனைவரையும் நாயாக நடத்தியுள்ளது,” என்று துபே கூறியிருந்தார்.
அப்போது கார்கேவை கேலி செய்த அவர், “சுதந்திரப் போராட்டத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவினரின் வீட்டைச் சேர்ந்த ஒரு நாய் கூட இறக்கவில்லை,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டானிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி. ரமேஷ் விதுரி அவதூறாகப் பேசிய சர்ச்சை குறித்து அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
டானிஷ் அலி ஏற்கெனவே தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக துபே கூறியிருந்தார். “நீங்கள் அருவருப்பானதை அருவருப்பானது என்று அழைக்கவில்லை என்றால், வேறென்ன சொல்வீர்கள்?” என்று டானிஷ் அலி பேசியதாக அவர் கூறினார்.
விவாதத்தின் போது பல்வேறு உறுப்பினர்களின் கருத்துகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியிருந்தார்.
கேள்வி கேட்க பணம் பெறும் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக ஓர் உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. 2005ஆம் ஆண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போது எந்த உறுப்பினரும் மற்றொரு உறுப்பினரை எதிர்த்து நேரடியாக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை.
கடந்த 2005ஆம் ஆண்டு, செய்தி இணையதளமான கோப்ரா போஸ்ட் மற்றும் ஒரு தனியார் செய்தி சேனல் ஒரு ரகசிய ஆய்வு நடத்தி, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம்ப் பெறப்படுவதை வெளிப்படுத்தினர்.
இந்த ரகசிய ஆய்வு 2005 டிசம்பர் 12ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய 11 உறுப்பினர்களை இது காட்டியது. இந்த 11 உறுப்பினர்களில் 6 பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். மூவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்தும் காங்கிரஸில் இருந்தும் ஒருவர் இந்தப் பட்டியலில் இருந்தனர்.
கேள்வி கேட்க பணம் பெற்ற 10 உறுப்பினர்களை நாடாளுமன்றம் நீக்கியது. இவர்களில் ஒரு உறுப்பினர் மாநிலங்களவையைச் சேர்ந்தவர். அவரும் நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் வெளிவந்தபோது, அனைத்து கட்சிகளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரின. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, இது ‘கங்காரு நீதிமன்றத்தின்’ முடிவு என்று கூறி பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்தது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
