சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர் காரணமாக தள்ளிப்போன தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று காலையிலேயே தொடங்கியது. `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை, தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, கட்சிக் கொடி ஏற்றி தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், `ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்’, `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’, `பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும்’ உட்பட 25 தீர்மானங்களை உதயநிதி முன்மொழிந்தார்.

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இறுதியாகப் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “இளைஞர்களால் உருவான போர் கருவிதான் இந்த ஸ்டாலின். ஒரு சீர்திருத்த இயக்கத்தின் கையில் ஆட்சி வருமானால், என்னென்ன செய்ய முடியுமோ அவையனைத்தையும் செய்து காட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டின் வளத்துக்கும், நலத்துக்கும் காரணமானவர்கள் நாம். அதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.
நாம் பெயர் சூட்டிய நம் தமிழ் நிலத்துக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. மொழியை அழித்து, தமிழ் பண்பாட்டை அழித்து மாநில மதிப்பை அழித்து, அதன் மூலம் தமிழ் இனத்தை அழித்து நம்மை அடையாளமற்றவர்களாக மாற்ற பாசிச பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பத்தாண்டு காலம், தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி அ.தி.மு.க. மக்கள் அதை மறந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இப்போது அ.தி.மு.க ஆடுகின்ற உள்ளே வெளியே ஆட்டம், பா.ஜ.க போட்டுக் கொடுத்த நாடகம். பழனிசாமியின் பகல் வேஷத்தை அ.தி.மு.க தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை. பா.ஜ.க, அ.தி.மு.க-வின் படுபாதக செயல்களைத் தடுப்பது நம் முக்கிய கடமை. மாநில சுயாட்சி கோரிக்கையைப் பொறுத்த அளவில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பது தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை. மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைபாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாக்க எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவை மட்டும் ஒன்றிய அரசிடம் இருந்தால் போதும்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாறப்போகிறது. அமைய இருக்கின்ற இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை வழங்குகிற சிறப்பான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தரக்கூடிய முயற்சியில் கவனம் செலுத்தும். தி.மு.க அரசை மட்டும் மனதில் வைத்து சொல்லவில்லை. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்றுதான் எல்லா மாநிலங்களுக்குமான உரிமையை நாங்கள் கேட்கிறோம்.

இன்றைக்கு பிரதமராக இருப்பவர், ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்தவர் தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக்கட்டுகின்ற வேலையைத்தான், வந்த நாள் முதல் பிரதமர் மோடி செய்து கொண்டிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என மாநில அரசின் கல்வி, நிதி அதிகாரத்தை மொத்தமாகப் பறித்து விட்டார்கள். ஒன்றிய அரசுக்குப் பணம் தருகின்ற ஏடிஎம்-ஆக மாநிலங்களை மாற்றி விட்டார்கள். இயற்கை பேரிடர் காலத்தில்கூட நமக்கு உதவி செய்வதில்லை. திருக்குறள் சொன்னால்போதும், பொங்கலைக் கொண்டாடினால்போதும், அயோத்தியில் கோயிலைக் கட்டினால் போதும், தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால், இது பெரியார் மண்…

இரண்டு முறை மோடி பிரதமரான போதும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த முறையும் வாக்களிக்கப் போவதில்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவும் செயல்படப் போகிறது. பா.ஜ.க-வுக்கு வேட்டுவைக்க யாரும் வேண்டாம், ஆளுநர்களே போதும். நாம் அமைக்கவிருக்கக்கூடிய இந்தியா கூட்டணி ஆட்சி, சர்வாதிகார ஆட்சியாக இருக்காது, கூட்டாட்சியாக இருக்கும். நாற்பதும் நமதே நாடும் நமதே என நாளை முதல் புறப்படுங்கள். நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
