பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேசத்தின் அலிகர் நகரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உள்ள நகராட்சி வாரியம் அமைப்பு, அந்நகரின் பெயரை ‘ஹரிகர்’ என மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தத் திட்டம் தற்போது மாநில அரசின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னும் உத்தர பிரதேச மாநில அரசு இஸ்லாமிய பெயர்கள் கொண்ட பல நகரங்களின் பெயர்களை மாற்றியுள்ளது.
இந்த மாற்றத்திற்கான தீர்மானம் நகராட்சி வாரியத்தின் பா.ஜ.க உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது என்றும், அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் ஆளும் பா.ஜ.க.வின் மேயரான பிரசாந்த் சிங்கால் தெரிவித்தார்.
‘அலிகர்’ என்ற பெயரை ‘ஹரிகர்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்கிறார் சிங்கால். அவர் மேலும் கூறுகையில், “நமது பழைய நாகரிகம் மற்றும் கலாசாரம், நமது பாரம்பரியமான இந்து மதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பெயரை மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
விரைவில் இந்த நகரம் ‘ஹரிகர்’ என்று அழைக்கப்படும் என்று பிரசாந்த் சிங்கால் நம்பிக்கை தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘ஹரி ஒரு வரலாற்றுப் பெயர்’
அலிகர் என்ற பெயரை ஹரிகர் என்று மாற்ற வேண்டும் என பா.ஜ.க தலைவர் நீரஜ் சர்மா நீண்ட நாட்களாக பிரசாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றத்திற்கான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட்ட சர்மா, ஹரி ஒரு வரலாற்றுப் பெயர் என்று கூறினார். இந்தப் பெயர் இந்த இடத்தின் நாகரிகம், கலாசாரம் மற்றும் இந்து மரபுகளுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய நீரஜ் ஷர்மா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1920இல் தான் நிறுவப்பட்டது. ஆனால், அதற்கு முன்பும் இந்த நகரம் இருந்தது என்றார்.
“அதற்கு முன் ஹரிகர் அதன் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சார்ந்து இருந்தது. ஹரியின் குழந்தைகளுக்கு ஹரிகர் கிடைக்காவிட்டால், சௌதி அரேபியாவின் குழந்தைகளுக்கு இது கிடைக்குமா, கஜகஸ்தானுக்கு கிடைக்குமா, அல்லது பாகிஸ்தானுக்கு கிடைக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
‘மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான சதி’
அலிகர் நகரைச் சேர்ந்த ஹைதர் கான் என்ற இளைஞர், நகராட்சி வாரியத்தின் இந்தத் திட்டத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அலிகர் நகருக்கு ஹரிகர் என்று பெயர் வைப்பதை தான் விரும்பவில்லை என்றும், அந்த நகரம் உருவானதில் இருந்தே அலிகர் என்றுதான் அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
“பெயரை மாற்றினால் பிரச்னைகள் தீரும் என்றால் அதைச் செய்யுங்கள். முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரும் இதுபோல பெயர் மாற்றத்தில் ஈடுபட்டதால் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவர்களின் வழியைப் பின்பற்றுகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.
அலிகர் முஸ்லிம் வாரியத்தின் உறுப்பினரும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவருமான முஷாரப் ஹுசைன் மெஹ்சார், எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் பா.ஜ.க உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மோசடியாக நிறைவேற்றியுள்ளனர் என்றார்.
“இது பா.ஜ.க. தனது கொள்கையை வலிந்து திணிப்பதன் ஒரு பகுதி. கடந்த 15 ஆண்டுகளாக அலிகரின் பெயரை மாற்ற அவர்கள் முயன்று வருகின்றனர். நகராட்சி வாரியத்தில் எங்கள் கட்சி இருக்கும் வரை, அலிகர் என்ற பெயர் மாற்றப்படாது,” என்றார்.
அலிகர் நகரத்தின் மூத்த குடியிருப்புவாசியும் முன்னாள் நகராட்சி உறுப்பினரான முசாபர் சயீத், பெயரை மாற்றும் திட்டத்தை ஒரு சதி என்று கூறினார்.
“அலிகரை ஹரிகர் என்று மாற்றினால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா? இதனால் யாருக்காவது பலன் கிடைக்குமா? இது 2024 தேர்தலுக்கு முன் மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான சதி,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், மத்தியப் பல்கலைக்கழகமாக இருந்தாலும், சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை அனுபவித்து வந்தது.
அலிகாருக்கு முன் பெயர் மாற்றப்பட்ட நகரங்கள்
அலிகரின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரையை உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசு ஏற்றுக்கொண்டால், அது ‘ஹரிகர்’ என்று அழைக்கப்படும்.
இதற்கு முன் முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்றும், ‘முகல்சராய்’ என்ற பெயரை தீன்தயாள் உபாத்யாய் நகர் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தி என்றும் மாற்றினார்.
இன்னும் பல நகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மாற்றப் பரிந்துரைகள் உள்ளன. பல மாநிலங்களிலும் இஸ்லாமிய இடப் பெயர்களை மாற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.
