தே.மு.தி.க கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை 6 மணியளவில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் கொடி அடுத்த 15 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், துக்கம் அனுசரிக்கப்படுமென அறிவித்திருக்கிறது தே.மு.தி.க. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் மருத்துவமனையிலிருந்து அவருடைய சாலிகிராமம் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டபோது, முதல் ஆளாக மரியாதை செலுத்தியவர் முதல்வர் ஸ்டாலின்தான். அப்போதே, “உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்” என விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டிருக்கிறார் முதல்வர். ஆனால், விஜயகாந்த் குடும்பம் கேட்காமலே பல விஷயங்களை அரசுத் தரப்பிலிருந்து முதல்வர் செய்து கொடுத்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த சீனியர் அதிகாரிகள்.

நம்மிடம் பேசிய சென்னை பெருநகர காவல்துறை சீனியர் அதிகாரிகள் சிலர், “வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றன. அதற்காக, தனியொரு விழாவை எடுக்க தீர்மானித்தார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 28-ம் தேதி, “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா’வை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்திட, தமிழக அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறப்பு விருந்தினராக கேரள முதல்வர் பினராயி விஜயனையும் அழைத்திருந்தனர். அன்றைய தினம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் திடீரென மறைந்துவிட்டதால், அந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் முதல்வர். பெரியார் திடலில், எளிமையான முறையில் அந்த விழா நடைபெற்றது. விஜயகாந்தின் மறைவையொட்டி, விழாவில் முதல்வர் பேருரையாற்றவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com
