நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த்.

நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த், கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்தவர்.
நன்றி
Publisher: www.vikatan.com