சமீபத்தில், ஹரியானாவில் சில கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட்டன. மகாராஷ்டிராவில், ஔரங்கசீப்பின் பெயரில் அழைக்கப்பட்ட அவுரங்காபாத், சத்ரபதி சம்பாஜி என்றும், உஸ்மானாபாத், ‘தாரா ஷிவ்’ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லியில் இருந்த ஔரங்கசீப் சாலையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் பெயரை நகரங்கள், ஊர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சூட்ட முடியாது என்பதுதான் பெயரை மாற்றுவதன் பின்னணியில் உள்ள பா.ஜ.க.வின் தர்க்கம்.
பா.ஜ.க.வின் கருத்துப்படி, இந்தியாவில் கடந்த கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரும் அந்நிய படையெடுப்பாளர்கள். எனவே, அவர்களின் பெயரை நகரங்களுக்கு வைப்பது அடிமைத்தனத்தின் சின்னமாகும்.
பட மூலாதாரம், Getty Images
யோகி ஆதித்யநாத்தால் பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றப்பட்ட அலகாபாத் நகரம்
அலிகர் பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம்
மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகர் நகரம், அதன் பூட்டு உற்பத்தித் தொழில் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்காகப் பிரபலமானது.
காலப்போக்கில் பூட்டுத் தொழில் பலவீனமடைந்தது. ஆனால் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேறியது. இது ஒரு மத்திய பல்கலைக்கழகம், அதாவது, அதற்கான நிதி மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் அலிகர் நகரின் பெயரால் அழைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்நகரத்தின் பெயரை ‘ஹரிகர்’ என்று மாற்றினால், இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய பெயர் அப்படியே இருக்குமா அல்லது அதுவும் மாறுமா என்று சொல்வது கடினம்.
அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற முஸ்லீம் சமூக சீர்திருத்தவாதி சர் சையத் அகமது கானால் நிறுவப்பட்டது.
இந்தியாவில் 1857ஆம் ஆண்டின் சிப்பாய் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் முழுமையான ஆட்சி ஏற்பட்டது. ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை தூக்கிலிட்டது. மேலும் அவர்களின் தோட்டங்கள் போன்ற சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்காலத்தில் நவீன கல்வி முறையை முஸ்லிம்கள் எதிர்த்தனர். சர் சையத் அகமது கான், நவீன கல்வியை நோக்கி முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், இஸ்லாத்தின் பகுத்தறிவு பார்வையை ஊக்குவிக்கவும் ஒரு இயக்கத்தை நடத்தினார்.
இந்த இயக்கத்தின் கீழ், அவர் 1875இல் அலிகரில் உள்ள ஆங்கிலோ முகமதியன் ஓரியண்டல் கல்லூரியை மேல்தட்டு முஸ்லிம்களின் நவீன கல்விக்காகத் திறந்தார். அதன் பின்னர் அது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாறியது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியது. ஏகாதிபத்திய காலத்தில் இது தேசியவாத அரசியலின் மையமாக இருந்தது, மறுபுறம் கம்யூனிச அணுகுமுறையையும் ஊக்குவித்தது. இந்தப் பல்கலைக்கழகம் முற்போக்கு சிந்தனையின் மையமாகவும் இருந்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘தனி பாகிஸ்தான்’ இயக்கம் நாட்டில் வேகமெடுத்தபோது, இந்தப் பல்கலைக்கழகம் அதில் முக்கியப் பங்காற்றியது
இஸ்லாமிய கலாசாரத்தின் முக்கிய நகரம்
சுதந்திரப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில், ‘தனி பாகிஸ்தான்’ இயக்கம் நாட்டில் வேகமெடுத்தபோது, இந்தப் பல்கலைக்கழகம் அதில் முக்கியப் பங்காற்றியது. அந்த இயக்கத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் இங்கு கல்வி கற்றவர்கள்.
முஸ்லிம் பல்கலைக்கழகம், மத்தியப் பல்கலைக்கழகமாக இருந்தாலும், சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை அனுபவித்து, அதன் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் கல்விப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் தன்னாட்சியை அனுபவித்து வந்தது
ஆனால், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு அந்தஸ்து மாற்றப்பட்டு, மற்ற மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அலிகர் நகரத்தின் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் உத்தர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்நகரத்தின் பெயர் ‘கோல்’ அல்லது ‘கோலி’ என்று கூறுகிறது. மேலும், அது தற்போதைய அலிகர் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
அந்த இணையதளத்தின்படி, அலிகர் நகரம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் இது மேற்கு உத்தர பிரதேசத்தின் முக்கியமான நகரமாக உருவானது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் அலிகர் நகரம், கடந்த நூற்றாண்டில் இருந்து இஸ்லாமிய அரசியல், கலாசாரம் மற்றும் உளவியலின் முக்கிய மையமாக இருந்து வந்துள்ளது. சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவின் மத அரசியலுக்கு இந்நகரம் பலியாவதற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
